தமிழகத்தில் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பணிகளை வேகப்படுத்த தொடங்கியுள்ளனர். பாஜக-வும் தனது தேர்தல் பணிகளை அண்மைக்காலமாக வேகப்படுத்தி உள்ளது. மாநில தலைமையில் மாற்றம், அமித் ஷா தமிழகம் வருகை என கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜகவில் பரபரப்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது.குறிப்பாக தென் மாவட்டங்களின் அறிவிக்கப்படாத தலைநகரமாக இருக்கும் மதுரையைச் சுற்றி அரசியல் மேகங்கள் சூழத் தொடங்கியதற்கு பல்வேறு பின்னணிக் காரணங்கள் இருக்கின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டு பாஜக உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு பாஜகவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். மதுரை வந்த அமித்ஷா, மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பாஜக உயர்மட்ட மற்றும் மையக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மதுரையில் அமித்ஷா தலைமையில் பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, பாஜகவினர் நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் காலம் நமதே என்றும் பேசியதாகக் கூறப்படுகிறது. 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கவும் கட்சியினருக்கு அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக கூட்டணி கட்சிகளுடன் பாஜகவினர் நட்பு பாராட்டவும், இணக்கமாக செயல்படவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பாஜகவினரை 50 தொகுதிகளை தேர்வு செய்து அதில் கவனம் செலுத்துமாறு அமித் ஷா அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக அதிக வாக்குகளை பெற்ற தொகுதிகளைத் தேர்வு செய்து அதில் கவனம் செலுத்த அவர் வலியுறுத்தி இருக்கிறார். எனவே அதிமுக கூட்டணியில் பாஜக 50 தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
இந்தக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை இணைக்கவும் முயற்சி நடந்து வருவதாக அமித் ஷா பேசியதாக தெரிகிறது. அவர்கள் இணையும் பட்சத்தில் அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு மாத இறுதியில் அண்ணாமலைக்கு கட்சியில் தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என அமித் ஷா கட்சி நிர்வாகிகள் மத்தியில் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026-ல் தமிழ்நாடு சடடமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் கவனம் செலுத்திவரும் அமித் ஷா, தமிழகத்தில் கட்சியை மேலும் வலுப்படுத்தும் திட்டத்தோடு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும் பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இந்த பணிகளை எல்லாம் அமித் ஷா நேரடியாகவே கவனித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 2024-ல் நடந்த மக்களவைத் தேர்தலில், தென் மாவட்டங்களில் பாஜகவிற்கு கனிசமான அளவில் வாக்குகள் கிடைத்தன. குறிப்பாக, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி தொகுதிகளில், பாஜக கூட்டணி 2-ம் இடத்தை பிடித்தது.இதனால், அந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளில் அந்த செல்வாக்கை வெற்றியாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது அதிமுகவும் கூட்டணியில் உள்ளதால், அது சுலபமாகும்
வரும் ஜூன் 22ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இதன்மூலம் இந்துத்துவா செல்வாக்கை பலப்படுத்தவும், தென் மாவட்டங்களில் முக்கியத்துவம் பெறவும் திட்டமிட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் திமுக சார்பில் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இது 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தென் மாவட்ட வியூகம் என்று பேசப்பட்டது. இதேபோல் பாஜகவும் மதுரையை குறிவைத்து வைத்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.திமுகவின் ஊழல் குறித்து அமித்ஷா பேசியது திமுகவினரிடையே பெரும் அச்சத்தை கிளப்பியுளது. எந்த நேரத்தில் ரெய்டு வரும் என்ற பயத்தில் தமிழக அமைச்சர்கள் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.