தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 5, 6ம் தேதிகளில் கனமைழைக்கு வாய்ப்பு.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், ஜனவரி 5, 6ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாகிஸ்தான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள், தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதியில் புயல் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதோடு வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில், வடக்கு பஞ்சாப்பில் இருந்து வடகிழக்கு அரபிக் கடல் வரை காற்று சங்கமும் இன்று காணப்பட்டது. இதன் காரணமாக வடமேற்கு இந்தியாவில் ஜனவரி 5ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமானது முதல் தீவிர மழை பெய்யும். பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் 3 மற்றும் 4ம் தேதிகளிலும், ஜம்மு காஷ்மீர், லடாக், முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஜனவரி 5, 6ம் தேதிகளில், இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.