ஓபிசி பிரிவினருக்கான தனிப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து மக்களவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்கள் திரு.ஏ.நாராயணசாமி, சுஷ்ரி பிரதிமா பூமிக் ஆகியோர் எழுத்துபூர்வமாக இன்று பதில் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் நேரடி வேலைவாயப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏற்கனவே 27 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு சமூக நீதியை உறுதி செய்ய, ஓபிசி மாணவர்களுக்கு மெட்ரிக் வகுப்புகுகளுக்கு முன்னும், பின்னும் கல்வி உதவித் தொகைகள், வெளிநாட்டில் படிப்பதற்கான கல்விக் கடனில் வட்டி மானியம் அளிக்கும் டாக்டர் அம்பேத்கர் திட்டம், தேசிய அளவிலான ஆராய்ச்சி உதவித் தொகை, மாணவ, மாணவிகளுக்கு விடுதிகள் கட்டித் தருதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் உதவி, தொழில் தொடங்க மூலதன நிதி, குறைந்த வட்டியுடன் கூடிய கடனுதவி திட்டங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு மத்திய வேலை வாய்ப்பு மற்றம் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீடு போன்ற திட்டங்கள் மத்திய அரசால் அமல்படுத்தப்படுகின்றன. போதை மறுவாழ்வு மையங்களில் ஆய்வு: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இ-அனுதான் இணையதளம் (https://grants-msje.gov.in) தகவல்படி, 2019-20-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள 65 ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களில், மாநில அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களின் பரிந்துரைப்படி அந்த அமைப்புகளுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நிதிவழங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியர்களுக்கான ஒதுக்கீடு: தற்போதுள்ள பட்டியலினத்தனர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் வராத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத ஒதுக்கீடு உத்தராகண்ட், குஜராத், கர்நாடகா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மிசோரம், தில்லி, ஜம்மு காஷ்மீர், கோவா, அசாம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதன் விவரம் கிடைக்கவில்லை. மத்திய அரசின் 10 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கண்காணித்து, காலியிடங்களை நிரப்பி வருகிறது. அவற்றின் விவரம் இணைப்பில் -1-இல் கொடுக்கப்பட்டுள்ளது. பிச்சை எடுக்கும் குழந்தைகள்: இந்தியப் பதிவாளர் இணையளத்தில் உள்ள தகவல் அடிப்படையில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிவில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 29,237-ஆக உள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கான திட்டங்கள்: நலிவடைந்த தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு உதவ, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ‘ஸ்மைல்’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதில் பிச்சை எடுப்பவர்களின் மறுவாழ்வக்கான துணைத் திட்டமும் உள்ளது. இதில் பிச்சை எடுக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, மருத்துவ வசதி அளிப்பது, ஆலோசனை வழங்குவது, கல்வி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, பொருளாதாரத் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. பிச்சை எடுப்பவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவு நிதி மற்றும் மேம்பாட்டு கார்பரேஷனுக்கு மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.1.50 கோடியை வழங்கியுள்ளது. பிச்சை எடுத்து வந்த 514 பேருக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.182 கோடி ஒதுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு: மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றுபவர்கள் எந்த மாநிலத்திலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மனிதக் கழிவுகளை அகற்றுபவர்கள் இன்னமும் இருப்பதாக சில தன்னார்வ அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், இதற்கான ஆதாரங்களை நிருபிக்க முடியவில்லை. கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 309 பேர் கடந்த 5 ஆண்டுகளில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், கைகளால் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவிகள் மாநிலம் வாரியாக இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்டுள்ளன. மதுரையில் கைகளால் கழிவுகளை அகற்றும் இரு துப்புரவு தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் மறுவாழ்வுக்கு ரூ.40,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது, 2013-ஆம் ஆண்டுக்கு முன், கைகளால் கழிவுகளை அகற்றிய துப்புரவுத் தொழிலாளர்களின் விவரம்: 2013-ஆம் ஆண்டுக்கு முன்பாக கைகளால் கழிவுகளை அற்றிய தொழிலாளர்கள் மாநில வாரியாக இணைப்பு-1-இல் கொடுக்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள், நிதியுதவி அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இதில் இடம் பெற்றள்ளது. மராத்தா பிரவினருக்கான இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு: மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் ரத்து செய்தது. அரசியல் சாசன திருத்தப் பிரிவுகளை சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தபட்டப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை மாநிலங்கள் தனியாகப் பராமரிக்க அதிகாரம் இல்லை என கூறியது. இந்த பட்டியலைப் பராமரிக்கும் மாநிலங்களுக்கான அதிகாரத்தைத் திரும்ப பெற, அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.