சென்னை கிளாம்பாக்கத்தில் அவசர அவசரமாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்று கூறி பயணிகள் மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டபோதே, நுழைவாயிலில் தண்ணீர் தேங்கும் பிரச்சினை, மாநகர பேருந்து நிலையத்துக்கும் புறநகர் பேருந்து நிறுத்தத்துக்கும் இடையே எளிதாக கடந்து செல்லும் வகையில் இணைப்பு இல்லாதது, அடிப்படை வசதிகள் இல்லாதது என பல்வேறு புகார்கள் இருந்து வந்தது.
மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தனது தந்தையின் பெயரை சூட்டி விளம்பரப்படுத்திக் கொள்வதில் அத்தனை அக்கறையுடனும் அவசரத்துடனும் திறக்கப்பட்ட காரணத்தால் தான் இவ்வவளவு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள் புதிய பேருந்து முனையம் தொடங்கும்போது ஆங்காங்கே ஒரு சில குறைகள் இருக்கும். அவை போகப் போக சரி செய்யப்படும் என முட்டு கொடுக்க ஆரம்பிதார்கள் திமுக சொம்பு தூக்கிகள். ஆனால், பேருந்து முனையம் செயல்பட ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் புகார்கள் வந்தவண்ணம் இருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நாள்தோறும் 1,292 பேருந்துகளும், வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் கூடுதலாக 500 பேருந்துகளும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. முகூர்த்த நாளையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு அதிக அளவில் பயணிகள் சென்றுள்ளனர். முகூர்த்த நாட்களை போக்குவரத்துத் துறை முறையாக கவனத்தில் எடுத்துக் கொள்ளாததால் வழக்கமான பேருந்துகளே இயங்கியுள்ளன.
தென் மாவட்டங்களுக்கு செல்ல போதுமான பேருந்துகள் இல்லாமல் நள்ளிரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அவதிப்பட்டுள்ளனர். அவர்கள் பேருந்து முனைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், நள்ளிரவு நேரத்தில் ஜிஎஸ்டி சாலைக்கு வந்து மறியலில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. பின்னர் காவல் துறையினர் தலையிட்டு, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் பேசி, கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்து பயணிகளை அதிகாலை 2 மணிக்கு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த பின்பே நிலைமை சீரடைந்துள்ளது.
கோயம்பேட்டில் பேருந்து நிலையம் இருந்தபோது, போக்குவரத்து நெரிசலைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையையும் சென்னை நகர மக்கள் சந்திக்கவில்லை. ஆனால், கிளாம்பாக்கத்துக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்ட பிறகு, வெளியூர் சென்றுவர போதிய பேருந்துகள் இயக்கப்பட வில்லை என்ற குறை ஒருபுறம் இருந்தாலும், சென்னை நகர மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்வதே சொல்லொணாத் துயராக மாறிவிட்டது.
வெளியூர்களில் இருந்து கிளாம்பாக்கம் வந்திறங்கும் பயணிகளும் அங்கிருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்வதற்கும் அதே சிரமத்தை சந்திக்கின்றனர். நகர மக்கள் கிளாம்பாக்கம் செல்வதற்கும், மீண்டும் வீடுகளுக்கு திரும்பவும் போதுமான அளவில் பேருந்துகளை போக்குவரத்து துறை இயக்கவில்லை என்பதை மாலை முதல் இரவு 10 மணி வரையிலும், பின்னர் அதிகாலை 4 மணியில் இருந்து 7 மணி வரையிலும் பேருந்து முனையத்தில் பயணிகள் தவிக்கும் காட்சியை சிறிதுநேரம் கவனித்தாலே விளங்கிவிடும். சாதனைகளை பட்டியலிடும் அரசு, மக்களின் சோதனைகளையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
ஆத்திரமடைந்த பயணிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் மூன்று கிலோமீட்டருக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜிஎஸ்டி ரோட்டின் இருபக்கத்திலும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் ஓட்டேரி போலீசார் மறியிலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாருக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் விடிய விடிய மறியல் தொடர்ந்தது.
இரவு 9 மணிக்கு மேல் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. முன்பதிவு செய்தும், பஸ்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர். இதனால் மணிக்கணக்கில் தூக்கம், பசியோடு குடும்பத்துடன் காத்திருக்க வேண்டி உள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதியளித்தனர். அதே பிறகே மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.