அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு… அதிகாரத்தில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் உயர்நீதிமன்றம் அதிரடி

I PERIYASAMY

I PERIYASAMY

ஒரு பக்கம் அமலக்கத்துறையின் பிடியில் தி.மு.க அமைச்சர்கள் சிக்கி வருகின்றார்கள். மறுபக்கம் மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக வந்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தது.மேலும் அதில் பொன்முடிகுற்றவாளி என தீர்ப்பும் வழங்கப்பட்டு தற்போது அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டது தொடர்பான தீர்ப்பை படித்துவிட்டு 3 நாட்களாக உறங்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கவலை தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முப்பெரும் அமைச்சராக வலம் வந்தவர் ஐ.பெரியசாமி அவர் வகித்த துறைகளில் வீட்டு வசதித்துறையும் ஒன்று. தற்போது இவர் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த திமுக ஆட்சியின் போது 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய காவல்துறை அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணையை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேற்று முன்தினம் தொடங்கினார்.

அப்போது, வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியபின், ஐ.பெரியசாமி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது ஏன் என்பது உள்பட பல கேள்விகளை முன் வைத்தார்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித்குமார் கூறுகையில், பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர கவர்னரிடம்தான் போலீசார் ஒப்புதல் பெற்று இருக்கவேண்டும். அதற்கு பதில் சபாநாயகரிடம் ஒப்புதல் பெற்றுள்ளனர். இது சட்டப்படி தவறு. அதனால் சாட்சி விசாரணை தொடங்கியபின், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஐ.பெரியசாமி மனுத்தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சபாநாயகர் அனுமதி வழங்க முடியாது. அனுமதி வழங்க அவருக்கு அதிகாரமே கிடையாது.

அதனால், முறையான அனுமதி இல்லாமல் தொடரப்பட்ட வழக்கை சிறப்பு கோர்ட்டு விசாரிக்க முடியாது. அப்படி விசாரிப்பது கோர்ட்டின் நேரத்தையும், பொதுமக்களின் பணத்தையும் வீணடிப்பதாகும். எனவே சபாநாயகரின் ஒப்புதல் சட்டப்படி செல்லாது என்பதால் சிறப்பு கோர்ட்டு தன் மனதை முழுமையாக செலுத்தி, வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சரியானது. அதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.

இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐகோர்ட் சரமாரி கேள்விகள் எழுப்பியது. வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யாதது ஏன்? அமைச்சராக இருப்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும்.

அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடின்மை காரணமாகவே தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டது எனக்கூறிய ஐகோர்ட் இந்த வழக்கின் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.மேலும் பாரளுமன்ற தேர்தல் வருதற்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என எதிபார்க்கப்படுகிறது.

Exit mobile version