புலியை மொரத்தால் அடித்து துரத்திய தமிழச்சி பரம்பரையில் இருந்து வந்தவள் நான். இன்னொரு மாநிலத்தில் நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்று சொன்னால் அதை ஒருவர் நமது தமிழ்நாட்டில் இருந்தே அதை எப்படி மகிழ்வாக எடுத்துக் கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தமிழிசை- முரசொலி கட்டுரை..
மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், மக்கள் நலச் சட்டங்களுக்கும் ஆளுநர்கள் தடை ஏற்படுத்த நினைத்தால், தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் சந்திக்க வேண்டிவரும் என முரசொலி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பழங்குடியினர் திருவிழாவுக்குச் செல்ல எனது அலுவலகம் ஹெலிகாப்டர் கேட்டது. ஆனால் ஹெலிகாப்டர் தரப்படுமா இல்லையா என்பது பற்றி மாநில அரசு எதுவுமே கூறவில்லை” – என தமிழிசை அங்கலாய்த் துள்ளார்! ஏன் இந்த நிலை ஆளுநருக்கு ஏற்பட்டது? ஆளுநர் முற்பகல் செய்ததை பிற்பகலில் அனுபவிக்கிறார் அவ்வளவுதான்; இதில் அங்கலாய்க்க என்ன இருக்கிறது? தெலுங்கானாவில் அமைச்சரவைக் கூட்டம் கூட்டி கவுசிக் ரெட்டி என்பவரை மேலவை உறுப்பினராக ஆளுநருக்கான “கோட்டாவில் நியமிக்க பரிந்துரை கூறியது. மாநில அமைச்சரவை கூடி பரிந்துரைத்த அந்தக் கோப்பு ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது; அனுப்பி பல நாட்களாகியும் ஆளுநரிடமிருந்து அதற்கான எந்த பதிலும் இல்லாத நிலையில் ராஜ்பவனில் அந்தக் கோப்பு தூங்கியது! அப்போதே ஆளுநருக்கும் – அரசுக்குமிடையே அங்கு பனிப்போர் துவங்கிவிட்டது! ஒரு அமைச்சரவை முடிவுக்கு அன்று ஆளுநர் முட்டுக்கட்டை போட்டார்! இன்று அந்த முட்டுக்கட்டையை ஆளுநருக்கு அரசு போடுகிறது! என முரசொலியில் கட்டுரையாக வெளியிடப்பட்டிருந்தது.. இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அரசியலில் மீண்டும் ஈடுபட வாய்ப்பா..?
இந்தநிலையில் கும்பகோணத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள தெலுங்கானா முதலமைச்சர் தமிழசை சவுந்திர்ராஜன் திருச்சி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் வருவது எனது தாய் வீட்டுக்கு வருவது போன்று ஆகும். ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தற்போது வந்துள்ளேன் என்றார். மேலும் வருங்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி?? நான் தற்போது இரண்டு மாநிலங்களின் ஆளுநர் எனது கடமையை நான் சிறப்பாக செய்து வருகிறேன். மேலும் அன்றைய பணிகளை அன்றே முடித்து விட வேண்டும் என்று நினைப்பவர் நான். சகோதரத்துவத்துடன் அவ்வப்போது தமிழகத்திற்கு வருகை புரிந்து நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறேன். மேலும் இன்றைய நிலையைப் பொறுத்தவரை கடவுள் எனக்கு அளித்த பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன். வருங்காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பது ஆண்டவரும், ஆண்டுக்கொண்டிருப்பவரும் என்ன பணி வைத்துள்ளார்கள் என்பது எனக்கு தெரியாது காலம் தான் பதில் சொல்லும் என கூறினார்.
தெலுங்கானாவில் புறக்கணிக்கப்படுகிறேனா..?
தெலுங்கானாவில் ஆளுநர் புறக்கணிக்கப்படுகிறார் என குற்றச்சாட்டு எழும்பியுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை, ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஒரு கட்சியின் பத்திரிக்கை ஏதோ அவர் அவமதிக்கப்பட்டார் என்று எழுதியுள்ளனர். நான் அவமதிக்கப்படவும் இல்லை ,அலறவும் இல்லை. நான் எதைக் கண்டும் அலற மாட்டேன். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் புலியை மொரத்தால் அடித்து துரத்திய தமிழச்சி பரம்பரையில் இருந்து வந்தவள் நான். இன்னொரு மாநிலத்தில் நமது சகோதரி மதிக்கப்படவில்லை என்று சொன்னால் அதை ஒருவர் நமது தமிழ்நாட்டில் இருந்தே அதை எப்படி மகிழ்வாக எடுத்துக் கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. அத்தகைய மனநிலை சரியான மனநிலை அல்ல என்றார். ஆனால் அப்படி ஒரு மனநிலையில் இருப்பவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. கலாச்சாரம் என்பது ஒரு இடத்தில் உறவினர்களோ அல்லது வேண்டியவர்களோ வந்தால் அவர்களை வரவேற்க கூடிய கலாச்சாரம் பாரத தேசத்தின் கலாச்சாரமாகும். தமிழகத்தின் கலாச்சாரம் ,தெலுங்கானாவின் கலாச்சாரம், அதை சரியாக பொதுமக்கள் பின்பற்றப்படவில்லை என்பது தான் எனது கருத்து.
சகோதரி மதிக்கப்படவில்லை- மகிழ்ச்சி அடையும் கூட்டம்
பழங்குடியினர் 6 மாவட்டங்களை தத்தெடுத்துள்ளேன், அவர்களுக்கு கோழிகள் வழங்கி, முட்டைகள் கொடுத்து ஊட்டச்சத்துக்களை அதிகப்படுத்துவதற்காக வழிவகை செய்துள்ளேன். மேலும் மருத்துவமனை, கல்லூரிகள்,பள்ளிகள் மற்றும் மகளிர் ,பொதுமக்களை சந்திக்கின்றேன். இதுபோன்று நல்லதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது ஆளுநர் இப்படியும் அவமதிக்கப்படுகிறார் என்பதை தான் நான் சொன்னேன். அதனால் நான் அலறுகிறனோ, அழுகிறேனோ ஒன்றும் கிடையாது. என்னை மதித்தாலும், மதிக்காமல் இருந்தாலும் எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன். இந்த அவமரியாதை என்னை ஒன்றும் செய்யாது. ஆனால் அங்கு அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று மகிழும் கூட்டம் இங்கே இருக்கிறது, என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நம்மை சார்ந்தவர்கள் எங்கேயாவது அவமதிக்கப்பட்டால் துடிப்பது நமது ரத்தமாக தான் இருக்கும் என தெரிவித்தார்.
source asinet