ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், ‘டாடா மோட்டார்ஸ்’ அமைக்க உள்ள கார் தொழிற்சாலைக்கு,வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளது.
டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ், தமிழகத்தில், 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலையை அமைக்கிறது. இதற்காக, இந்நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையில் கடந்த மார்ச் 13ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் உள்ள, ‘சிப்காட்’ தொழில் பூங்காவில் ஆலை அமைக்க, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு, 470 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையின் கட்டுமான பணிக்கு வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்டபடவுள்ளது.
இந்த தொழிற்சாலையில், ‘ஜாகுவார் லேண்ட் ரோவர்’ கார்களை, டாடா மோட்டார்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்துள்ளது.
டாடா நிறுவனம் நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் தங்களுடைய சொகுசு மாடல் கார்களை உற்பத்தி செய்ய இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆலையில் மின்சார வாகன உற்பத்தியும் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ராணிப்பேட்டை தொழிற்சாலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே ராணிப்பேட்டையில் உற்பத்தியாக கூடிய கார்கள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.இதன் காரணமாக வாகன உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை சிப்காட் மாறும் என அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
400 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய இருக்கும் இந்த ஆலையால் சுமார் 20,000 வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.