இந்தியாவில் எகிறும் மக்கள் தொகை.. குறையும் ஹிந்துக்கள் எண்ணிக்கை! அதிர்ச்சி ரிப்போர்ட்

Papulation

Papulation

இந்தியாவின் மக்கள்தொகை குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ‘ அந்த ஆய்வறிக்கையில் இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்களின் மக்கள்தொகை 1950-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டுவரை இடைப்பட்ட காலத்தில் 7.81% குறைந்துள்ளதாகவும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43% அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் இந்தியாவின் மக்கள் தொகை ஒவ்வொரு நாளும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. மக்கள்தொகை பெருக்கம் என்பது சமாளிக்க முடியாத பிரச்சினையாக இந்தியாவுக்கு உருவெடுக்கும் எனவும் ,மக்களுக்கான இருப்பிட வசதி கிடைப்பதில் சிக்கல்ஏற்படும் எனவும் பல ஆய்வறிக்கைகள் கூறி வருகிறது.

உலகளவில் மக்கள்தொகை அடிப்படையில் சீனா முதலிடத்தில் உள்ளது. நம் நாடு 2வது இடத்தில் உள்ளது. நம் நாட்டின் மக்கள்தொகை என்பது தற்போது 140 கோடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள்தொகையில் சீனாவை விட இந்தியா முந்தி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது என கூறப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 141 கோடியாக உள்ளது .தொடர்ந்து ஏறும் மக்கள் தொகையால் 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் 2.9 கோடி வீடுகள் பற்றாக்குறையாக இருந்துள்ளது.இது 2036ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த வீடுகளுக்கான தேவை 9.3 கோடியாக இருக்கும் என்று கிரடாய்-லிசி ஃபோராஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேகமாக வளர்ந்து வரும் இந்திய மக்கள் தொகை காரணமாக வீடுகளின் தேவை மற்றும் விநியோகம் அதிகரித்துள்ளது

இந்த நிலையில் நம் நாட்டில் 1950ல் இருந்து, 2015ம் ஆண்டுக்கு இடையே, ஹிந்துக்கள் மக்கள் தொகை 7.81 சதவீதம் குறைந்துள்ளது.. முஸ்லிம்களின் எண்ணிக்கை 9.84 சதவீதத்தில் இருந்து 14.09 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு மத்திய அரசின் சுதந்திரமான அமைப்புகளில் ஒன்றாகும். இந்த அமைப்பு சமூக, பொருளாதார விவகாரங்கள் குறித்து பிரதமருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. கடந்த 1950 முதல் 2015 வரையிலான காலத்தில் சிறுபான்மையினர் மக்கள் தொகை குறித்த ஆய்வறிக்கையை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அண்மையில் வெளியிட்டது.

உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் இந்திய துணை கண்டத்தில் வசிக்கின்றனர். கடந்த 1950-ம் ஆண்டில் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 84 சதவீதமாக இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 78 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 1950-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 9.84 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2015-ம்ஆண்டில் 14.09 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 1950-ம் ஆண்டில் 2.24 சதவீதமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2015-ல் 2.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல கடந்த 1950-ம் ஆண்டில் 1.24 சதவீதமாக இருந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 2015-ல் 1.85 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாடுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் 3.75 சதவீதமும், வங்கதேசத்தில் 18.5 சதவீதமும் முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்ந்திருக்கிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பூடான், இலங்கையில் பவுத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். பூடானில் 17.6 சதவீதம், இலங்கையில் 5.25 சதவீதம் அளவுக்கு பவுத்த மதத்தினர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமே பெரும்பான்மை இந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.

ஒரு சில நாடுகளில் மட்டுமே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழல் நிலவுகிறது .அந்த நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்திருக்கிறது. சீனாவில் வசிக்கும் திபெத் புத்த மதத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதேபோல வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள், இந்தியாவில் அடைக்கலம் தேடி வருகின்றனர். இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகளும் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளனர். இது இந்தியாவின் பன்முகத்தன்மை, ஜனநாயகத்தை பறைசாற்றுகிறது.

இவ்வாறு பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் 167 நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினர் குறித்தும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

Exit mobile version