சூடானில் சம்பவம் செய்த மோடி அரசு ! விமான படையின் துணிச்சலான செயல்பாடு: 121 இந்தியர்கள் அதிரடி மீட்பு !

தொடர்ந்து பாரத பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்ற நாள்முதலே பலசாதனைகளை செய்துவருகின்றது.தற்பொழுது உள்நாட்டு போர் நடக்கும் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில், அந்நாட்டுக்கே தெரியாமல், கும்மிருட்டில், மோசமான ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கி, ரகசிய ஆப்பரேஷன் வாயிலாக, ஒரு கர்ப்பிணி பெண், முதியவர்கள் உட்பட 121 இந்தியர்களை, நம் விமானப் படையினர் துணிச்சலாக மீட்ட சம்பவம் பெரும் அளவில் பாராட்டை பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்படி நடந்த இந்த துணிச்சலான நடவடிக்கையை பார்த்து உலக நாடுகள் வியப்பில் ஆழ்ந்துள்ளன.

வட ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் – புர்ஹான் மற்றும் துணை ராணுவப் படைகளின் தளபதி முகமது ஹம்தான் டாக்லோ இடையே, கடந்த ஏப்., 15ல், பயங்கர மோதல் வெடித்தது.இந்த உள்நாட்டுப் போரில், இதுவரையிலும் 550க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்; 4,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

‘ஆப்பரேஷன் காவிரி’
தலைநகர் கர்துாம் உட்பட சூடானின் பெரும்பாலான பகுதி களில், ராணுவப் படைகளுக்கு இடையே பலத்த மோதல் நீடிப்பதால், அந்நாடே ரணகளமாக காட்சி அளிக்கிறது.குண்டு வெடிப்புகளும், போர் விமானங்கள் பறப்பதும், உள்நாட்டு மக்களை மட்டுமல்லாமல், வெளிநாட்டவரையும் பீதியில் ஆழ்த்தி உள்ளது. சூடானில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை பத்திரமாக மீட்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், சூடானில் சிக்கியிருந்த அமெரிக்கர்களை, அந்நாட்டின் துறைமுகம் அருகே ஹெலிகாப்டர்கள் வாயிலாக, அமெரிக்க அரசு முதன் முதலில் மீட்டது. இதைத் தொடர்ந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகள் தங்கள் நாட்டவரை மீட்கும் பணியில் ஈடுபட்டன.
நம் நாடும் சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை, ‘ஆப்பரேஷன் காவிரி’ திட்டத்தின் வாயிலாக மீட்டு வருகிறது. இதன்படி, சூடான் துறைமுகத்தில் நம் கடற்படையின் கப்பலும், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில், நம் விமானப் படையின் விமானங்களும் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன.

சூடான் துறைமுகத்தில் இருந்து, கப்பல் மற்றும் விமானம் வாயிலாக ஜெட்டா விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படும் இந்தியர்கள், அங்கிருந்து விமானம் வாயிலாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை, 3,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர்.
தலைநகர் கர்துாமில் இருந்து துறைமுகம் 800 கி.மீ., தொலைவில் உள்ள நிலையில், ஒரு கர்ப்பிணி பெண், முதியவர்கள் உட்பட 121 இந்தியர்களை அங்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இதையடுத்து, ரகசிய ஆப்பரேஷன் வாயிலாக அவர்களை பத்திரமாக மீட்க, நம் விமானப் படையினர் திட்டமிட்டனர்.

ஏப்., 27 நள்ளிரவில், சூடானுக்கே தெரியாமல், தலைநகர் கர்துாமிற்கு அருகே உபயோகத்தில் இல்லாத ஒரு விமான ஓடுபாதையில் நம் விமானப் படைக்கு சொந்தமான விமானத்தை நம் வீரர்கள் சாதுரியமாக தரையிறக்கினர்.

அங்கு ஏற்கனவே அழைத்து வரப்பட்ட இந்தியர்களை, ரகசிய ஆப்பரேஷன் வாயிலாக, நம் விமானப் படையினர் துணிச்சலாக மீட்ட சம்பவம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.நம் விமானப் படையின், 90 ஆண்டு கால வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துணிச்சலான நடவடிக்கைகளில் இது குறிப்பிடத்தகுந்தது என ராணுவ வட்டாரங்களில் கூறப்படுகிறது.சூடானில் தவித்த இந்தியர்களை காப்பாற்ற, தைரியத்துடன், ஆபத்தை பொருட்படுத்தாமல் செயல்பட்ட இந்திய விமானப் படையினருக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்திய விமானப்படையின், ‘சி- 130 ஜே’ ஹெர்குலஸ் விமானத்தை, கர்துாமுக்கு வடக்கே, 40 கி.மீ., தொலைவிலிருக்கும் வாடி சயீத்னா என்ற இடத்தில் உள்ள ஒரு சிறிய ஓடுபாதையில் மின் வசதியோ, ‘ஏர் டிராபிக் சிஸ்டம்’ எனப்படும், விமான போக்குவரத்து வழிகாட்டுதலோ இல்லாமல், கும்மிருட்டில் தரையிறக்கி, இந்தியர்களை மீட்டுள்ளனர்.

இது குறித்து, ‘தினமலர்’ நாளிதழுக்கு, இந்திய விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் விங் கமாண்டர் ஆசிஷ் மோகே அளித்த பேட்டியில் கூறியதாவது:

போர் நடக்கும் சூடானில், மனிதாபிமான முறையில், 72 மணி நேரத்திற்கு போரை நிறுத்த, கடந்த 27ல் ராணுவப் படைகள் ஒப்புக் கொண்டன. அந்த நேரத்தில், சூடான் துறைமுகத்திற்கு செல்ல முடியாமல் தவித்த இந்தியர்களை, இந்த அதிரடி திட்டம் வாயிலாக மீட்க முடிவு செய்யப்பட்டது.நள்ளிரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கு வழிகாட்டும் விளக்குகள் கூட இல்லாமல் சேதமடைந்த ஓடுபாதையில், தடைகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு, ‘எலக்ட்ரோ ஆப்டிகல்ஸ்’ மற்றும் ‘இன்ப்ராரெட் சென்சார்’களை பயன்படுத்தி விமானம் தரையிறக்கப்பட்டது.

மேலும், விமானிகள் இரவு நேரத்தில் பார்ப்பதற்கான பிரத்யேக கண்ணாடிகளை அணிந்து தைரியமாக விமானத்தை தரைஇறக்கினர்.
அடுத்த வினாடியே, விமானத்தில் இருந்த எட்டு விமானப்படை கமாண்டோக்கள் துரிதமாக செயல்பட்டு அங்கு தயார் நிலையில் இருந்த இந்தியர்கள் மற்றும் அவர்களது உடைமைகளை விமானத்திற்குள் ஏற்றினர்.


அந்த நேரத்தில் விமானத்தின் இன்ஜின்கள் நிறுத்தப்படாமல் செயல்பாட்டிலேயே இருந்தன. வெறும் 7 நிமிடங்களில் ஒரு கர்ப்பிணி பெண், முதியவர்கள் உட்பட 121 இந்தியர்களையும் பத்திரமாக விமானத்திற்குள் ஏற்றி யதும், வெளிச்சமே இல்லாமல் விமானம் சட்டென புறப்பட்டது.கடைசி இந்தியர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்தியாவுக்கு வரும் வரை, ஆப்பரேஷன் காவிரி தொடரும். சூடானில் இருந்து கடைசியாக விமானம் வாயிலாக இந்தியாவுக்கு வருவது, நம் துாதரக அதிகாரிகளாகத் தான் இருப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version