கடந்த மார்ச் 24ம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் 68 நாட்கள் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் இன்று முதல் பேருந்துகள் இயங்குகின்றன. இன்று முதல் ஒரு சில மண்டலங்களை தவிர்த்து, மற்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை அனுமதித்து தமிழக அரசு அறிவித்தது.
அதன் படி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மண்டலங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம், திருவண்ணாமலை,கடலூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு தவிர்த்து மொத்தம் 33 மண்டலங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே சமயம், அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகள், பேருந்துகளில் முறையாக கடைபிடிக்கப் படுகின்றனவா என்பதை, அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதில் ஒரு பேருந்துக்கு 32 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன. அவர்கள் பேருந்தில் ஏறும் பொழுது படிக்கட்டில் கை கழுவும் திரவம் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.