சொந்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டினாரா பென்னிகுயிக்? தவறான தகவலை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் முகத்திரை கிழித்த வெண்ணிலா!

முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுயிக் தனது சொந்த பணத்தை செலவு செய்து கட்டினார் என்றும், அதனால் அவருக்கு அவரது சொந்த ஊரான இங்கிலாந்தின் கேம்பர்ளிநகரில் தமிழக அரசு சார்பில் சிலை வைக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் நேற்று (15.01.2021) அறிவித்து இருந்தார்.

மேலும், முல்லைப்பெரியாறு அணையை கட்டுவதற்கு அன்றைய வெள்ளைக்கார அரசாங்கம் பணம் கொடுக்க மறுத்து விட்டது என்றும், அதனால் பென்னிகுவிக் தனது சொத்தை விற்று அணையை கட்டினார் என்பது நீண்டகாலமாக பரப்பப்பட்டு வந்த தகவல்.

ஆனால் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு அன்றைய வெள்ளைக்கார அரசாங்கம் செலவு செய்த பணம் முழு விவரங்களுடன் அணை கட்டிய உதவி பொறியாளர் ஏ.டி.மெக்கன்ஸி எழுதி, “ஹிஸ்டரி ஆப் தி பெரியாறு ப்ராஜெக்ட்” எந்த நூலில் வெளியிட்டுள்ளார்.

அதில் முல்லைப்பெரியாறு அணை கட்டுவதற்கு எண்ணிக்கை செலவு செய்ததாக ஒரு சிறு தகவல் கூட இல்லை. ஆனால் அன்றைய வெள்ளைக்கார அரசாங்கம் செலவு செய்த அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

எனவே வெள்ளைக்கார அரசாங்கம் முல்லை பெரியாறு அணையை கட்டுவதற்கு பணம் கொடுக்கவில்லை, மறுத்துவிட்டது என்பது நீண்டகாலமாக பரப்பப்பட்டு வந்த பொய் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

ஈ.வெ. ராமசாமி நாயக்கருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டதாக ஒரு பொய்யை நீண்டகாலமாக பரப்பி வந்தனர். பின்னர், வழங்கப்படாத விருதை வழங்கப்பட்டதாக பொய்யை ஆவணப்படுத்தும் வகையில், கி.வீரமணி புத்தகம் எழுதி, வியாபாரம் செய்தார்.

அந்த வரிசையில் இப்போது முதல்வர் மு க ஸ்டாலின், வரலாற்றை திரித்து அணை கட்ட தனது சொந்த பணத்தில் முல்லைப் பெரியாறு அணையை கட்டினார் என்று பொய்யை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் முதல்வர்.

இது தொடர்பாக கவிஞர் அ.வெண்ணிலா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

சொத்துக்களை விற்று அணை கட்டினாரா பென்னி குக்?

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு…

பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னி குக் 181 வது பிறந்த நாள் இன்று. பூனாவில் பிறந்து வளர்ந்த பென்னி பிரிட்டீஷ் இந்திய அரசாங்கத்தின் ராணுவ இன்ஜினியர். பெரியாறு அணை கட்டுவது தென் தமிழகத்தின் நிறைவேறாத நூற்றாண்டு கனவாய் இருந்த வேளையில், காலம் அனுப்பி வைத்த ரட்சகனாய் வந்து அணையைக் கட்டி முடித்த நல்லூழியன்.

அடர்ந்த காட்டில் நோய்களும் விலங்குகளும் அச்சுறுத்தும் சூழலில் ஒன்பது ஆண்டுகள் போராடி அணை கட்டியவர். அவருக்கு அவரின் சொந்த ஊரான கேம்பர்லியில் சிலை வைக்க இருப்பதாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் செய்துள்ள அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்க கூடியது.

காலம் கடந்தும் மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பென்னி, தென் தமிழ்கத்தில் விளையும் ஒவ்வொரு தானியத்தின் உயிராகவும் இருப்பவர். அவர் குறித்து விகடனில் நீரதிகாரம் தொடர் எழுத நேர்ந்தது, ஒரு வகையில் தென் தமிழகம் உயிர்கொண்ட வரலாற்றை எழுதிப் பார்க்கும் நெகிழ்ச்சித் தருணம்.

மாண்புமிகு முதல்வர் அவர்களின் செய்திக் குறிப்பில் ‘ ஆங்கில அரசு தொடர்ந்து நிதி உதவி செய்து அணை கட்ட முடியாத சூழலில், பென்னி குக் தன் சொத்துக்களை விற்று அணை கட்டினார்’ என்றுள்ளது. பென்னி குக் பற்றி கடந்த 25 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அழகிய கற்பனை இது. சொத்துக்களை விற்று அணை கட்டினார் என்பதைவிட அவரின் தியாகம். இதில் அதிகம். கட்டப்பட்ட அணை ஐந்து முறை வெள்ளத்தில் அடித்துச் சென்ற போதும் தளராத அவர் உறுதி, உடன் பணி செய்தவர்கள் விபத்திலும் நோயிலும் இறந்த தருணங்களைத் தாங்கி நின்ற மனத்துணிவு, பணியாளர்கள் பாதியில் விட்டு ஓடிப்போகும் போதெல்லாம் புதியவர்களை அழைத்து வந்த விடாப்பிடித்தனம் என பென்னியின் வியந்து போற்ற வேண்டிய அருங்குணங்கள் அநேகம்.

பிரிட்டீஷ் இந்தியா நிதி கொடுக்க முடியவில்லை என்றால் திட்டம் தொடருமா? பிரிட்டீஷ் இந்திய கவர்னரின் உத்தரவை மீறி பென்னி அணை கட்டியிருக்க முடியுமா? அணை கட்ட அரசாங்கம் செய்த செலவுக்கு பைசா விகிதம் அணை கட்டிய உதவிப் பொறியாளர் A.T.Mackenzie எழுதிய ‘History of the periyar project’ நூலில் வரவு செலவு கொடுத்துள்ளார்.

சில கற்பனைகள் இதமானவை. இனியவை. கலைக்க கூடாதவை. ஆனால் அவை எளிய மக்களின் வாய் வார்த்தைகளில் புழங்கும்வரை ரசிக்கலாம். முதல்வரின் வார்த்தைகள் அரசாங்க சாசனம். அதுவே எதிர்கால உண்மை.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் எந்த வரலாற்று ஆவணத்திலும் இல்லாத ஒரு செய்தியைக் குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டுகிறேன்.

ஏற்கெனவே பல ஊடகங்களில் பலர் தனக்குத் தோன்றியதையெல்லாம் எழுதி எழுதி முதல்வரே நம்பும் அளவிற்கு உண்மையாக்கப்பட்டுள்ள கற்பனை இது.

பென்னியின் உண்மையான தியாகங்களுக்கு அணையின் உயரமான 176 அடி உயரத்திற்கே சிலை வைக்கலாம்….

கமெண்ட் பகுதியில் நான் பதில் சொல்லியுள்ள ஒரு விஷயம் எல்லோரின் கவனத்திற்காகவும்….

பென்னி குக் இங்கிலாந்து சென்றது அணை கட்டுமானத்திற்கு தேவையான நவீன இயந்திரங்கள் வாங்கி வருவதற்குத்தான்… அவரே தன்னுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்திக்கு, வரலாற்று ஆதாரம் இல்லை. பென்னி குக் அவர்களோ அவருடன் பணியாற்றியவர்களோ இப்படி ஒரு செய்தியை எங்கும் பதிவு செய்யவில்லை.

சமீபத்தில் பென்னிமேல் உள்ள அன்பில் இப்படியொரு செய்தி ஏதெச்சையாக உருவாகி, அவர் படுத்திருந்த கட்டிலை விற்றார் என்பது வரை வளர்ந்துவிட்டது. அணை கட்ட ஆன செலவே 83 லட்சம்தான். அதில் 45 லட்சம் எதற்கு பென்னி கொடுக்கிறார். அவர் 1700 மாதச் சம்பளம் பெற்றவர். அவருக்கு 45 லட்ச ரூபாய்க்குச் சொத்திருந்ததா என்பதும் சந்தேகமே. இந்தியாவில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற பின்னரும், ராயல் இன்ஜினியரிங் கல்லூரியில் பணியாற்றிதான் வாழ்க்கை நடத்தினார்.

இவ்வாறு கவிஞர் அ.வெண்ணிலா பதிவிட்டு உள்ளார்.

குறிப்பு:

A.T.Mackenzie எழுதிய ‘History of the periyar project’ நூலை படிக்க விரும்புவோர், கீழ்கண்ட இணைப்பில் சென்று படிக்கவும்

https://www.indianculture.gov.in/rarebooks/history-periyar-project

https://www.facebook.com/permalink.php?story_fbid=3268587853372003&id=100006624606464

Exit mobile version