தமிழ்நாடா இல்லை கொலைகாரர்களின் கூடாரமா… ஒரே மாதத்தில் 133 கொடூர கொலைகள்….
கடந்த ஒரு வருடமாக நடுரோட்டில் கொலை என்ற செய்தி சர்வசாதாரணமாக செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடா இல்லை கொலைகாரர்களின் கூடாரமா எனக் கேட்கும் வகையில் தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 133 கொடூர கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மக்களோ அச்சத்தில் உள்ளார்கள். மேலும் இந்த செப்டம்பரின் முதல் வாரத்தில் மட்டுமே 23 கொலைகள் நிகழ்ந்துள்ளது மக்களிடையே பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா போதையில் மது போதை, ரவுடிகளின் அராஜகம், என தமிழகத்தில் சட்டம் சீர்கெட்டுள்ளது கஞ்சா போதையில் இருந்த சிறுவன், அங்கிருந்தவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் கேட்டிருக்கிறான். சிறுவனை மடக்கிப்பிடித்த அருள், விசாரித்துக் கொண்டிருக்கும்போதே மறைத்துவைத்திருந்த கத்தியால் அருளின் தோள்பட்டையில் வெட்டியிருக்கிறான் சிறுவன் இது தான் தமிழகத்தின் தற்போதைய நிலைமை.
“கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்திருக்கின்றன. தி.மு.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது” என எதிர்கட்சிகள் விமர்சித்து வந்தார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக திமுகவை சாடினார்.உடனே சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடமிருந்து ஒரு விளக்கமும் வந்தது. அதில், ‘கடந்த ஏழு மாதங்களில் 940 கொலைகள் நடந்துள்ளன. இதேபோல 2021-ம் ஆண்டு முதல் ஏழு மாதங்களில் 925 கொலைகளும், 2019-ம் ஆண்டு 1,041 கொலைகளும் நடந்துள்ளன. ஆனால் 2020 ஆம் ஆண்டு எத்தனை கொலைகள் என கூற மறுத்துவிட்டார்.
உண்மையில் இங்கு பிரச்சினை என்பது எத்தனை கொலைகள் நடந்துள்ளன, யாருடைய ஆட்சிக்காலத்தில் அதிகமாக நடந்துள்ளன என்பதல்ல. காவல்துறை மீதும் சட்டத்தின் மீதும் எந்த பயமும் இல்லாமல்,கொடூரமாக வெட்டவெளியில், பட்டப்பகலில் கொலை நடக்கும்விதம்தான்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் தமிழகத்தில் நடந்த 133 கொடூரக் கொலைச் சம்பவங்கள் மக்களை கதிகலங்க வைத்துள்ளன. மேலும் இந்த செப்டம்பர் முதல் வாரத்தில் மட்டும் 23 கொலைகள் நடந்துள்ளன. விஷயத்தின் வீரியத்தை உணர்ந்து அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுப்பதாக கூறினாலும், தொடர்ந்து நடக்கும் குற்றங்கள் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக நினைக்கும் மக்களிடையே பெரும் மிகப்பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தின் தலைநகரமாக விளங்கும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் கொலைகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.குறிப்பாக சென்னை அம்பத்தூரின் அன்னை சத்யா நகர் – எம்.கே.பி நகரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே நடந்த மோதலில், கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு அருகிலேயே கார்த்திக் என்பவரை ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்துள்ளது.
பின்னர் இதே பாணியில், சென்னை மணிமங்கலம் காவல் நிலையத்துக்கு அருகிலேயே சுகன் மற்றும் விக்கி எனும் இருவரை ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு மற்றொரு கும்பல் கொடூரமாக வெட்டிச் சாய்த்திருக்கிறது. இரண்டுமே நன்கு திட்டமிடப்பட்ட பழிக்குப் பழி சம்பவங்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
இவை தவிர சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி ரௌடி மதுரை பாலா என்பவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒரு கும்பல் பாலாவை கொடூரமாக வெட்டிக் கொல்ல முயன்றது. எனினும் போலீசார் உஷாரானதால் ரவுடி பாலா மயிரிழையில் உயிர் தப்பினார். எனினும் இந்த மோதலில் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் காவலர் பாரதியின் கையில் கத்திக்குத்து விழுந்தது.
இது ஒருபுறம் இருக்க அதே தினத்தில், மனைவியோடு மார்க்கெட்டுக்கு வந்த திருவான்மியூரைச் சேர்ந்த பிரபல ரௌடி ஓலை சரவணன் என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதர பகுதிகளும் விதிவிலக்கல்ல
சென்னையில் தான் இப்படி என்றால் தமிழகத்தின் மற்ற பகுதிகளும் இதில் விதிவிலக்கல்ல. திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே கடந்த மாதத்தில் மட்டும் ஐந்து கொலைகள் நிகழ்ந்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி, சோளிபாளையம் அருகே முத்துலட்சுமி எனும் மூதாட்டியைக் கொடூரமாக கொலை செய்துவிட்டு, 30 பவுன் நகை மற்றும் 10 லட்ச ரூபாய் பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இதேபோல் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஆசிரியையாக பணிபுரியும் ரஞ்சிதம், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சுயம்புகனி ஆகியோரும் நகைக்காகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
ராணிப் பேட்டை மாவட்டம், ராமப்பாளையம் வேலாயுதபாணி தெருவைச் சேர்ந்த கலையரசன் ஏரியில் திருட்டுத்தனமாக மீன் பிடித்ததற்காக நடந்த மோதலில், ஏரியைக் குத்தகைக்கு எடுத்திருந்தவர்களால் கலையரசன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
அரசியல்வாதிகளுக்கும் அட்டாக்
தூத்துக்குடி மாவட்டம் திட்டங்குளத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் பொன்ராஜ், கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து தனது தோட்டத்துக்குச் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பி.பி.பாளையத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் நரசிம்ம மூர்த்தியும் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு காய்கறி வாங்கிக்கொண்டு வீடு திரும்பியபோது, ஒரு மர்மக் கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜெஜெ நகர்ப் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மோகன், சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்கரைப் பகுதியில் மற்றொரு திமுக பிரமுகர் ஜெயக்குமாரை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளது.
மது போதையில் நடக்கும் கொலைகள் !
திட்டமிடப்பட்ட படுகொலைகள் ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் போதையில் குற்றச் செயல்களில் பெருமளவில் சிறுவர்கள் ஈடுபடுவதும் நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதுரை எல்லீஸ் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் தனது வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சிறுவர்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்ததை பார்த்து, இந்த வயசுலேயே எதுக்கு குடிச்சு நாசமாப் போறீங்க என கேட்டுள்ளார்.
அவ்ளோதான், அடுத்த நாள் பிரகாஷின் வீட்டுக்கு வந்த அந்த சிறுவர்கள், பிரகாஷை கொடூரமாக வெட்டியுள்ளனர். அதை தடுக்கவந்த பிரகாஷின் சித்திக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஆறு சிறுவர்கள் இந்த கொலைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதேபோல் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி பகுதியில் ஒரு உணவகத்தில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவு மதுபோதையில் வந்த மூன்று சிறுவர்கள் ஓசியில் பரோட்டா கேட்க, கடையின் உரிமையாளர் மற்றும் பரோட்டா மாஸ்டர் அவர்களை திட்டி அனுப்பியுள்ளனர்.
அடுத்த நாள் இரவு கடை உரிமையாளரும் பரோட்டா மாஸ்டரும் வீடு திரும்பும்போது கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இதில் பரோட்டா மாஸ்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உடன் வந்த மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். இந்தக் கொலையில் நான்கு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் பண்ருட்டியில் நேற்று (செப்டம்பர் 9 ஆம் தேதி) கள்ளகாதலால் மது போதையில் நண்பர்களுக்கிடையே நடந்த மோதலில் ஆட்டோ டிரைவர் சக்திவேல் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
காவல்துறைக்கும் கத்திக்குத்து !
கடலூரில் உதவி ஜெயிலராக இருக்கும் மணிகண்டன் என்பவர், கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரெளடி எண்ணூர் தனசேகரனிடமிருந்து கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி சட்டவிரோதமாக வைத்திருந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரவுடி தனசேகரன், சிறையிலிருந்தபடியே தன் ஆட்களை ஏவி, ஜெயிலர் மணிகண்டனின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம், காவல்துறையையே கதிகலங்க வைத்துவிட்டது.
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே அருள் என்ற காவலர் மஃப்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா போதையில் அங்கு வந்த சிறுவன் ஒருவன், அங்கிருந்தவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் கேட்டுள்ளான்.
காவலர் அருள் சிறுவனை மடக்கிப்பிடித்து, விசாரித்துக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராத வகையில், மறைத்துவைத்திருந்த கத்தியால் அருளின் தோள்பட்டையில் வெட்டியிருக்கிறான் சிறுவன். கடந்த 23 ஆம் தேதி, செங்கல்பட்டுக்குப் புறப்படத் தயாராக இருந்த ரயிலின் பெண்கள் பெட்டியில் போதை ஆசாமி ஒருவன் ஏறிய நிலையில், பெண் காவலராக ஆசிர்வா அவனை இறங்கச் சொன்னதால், ஆத்திரத்தில் ஆசிர்வாவின் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் குத்திவிட்டுத் தப்பிவிட்டான். பின்னர் அவனை மூன்று நாள் கழித்தே போலீஸ் கைது செய்தது.
இதே போல் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரத்தில் நடந்த கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்புப் பணிக்குச் சென்றிருந்த ஏட்டு சதீஷை ஒரு கும்பல் அடித்துத் துவைத்ததோடு, அவரின் சட்டையையும் கிழித்திருக்கிறது.
காவல்துறை சொல்வது என்ன?
காவல்துறை வட்டாரங்களில் இது குறித்து பேசுகையில், ஒரு மாதத்தில் 100க்கும் மேற்பட்ட கொலைகள் அதிர்ச்சியளிக்கக் கூடியது தான் என்றாலும், இதில் பல கொலைகள், குடும்பப் பிரச்சினை, உணர்ச்சிவயப்படுதல் போன்றவற்றால் நடப்பதாக கூறுகின்றனர்.
எனினும் தமிழக காவல்துறையில் இயங்கும் நுண்ணறிவுப் பிரிவு, உளவுத்துறை, ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு போன்றவை தினந்தோறும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதற்கொண்டு மாநில டிஜிபி வரை புலனாய்வு அறிக்கைகளை தினம்தோறும் சமர்ப்பிக்கின்றனர்.
இதில் ரௌடிகள் நடமாட்டம், சமூகவிரோதச் செயல்கள் முதற்கொண்டு இவர்கள் முன்கூட்டியே கொடுக்கும் தகவலின் அடிப்படையில்தான் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த உளவுச் சேகரிப்புப் பணியில் கடும் மெத்தனப்போக்கு நிலவுவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த கள்ளக்குறிச்சி கலவரம் கூட உளவுத்துறையின் தோல்வியாக பேசப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கத்தியை தூக்கும் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், எதிர்கட்சித் தலைவர் விமர்சிக்கிறார் என்பதற்காக டிஜிபியே எண்ணிக்கையை ஒப்பிட்டு பேசுவது காவல்துறை தனது கடமையிலிருந்து நழுவும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
விஷயம் விபரீதமாவதற்குள், காவல்துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு சாட்டையை சுழற்ற வேண்டும், தமிழகத்தில் ரவுடிகளின் கொட்டத்தை ஒழிக்க வேண்டும், போதை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.