துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்து அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு, பொதுமேடையில் திமுகவுக்கு ஓட்டு போடாத வடஇந்தியர்களை மிரட்டினார்.
இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேகர் பாபுவின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவரும், பாஜக இளைஞரணி மாநில தலைவருமான வினோஜ் பி செல்வம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே தமிழகம்தான் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு பெட் கிடைக்கவில்லை, ஆக்சிஜன் கிடைக்கவில்லை, மருத்துவம் கிடைக்கவில்லை. மக்கள் தெருக்களிலும், ஆம்புலன்ஸ்களிலும், ஆஸ்பத்திரிகளிலும் செத்து மடிகிறார்கள்.
இறந்தவர்களை எரிப்பதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. இறந்தவர்களை மரியாதையோடு புதைப்பதற்கு பதிலாக ஆங்காங்கே வீசி செல்கின்றனர்.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் திமுக அரசு மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. மக்களை காப்பாற்ற முடியாமல் சாகடித்துக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் பொறுப்பற்றதனமாக அமைச்சர் சேகர் பாபு பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் திமுகவின் தோல்வியை திசை திருப்புவதற்காகவே, அவர் இப்படி இனவெறியைத் தூண்டி பேசியுள்ளார். வட இந்திய சமுதாய மக்களை மிரட்டியுள்ளார்.
அவருடன் மேடையில் அமர்ந்திருந்த மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தயாநிதி மாறன், வட இந்தியர்கள், திமுகவுக்கு ஓட்டு போடவில்லை. அதனால் அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்று பேசியுள்ளார்.
“நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்” என்று கூறி அந்த சமுதாய மக்களை மிரட்டி உள்ளார் சேகர்பாபு.
நாங்கள் ஒவ்வொரு வாக்காளரையும், இந்திய குடிமகன். தமிழக குடிமகன், துறைமுகம் தொகுதி குடிமகன் என்றுதான் பார்க்கிறோம். மக்களிடம் எந்த பேதத்தையும், எப்போதும் பார்த்ததில்லை.
உண்மையில் சேகர்பாபு தமிழன் அல்ல. அவர் ஒரு வந்தேறி. அவர் வட இந்திய சமுதாய மக்களை மிரட்டுகிறார்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒருவர் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம். அதற்கு முழு உரிமையும் உள்ளது. யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.
வடஇந்திய சமுதாய மக்களை மிரட்டுவதிலிருந்தே திமுகவின் உண்மை முகம் மக்களுக்கு தெரிகிறது. அவர்களின் சாயம் வெளுத்து உள்ளது.
துறைமுகம் தொகுதியில் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், நாங்கள் அந்த மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நாங்கள் முன்வந்து நிற்போம்.
அமைச்சர் சேகர் பாபு தன்னுடன் தயாநிதி மாறன் எம்பியை வைத்துக்கொண்டு வட இந்திய சமுதாய மக்களை, இனத்தின் அடிப்படையில் பாகுபடுத்தி மிரட்டுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் கொரோனாவால் மடிந்து கொண்டிருக்கும் போது, அவர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக இன மோதல்களையும். பிரிவினை வாதத்தையும், வன்மத்தையும் ஒரு அமைச்சர் தூண்டுவது மிகவும் கண்டனத்துக்கு உரியது.
இவ்வாறு பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் கூறினார்
=====