முக்கிய பாயிண்டுகளை பிடித்து டாஸ்மாக் நிர்வாகத்தை நொறுக்கிய அமலாக்கத்துறை.. விழிபிதுங்கிய தமிழக அரசு.. அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி அதிரடி

tasmac

tasmac

தமிழ்நாடு அரசின் மதுவிற்பனை நிறுவனமான டாஸ்மாக்கின் தலைமை அலுவலகம் சென்னை எழும்பூரில் இருக்கிறது. இந்த அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது நடந்தசோதனை முடிவில் 1000 கோடி அளவிற்கு டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில் டாஸ்மாக்கில் நடந்த சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், அந்த சோதனையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆகியோர் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் நேற்று தீர்ப்பு அளித்தனர்.

நீதிபதிகள் தீர்ப்பு

அதில் நீதிபதிகள் கூறுகையில், டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மது பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இதை டாஸ்மாக் மேற்பார்வையாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளில் மதுவாங்கும் வாடிக்கையாளர்களிடம் கூட அதிக பணத்தை வசூலித்துள்ளார்கள். இதுகுறித்து 41 வழக்குகளை தமிழ்நாடு முழுக்க போலீசார் பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

மது கொள்முதல், மது விற்பனை, டெண்டர் ஆவணங்கள், ஊழியர்கள் இடம் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஊழல்கள் நடந்துள்ளன. இதுதொடர்பான ஆதார ஆவணங்கள் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருக்கிறது. அந்த அலுவலகம்தான் மையக் களஞ்சியமாக உள்ளது எனவே தான் அங்கு சோதனை நடத்தப்பட்டது. எனவே, இந்த அலுவலகத்தில் சோதனை நடத்தியது சரியா, தவறா? என்பதை மேற்கொண்டு ஆய்வு செய்யத் தேவையில்லை என்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டிருக்கிறது.

தனிநபர் சுதந்திரம்
இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போதுதான் சம்பந்தப்பட்ட நபரின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படும். ஆனால், சட்டத்தின் அடிப்படையில், திடீர் சோதனை நடத்தி, ஆதாரங்களை சேகரிக்கும்போது, சில நபர்களின் உரிமை சிறிது நேரத்துக்கு பாதிக்கப்படத்தான் செய்யும். அதற்காக அது மிகப்பெரிய பாதிப்பு என்று கூற இயலாது.

100 கேள்விகள்
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் டெண்டர், மது விற்பனை, பார் உரிமை உள்ளிட்டவைகள் குறித்து 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு அமலாக்கத்துறை மிரட்டியதாக அரசு தரப்பில் கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்க இயலவில்லை. இதுபோன்ற சோதனைகளுக்கு அரசு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

புகார்கள் இல்லை
அதேநேரம், மிரட்டலுக்கு ஆளானதாக கூறப்படும் அதிகாரிகள் இதுகுறித்து புகார் எதுவும் கூறவில்லை. பஞ்சநாமா ஆவணத்திலும் சோதனை அமைதியாக, சட்டப்படி, பொருளுக்கோ, மனிதர்களுக்கோ எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நடந்தது என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதனால், ஆதாரமே இல்லாமல் அதிகாரிகள் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று அரசு எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகின்றனர் என்பதே தெரியவில்லை.

ஆச்சரியமாக உள்ளது
அரசு அலுவலகத்தில் ஒரு சட்டப்பூர்வமான புலன் விசாரணை அமைப்பு திடீர் சோதனையை நடத்தியுள்ளது. அப்போது, ஆதாரங்கள் கசிந்து விடக்கூடாது என்று டாஸ்மாக் ஊழியர்கள் பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்காக தங்களை கொடுமை செய்தனர் என்று டாஸ்மாக் அதிகாரிகள் சிலர் கூறுவது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.

சாதாரண சோதனை
அதுவும் ஓய்வு தரவில்லை. உணவு தரவில்லை. உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை அதிகாரிகள் சுமத்தியுள்ளனர். தன்னுடைய உரிமைக்காகவும், அரசாங்கத்தின் சலுகைகளை பெறுவதற்காகவும் அரசு அலுவலகத்தில் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். சில சமயங்கள் பல நாட்கள் நிற்கின்றனர். ஆனால், தன்னுடைய சொந்த அலுவலகத்தில் சோதனையின்போது சிறிது நேரம் சிறைப்பட்டிருந்ததை கொடுமை என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறுவதை ஏற்க இயலாது. ஊழலுக்கு எதிரான சோதனையில் டாஸ்மாக் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டுமே தவிர, சாதாரண ஒரு சோதனையால், அனைத்தும் உடைந்து விட்டது என்பது போல குற்றம் சாட்டக்கூடாது.

ஏன் அரசு தாக்கல் செய்தது
ஒருவேளை சோதனையின்போது, அதிகாரிகள் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள்தான் வழக்கு தொடர்ந்து இருக்கவேண்டும். ஏன் டாஸ்மாக் நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது? என்பதை எங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.. ஒரு அரசாங்க அதிகாரிகள் நடத்திய சோதனையால் மற்றொரு அரசாங்க அதிகாரிகள் எப்படி பாதிக்கப்படுவார்கள்? ஒரு சுமுகமான சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விசித்திரமானது
இதுபோன்ற வழக்கை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த வழக்குகளை ஏற்றுக் கொண்டால், சட்டத்தையே அது சீர்குலைத்து விடும். மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் எல்லாம் விசித்திரமானதாக இருக்கிறது. அதுவும் சோதனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும் என்று அரசு தரப்பு கோரிக்கை நியாயமானது இல்லை..

கேடயம்
மேலும், பெண் அதிகாரிகள் பிடித்து வைக்கப்பட்டு, பாதுகாப்பு இல்லாத நேரத்தில் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டுகிறார். ஆவணங்களை பார்க்கும்போது, அமலாக்கத்துறையின் சட்டப்படியான நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பெண் அதிகாரிகளையும், ஊழியர்களையும் அரசு ஒரு கேடயமாக பயன்படுத்தி இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளதோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.

பெண்கள் திறமை
இப்போதெல்லாம், பெண்கள் அனைத்து துறைகளிலும் முக்கிய பொறுப்புக்களை வகிக்கின்றனர். முப்படைகளிலும், ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாகவும், எம்.பி., எம்.எல்.ஏ.வாகவும் இரவு பகலாக பணியாற்றுகின்றனர். கொரோனா காலத்தில் பெண் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியாற்றினார்கள். அதனால் பெண்களின் திறமையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. பெண் ஊழியர்கள் ஊக்கத்தையும், அதிகாரத்தையும் இழக்கச் செய்யும் விதமாக அரசு செயல்படக்கூடாது.

ஒரு வார்த்தை கூட கூறவில்லை
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன், பொதுமேலாளர் சங்கீதா, துணை பொதுமேலாளர் ஜோதி சங்கர் ஆகியோர் சோதனை முடிந்து 10 நாட்களுக்கு பின்னர், அமலாக்கத்துறை இணை இயக்குனர் எழுதிய கடிதத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்களே தவிர, சோதனையின்போது கொடுமைக்கு உள்ளானோம் என்று ஒரு வார்த்தைக்கூட கூறவே இல்லை..

சட்டப்படி செல்லும்
எனவே, சட்டத்தை தவறாக பயன்படுத்தி இந்த வழக்குகள் (அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டப்படி செல்லும். அதிகாரிகளின் மொபைல் போனை பறிமுதல் செய்தது பேச்சுரிமை, தனிநபர் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கூறுவதையும் ஏற்க இயலாது

41 வழக்குகள்
சட்டவிரோத பண பரிமாற்றம் தடைச்சட்டதின் பிரிவு 54 (ஜே) -வின்படி, மாநில அரசு அதிகாரிகளின் உதவியுடன்தான் விசாரணை நடத்தவேண்டும் என்று கூறவில்லை. மாநில போலீசார் பதிவு செய்துள்ள 41 வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளது. டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது. இதுகுறித்து ஆழமான விசாரணை தேவை. அந்த விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளபோது இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

காழ்ப்புணர்ச்சி காரணமா
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் என்பது தேசத்துக்கு எதிரான குற்றச்செயலாகும். அதனால், இந்த சோதனையே தேச நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறுதியாக இந்த சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்தது என்றும் மனுதாரர்கள் கூறுவதை ஏற்க இயலாது. ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பது இயல்பாக இருக்கிறது.
இதையெல்லாம் இந்த உயர்நீதிமன்றம் பரிசீலிக்க முடியாது.

அமலாக்கத்துறை சம்மன்
உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரை எங்கள் முன்புள்ள ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா, இல்லையா? என்பதை மட்டுமே பார்க்க முடியும். அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக கருதுவதால், இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். சோதனையின் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டப்படி மேல்நடவடிக்கை எடுக்கலாம்” இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர். இந்த தீர்ப்பை தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன், பொதுமேலாளர் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Exit mobile version