தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட திமுக அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாரதிய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்..
நீட்தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் அளிக்கவில்லை என குற்றம்சாட்டினர். ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அண்ணாமலை, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு ஏற்பட்ட நிலையைப் போலவே தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஏற்படும் என்று கூறினார்.
திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன், நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிசம்பர் 31ம் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால் ஜனவரி1ம் தேதி பாதயாத்திரை துவங்கி டிசம்பர்31ம் தேதி கோபாலபுரம் பகுதியில் பாதயாத்திரை முடிவடையும். ஒரு வருடம் குடும்பம் சம்பாத்தியம் அனைத்தையும் விட்டுவிட்டு பாதயாத்திரையில் பா.ஜ.க தொண்டர்கள் தயராக இருக்க வேண்டும். அடுத்த ஐந்து மாதம் அதற்காக தயாராகுங்கள்’ என்று தெரிவித்தார்.