1963-ல் கட்டுப்பட்டது! 2021-ல் யாருக்கும் கட்டுப்படாத மத யானையா திமுக?
”முடவாதத்திற்கு மருந்து உண்டு, பிடிவாதத்திற்கு மருந்து இல்லை” என்று தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் பழமொழி நமது முதல்வர் ஸ்டாலினுக்கு முழுமையாகவே பொருந்துகிறது. கடந்த ஒன்றரை மாதமாகச் சட்டமன்றத்திற்கு வெளியே அறிக்கைகளில் இடம் பெற்று வந்த ’ஒன்றிய அரசு’ என்ற பிரிவினை வார்த்தையை இப்பொழுது சட்டமன்றத்திலும் பதிவு செய்யத் துவங்கி விட்டனர்.
அது அத்தோடு நிற்கவில்லை. ஆங்கிலேயருடைய ஆட்சி அதிகாரத்திற்கு அடங்கி போயும், உறங்கி போயும் இருந்த கோடான கோடி இந்திய மக்களைத் தட்டியெழுப்புவதற்காக அன்றைய சுதந்திர போராட்ட வீரர்களால் பயன்படுத்தப்பட்ட ‘இந்தியாவிற்கே வெற்றி – ஜெய்ஹிந்த்’ என்ற வெற்றி முழக்க வார்த்தை ஆளுநர் அறிக்கையில் இடம் பெறாதது கூட அவர்களுக்கு இப்போது குதூகலமாக இருக்கிறது. இது வேறொரு நோக்கத்திற்கான துவக்கம் என்று நாம் ஏற்கனவே எச்சரித்தோம்.
சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் தவறான ஒன்றைப் பதிவு செய்ய முற்படுவார்களேயானால், ஒன்று அது அவைக்குறிப்பில் ஏறாது அல்லது அது அவைமுன்னவரின் வேண்டுகோளின் பெயரில் நீக்கப்படும். ஆனால், ’ஜெய்ஹிந்த்’ குறித்து தவறாகப் பதிவு செய்வது பிழையானது என்பதைத் தெரிந்திருந்தும் ஸ்டாலின் ஏன் மௌனம் காத்தார்?
பராசக்தி அல்லது மனோகரா திரைப்படங்களில் இடம் பெற்ற வசனங்களைப் போன்றதும்; கருணாநிதி அல்லது ஸ்டாலின் ஆகியோர்களின் விருப்பு – வெறுப்புகளைத் திணிப்பதற்கான இடமல்ல தமிழகச் சட்டமன்றம். இது தமிழக மக்களின் சட்ட ரீதியான உரிமைகள், கடமைகள், வாழ்வுரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஜனநாயக ரீதியாக விவாதித்துத் தீர்வு காண வேண்டிய மாமன்றம். ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த கோடான கோடி இந்திய மக்களை விடுவித்து நீதி, ஜனநாயம், சுதந்திரம், சமத்துவம், வாழ்வுரிமை ஆகியவற்றை பிரகடனப்படுத்திய இந்திய அரசியல் சாசன சட்டத்தின்பால் அமைக்கப்பட்டதே தமிழகச் சட்டமன்றம் ஆகும். அந்த அருமை மிகு மாமன்றத்திற்குள் நுழைய ’இந்திய அரசியல் சாசனத்தின் பால் நீங்கா பற்றுடன் நடப்பேன்’ என்று உளமார பதவியேற்றவர்கள் அதற்கேற்ப கிஞ்சிற்றேனும் நடக்க முயற்சி செய்யாதது ஏன்?
’மழை விட்டாலும், தூவானம் தூவாமல் விடுவதில்லை’ என்பதைப் போல தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் இந்தியத் தேசத்தை எந்த விதத்தினிலும் குறைத்துப் பேசுவதோ, சிறுமைப்படுத்தி பேசுவதோ தவறு எனத் தெரிந்தும் ஸ்டாலின் தன்னை திருத்திக் கொள்ள மறுக்கிறார். ஒரு எதிர்க்கட்சி தலைவராகக் கூட பேசக்கூடாத ஒன்றை இந்திய அரசியல் சாசனத்தின் பால் உறுதி மொழி ஏற்ற ஒருவர் அரசியல் சாசனத்திற்குப் புறம்பாகத் தொடர்ந்து பேசுவது தான் ”முட வாதத்திற்குக் கூட மருந்து உண்டு, பிடிவாதத்திற்கு மருந்து இல்லை” என்பதன் பொருளாகும். முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று மூன்று தலைமுறைக்கு மட்டுமே முற்பட்ட அவரது தாத்தாவின் அடையாளத்தைப் கூறி பெருமை அடையும் ஸ்டாலின் ஆயிரமாயிரம் தலைமுறைகளைக் கொண்ட பாரத – இந்தியத் தேசத்தின் முகவரியை மறைக்க நினைக்கிறீர்களே? இது நியாயமா? அடுக்குமா? இல்லை, வரலாறுதான் உங்களை மன்னிக்குமா? மறக்குமா?
உலகப் பொதுமறையாம் திருக்குறளின் 7 வார்த்தைகளில் கடைசி இரண்டு வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பொருள் கூறினால், தமிழ் அறிஞர் உலகம் அதை ஏற்றுக்கொள்ளுமா? ஒரு ஆசிரியர் “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற குறளுக்கு விளக்கம் கேட்டால் மாணவர் அக்குறளின் கடைசி இரண்டு வார்த்தைகளான “அதற்குத் தக” என்பதற்கு மட்டும் பொருள் கூறினால், அக்குறளின் பொருள் எப்படி முழுமை பெறும்? அதற்கு ஆசிரியர் எப்படி மதிப்பெண் அளிப்பார்கள்? தேர்வில் தோல்விதானே அடையச் செய்வார்கள்? அதேபோலத்தான், “India that is Bharat, Shall be a Union Of States” என்று 9 வார்த்தைகள் கொண்ட அரசியல் சாசனத்தில் உள்ள ”Union Of States” என்ற வால்பகுதி வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு இந்தியா – பாரதம் என்ற நமது தேசத்தின் அடையாளங்களை அழித்து விட்டு ’ஒன்றிய அரசு’ என மொட்டையாக இரண்டே வார்த்தைகளில் மொழி பெயர்ப்பது சட்டப்படி குற்றம் என்பது தெரியவில்லையா?
இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பு வரை, ஆங்கிலேயரிடம் கப்பம் கட்டி அரை அடிமைகளாக இருந்த 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களில் (Princely States) இரண்டு மூன்றைத் தவிரப் பிற சமஸ்தானங்கள் அனைத்தும் தங்களுடைய தனி அடையாளங்களை எல்லாம் முற்றாக விட்டு விட்டு முழு விருப்பத்துடன் இந்தியத் தேசத்துடன் இரண்டற கலந்து சங்கமமாகி விட்டனர். அதாவது, ஏற்கனவே சுயாதீனமாக ஆட்சி செய்து கொண்டிருந்த எந்த நாடுகளுடனோ, பிராந்தியங்களுடனோ செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொகுப்பு அல்ல இந்தியா என்பதைத்தான் “Indian union is not the result of any agreement between states” என்று அரசியல் நிர்ணய சபையில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அழுத்தம் திருத்தமாகத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அத்தோடு இந்திய அரசியல் சாசனத்தில் முதல் சரத்தில் சொல்லப்பட்ட ”union of states” என்ற வார்த்தை இன்றிருக்கும் மாநிலங்களைக் குறிப்பதற்கானது அல்ல, இந்தியாவில் பன்னெடுங்காலம் இருந்து வந்த ‘Princely States’-யை தான் அது குறிக்கிறது. ஆகவே, ’Union Of States’ என்பதற்குப் பூகோள ரீதியான வரையறை செய்யப்பட்ட எல்லைகளைக் கொண்ட ஒற்றை தேசம் என்பதே பொருள் ஆகும்.
1550க்கு பிறகு குடியேற்றத்தைத் துவங்கி, 1761 வரையிலும் பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த 13 அமெரிக்க காலனிகளும் 50 தனித்தனி நாடுகளாக உருவெடுத்து “United states of America” என்று ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதையோ; இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து என்ற நான்கு நாடுகளும் ஒருங்கிணைந்து “United kingdom” என்ற ஒன்றைப் பெயரில் செயல்படுவதையோ; ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளையோ இந்திய, பாரத தேசத்துடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால், பாரத தேசம் பல்லாயிரமாண்டு காலம் வரலாறு கொண்டது.
இந்திய பாரத மண்ணில் தோன்றிய அரசுகளானாலும் சரி, அந்நிய மண்ணிலிருந்து படையெடுத்து ஆட்சி செய்தவர்கள் ஆனாலும் சரி, அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் பகுதி பகுதிகளாக ஆட்சி செய்தார்களே தவிர, இந்தியத் தேசத்தை எவரும் பூகோள ரீதியாகத் துண்டாடவுமில்லை; தனி நாடுகளாக்கவும் இல்லை. 1947 இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்திய தேசத்தை மத ரீதியாக துண்டாடிய நிகழ்ச்சி மட்டுமே விதிவிலக்கு.
1947-ல் விடுதலை பெற்ற பாரத தேசம் 1950-ல் தனக்கான அரசியல் சாசனத்தை பிரகடனப்படுத்தி கொண்டது. இந்திய அரசியல் சாசனம் ஒன்றைத் தெளிவு படுத்துகிறது. உலகத்தில் பிற நாடுகளைப் போல, இந்தியத் தேசம் உலகத்தின் பிற நாடுகளில் நிலவக்கூடிய மாநிலங்களாலோ, நாடுகளாலோ ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு (Federal) அல்ல. இது தீர்க்கமான எல்லைகளைக் கொண்ட இந்தியா அதாவது பாரதம் என்றே பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தின் முதல் சரத்து பூகோள ரீதியான ஒன்றுபட்ட ஏக இந்தியாவைக் குறிப்பிடுகிறது. பின்வரும் சரத்துக்கள் இந்தியத் தேச மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை நிறைவேற்றக் கையாள வேண்டிய ஆட்சி முறைகளைப் பற்றிச் சொல்கிறது. அதைத் தெளிவு படுத்துவதற்காகவே ஏக இந்தியாவுக்குமான அதிகாரங்கள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கான அதிகாரங்கள் என்றும், அதை விளிம்பு வரையிலும் கொண்டு செல்வதற்காக மாநிலங்கள் உருவாக்கப்பட்டு அதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டு மாநிலங்களுக்கான அதிகாரம் என்றும், இப்போது அதையும் தாண்டி பஞ்சாயத்து ராஜ் சட்டங்களும் அமல்படுத்தப்பட்டு விட்டன.
President of India, Prime Minister of India என்றும் தான் பதவிகள் இருக்கின்றன. ஒருவேளை திமுகவின் மொழி பெயர்ப்பு அமலுக்கு வந்தால், இந்தியத் தேசத்தையே ஒன்றியத்துடன் ஒப்பிடக்கூடியவர்கள் ’President of India’, ’prime minister of India’ ஆகியவற்றை ஒன்றிய President, ஒன்றிய prime minister என்று அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இப்போது அவர்கள் ஒன்றியத்தில் துவங்கி வேரோறு விசயத்திற்கு நகருகிறார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து அனைத்து வித தேச அடையாளங்களையும் அழித்து ஒழித்து விட வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ’ஒன்றிய அரசு’ என்பதன் மூலம் இந்தியா – பாரத என்ற அடையாளத்தை அழிக்க முற்படுவது என்பது ஒரு செயல், இப்போது அதன் தொடர்ச்சியாக ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டங்களுக்கு எழுச்சிகர கோசமாக விளங்கிய ’ஜெய்ஹிந்த்’ ஆளுநர் உரையில் நீக்கப்பட்டதை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன் மூலம் இவர்கள் 250 வருடங்களுக்கு முன்பு, துவங்கிய சுதந்திர போராட்ட வரலாற்றையும் முற்றாக அழிக்க நினைக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
தமிழ்நாட்டின் வரலாற்றை முத்துவேலர் பிறப்பிலிருந்து மட்டுமே துவங்க நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஒன்றிய அரசு என்பதற்கும் சட்டமன்றத்தில் பெரிய எதிர்ப்பு ஒன்றுமில்லை;’ஜெய்ஹிந்த்’ என்பது ஆளுநர் உரையில் நீக்கப்பட்டதற்கும் பாராட்டுக்கள்; சிறு எதிர்ப்பு கூட உருவாகவில்லை. இதையெல்லாம் பார்க்கின்ற போது தனி நாடு கோரிக்கையை ஆரவாரத்துடன் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க; நகைக்கடனை இரத்து செய்ய; குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ1000 வழங்க, ஓய்வூதிய தொகையை ரூ1000லிருந்து 1500 உயர்த்துதல் போன்ற கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வக்கில்லை. ஆனால், இந்தியத் தேசத்தின் அடையாளத்தையும், அதன் மாண்பையும் அதன் வரலாறுகளையும் அழிப்பதில் மட்டும் குறியாய் இருக்கிறார்கள்.
ஒன்றிய அரசு என்பது தேச ஒற்றுமைக்கு எதிராகச் சிறு தீப்பொறியாகவே இருந்தது; இப்போது அது ’ஜெய்ஹிந்த்’க்கு எதிராகப் பெருங்காற்று தீயாகப் பரவி இருக்கிறது. திமுக யாருக்கும் கட்டுப்படாத மதம் பிடித்த யானை என்று ஸ்டாலின் வாக்குமூலம் அளிக்கிறார். 1962 வரையில் ’திராவிட நாடு- பிரிவினை வாதம்’ பேசி வந்த திமுக அன்றைய பிரதமர் நேரு அவர்களின் ’திமுகவிற்குத் தடை’ என்ற ஒரே ஒரு மிரட்டலுக்குப் பணிந்து அன்றைய திமுக தலைவர் அண்ணா அவர்கள் திமுகவின் ‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டார்.
மதம் பிடித்த கட்டுக்கடங்கா யானை அன்றே கட்டுப்பட்ட வரலாற்றை ஸ்டாலின் மறந்து விடலாமா? மதம் பிடித்த யானைப் பாகனையும் தாக்கும்; வீட்டையும் அழிக்கும்; நாட்டையும் அழிக்கும்; காட்டையும் அழிக்கும். தேச ஒற்றுமைக்கு எதிராக கிளம்பியிருக்கும் கட்டுக்கடங்காத மதம் பிடித்த யானையைக் கட்டிப்போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கட்டிப் போட வேண்டியவர்கள் கயிற்றுடன் வருவார்களா? அல்லது கைக்கட்டி வேடிக்கைப் பார்ப்பார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, நிறுவனர் & தலைவர்,