புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானியுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.அப்போது, இரு தரப்பினரும் அனைத்து வடிவங்களிலுமான பயங்கரவாதத்தையும் கண்டித்தனர். மேலும் இது தொடர்பாக உலகளாவிய ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தியாவிற்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு கொள்கையாகக் கொண்டுள்ளது. இது அரசு மற்றும் அரசு சாராதவர்கள் மூலம் நடத்தப்படுகிறது என்ற பாதுகாப்பு அமைச்சர் இதற்கு கண்டனம் தெரிவித்தார். இத்தகைய தாக்குதல்கள் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குலைப்பதாக அவர் கூறினார். பயங்கரவாதத்திற்கும் அரசு ஆதரவுடன் நடத்தப்படும் நடவடிக்கைகளுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்குமாறு திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.
2025, ஏப்ரல் 22 அன்று ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடந்த துயரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் இந்தியாவிற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மையின் பாதுகாப்பு அம்சங்களை இருநாட்டு அமைச்சர்களும் மதிப்பாய்வு செய்தனர். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பிராந்திய அமைதிக்கு பங்களிப்பதற்கும் அவர்கள் தங்கள் கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பாதுகாப்புப் பயிற்சிகள் மற்றும் பரிமாற்றங்களின் பன்முகத்தன்மையை அமைச்சர்கள் வரவேற்றனர். மேலும் இந்த ஈடுபாடுகளின் நோக்கம் மற்றும் சிக்கலான தன்மையை மேம்படுத்தவும் ஒப்புக்கொண்டனர். இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான வலுவான கடல்சார் ஒத்துழைப்பில் புதிய பரிமாணங்களைச் சேர்க்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்திய பாதுகாப்புத் துறையின் திறனை, குறிப்பாக டேங்க் என்ஜின்கள் மற்றும் ஏரோ என்ஜின்கள் உள்ளிட்ட புதிய துறைகளில் ஜப்பானிய தரப்புடன் ஒத்துழைக்கும் திறனை திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார். பழுதுபார்ப்பு செயல்பாடுகளில் உள்ள திறன்களை அவர் எடுத்துரைத்தார்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இரு தரப்பினரின் வலுவான உறுதிப்பாட்டுடன் பேச்சுகள் நிறைவடைந்தது.
முன்னதாக, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து, வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். மானெக்ஷா மையத்தில் நடைபெற்ற உரையாடலுக்கு முன்னதாக, அவருக்கு முப்படைகளின் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















