மாநிலங்களவைத் தேர்தல்களைத் தள்ளி வைத்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.

நாடு முழுக்க 17 மாநிலங்களில் இருந்து ஏப்ரல் 2020 உடன் ஓய்வுபெறும் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் 25.02.2020ல் அறிவித்தது. 06.03.2020 தேதியிட்ட அறிவிப்பாணை எண் 318/CS-Multi/2020(1) -ன்படி அந்த அறிவிப்பு வெளியானது.  வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி 18.03.2020ல் நிறைவடைந்த நிலையில், 10 மாநிலங்களில் இருந்து 37 இடங்களுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அந்தந்த மாநிலத் தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இப்போது, தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து 18 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 26.03.2020 (வியாழக்கிழமை) அன்று நடத்தப்பட வேண்டும். 30.03.2020 (திங்கள்கிழமை) தேதிக்குள் தேர்தல் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

            இதற்கிடையில், 11.03.2020 தேதியன்று, கோவிட் 19-ஐ உலக அளவிலான தீவிர நோய்த் தொற்று என உலக சுகாதார அமைப்பு அறிவிக்கை செய்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஆகியவை, கோவிட் 19 கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் பல்வேறு வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.  22.03.2020 தேதியிட்ட பத்திரிகை வெளியீட்டின் மூலம், கோவிட் – 19 சங்கிலித் தொடரில் பிணைப்புகளை உடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புறநகர் ரயில் சேவைகள் உள்பட அனைத்து ரயில் சேவைகளையும் 31.03.2020 வரையில் ரத்து செய்வது, மருத்துவமனைகள், தொலைத்தொடர்பு, மருந்துக் கடைகள், மளிகை பொருள் கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். அதன் தொடர்ச்சியாக, 24.03.2020 அன்று 23.59 ஐ.எஸ்.டி. நேரத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் இயங்காது என்று 23.03.2020 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கோவிட் – 19 கையாளுதல் மற்றும் கட்டுப்படுத்துதலுக்கு வசதியாக உள்ளூர் போக்குவரத்து வசதிகளை முடக்குவது குறித்து மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, ராஜஸ்தான் மாநிலங்களில், கோவிட் – 19 பரவுதலைக் கட்டுப்படுத்த அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி வைக்கும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

            இந்த விஷயங்களை தேர்தல் ஆணையம் விரிவாக ஆய்வு செய்தது. எதிர்பாராத, இப்போதைய பொது சுகாதார அவசர சூழ்நிலைகள், எந்த வகையிலும் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்த்துகின்றன. அவ்வாறு செய்வது, அதில் ஈடுபடும் அனைவருக்கும் ஆரோக்கியத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேற்குறிப்பிட்ட தேர்தல்களுக்கான தேர்தல் நடைமுறைகளில், தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள், ஆதரவு நிலை அதிகாரிகள், அந்தந்த சட்டப்பேரவைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் வாக்குப் பதிவு நாளன்று ஓர் இடத்தில் கூட வேண்டிய அவசியம் ஏற்படும். இப்போது நிலவும், முன் எப்போதும் இல்லாத சூழ்நிலையில், அரசின் அறிவுறுத்தல்களின்படி, இது உகந்ததாக இருக்காது என்று கருதப்படுகிறது.

            மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் பிரிவு 153ன்படி, உரிய காரணங்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் கருதினால், ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிக்கையில், பிரிவு 39ன் துணைப் பிரிவு (1) அல்லது பிரிவு 30ன் கீழ் தேவையான திருத்தங்கள் செய்வதன் மூலம், எந்தத் தேர்தலையும் நிறைவு செய்வதற்கான காலத்தை நீட்டிக்கலாம் என வகை செய்யப்பட்டுள்ளது; அதன்படி மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்தின் பிரிவு 153ன்படி, இந்தத் தேர்தலை ஆணையம் தள்ளி வைத்து, அதை நிறைவு செய்வதற்கான அவகாசத்தை நீட்டித்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலின்படி, மேற்படி அறிவிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு, இந்தத் தேர்தலின் மீதி பணிகள் நிறைவு செய்யப்படும். வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான புதிய தேதிகள், சூழ்நிலைகளை ஆய்வு செய்து பின்னர் உரிய காலத்தில் அறிவிக்கப்படும்.

Exit mobile version