இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மாநாடு தொடங்கியது
ஒரே தேசம் ஒரே சந்தையை உருவாக்குவதற்கான கொள்கை சீர்திருத்தங்கள், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளை பாதுகாப்பதற்காக சரியான நடவடிக்கைகளுடன் கூடிய ஒப்பந்த விவசாயம், ரூபாய் ஒரு லட்சம் கோடி விவசாய உள்கட்டமைப்பு நிதி ஆகியவை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அறிவிக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகள் என்று மத்திய வேளாண், விவசாயிகள் நலம், ஊரக வளர்ச்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய அரசின் வெளியுறவுத்துறை ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய கனடா வர்த்தக சபை ஏற்பாடு செய்த இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மெய்நிகர் மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். ஆன்லைன் சந்தைகள் மற்றும் திறன்மிகு வேளாண்மையை உருவாக்க இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், விவசாயத்துறையை ஒரு முதலீட்டு வாய்ப்பாக மாற்ற இந்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் திரு தோமர் தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A&t=4s கடந்த ஆறுமாத சர்வதேச பெருந்தொற்று காலத்தில் இந்திய விவசாயத் துறையில் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் மேலும் கூறினார். வேளாண் தொழில்நுட்ப துறையில் மட்டுமே 450க்கும் மேற்பட்ட புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) இந்தியாவில் இருப்பதாக அமைச்சர் கூறினார். உலகில் தொடங்கப்படும் ஒன்பது புது நிறுவனங்களில் ஒன்று இந்தியாவில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய கனடா அரசின் வேளாண் மற்றும் விவசாய உணவுகள் அமைச்சர் திருமிகு மேரி கிளவுட் பிபு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.