சேலம் முருகேசன் கொலைக்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்த மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்!
இனியாவது டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடிட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திட வேண்டும் !!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முருகேசன் என்பவரை உயிர் போகும் வரை தாக்கி கொன்ற காவல்துறையின் அராஜக செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த சம்பவம் உச்சக்கட்ட மனித உரிமை மீறலாகும்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, அமெரிக்காவில் கருப்பின சகோதரர் ஜார்ஜ் பிளைட் என்பவரை வெள்ளையின காவல்துறை அதிகாரி ஒருவர் தனது முழங்காலால் கழுத்தை நெரித்துக் கொன்ற செயலுக்கும், இதற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. ஜார்ஜ் கொலை செய்ய எட்டு நிமிடம் பிடித்தது; முருகேசனின் கதை ஐந்தே நிமிடத்தில் முடித்து விட்டது.
கரோனா கட்டுப்பாடு தளர்வுகள் இன்னும் 50 சதவீத அளவிற்கு கூட அமலுக்கு வராத நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், தமிழக பெண்களும் ஒரு சேர எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளை எதிர்த்து எந்த போராட்டமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும் காலை முதல் மாலை வரை நான்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர்.
கழக கண்மணிகளின் மதுபான ஆலைகளில் வரும் வருமானத்தைக் கணக்கில் கொண்டும், அரசின் கஜானா நிரம்ப வேண்டும் என்ற அடிப்படையிலும் யார் குடும்பம் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? என்று எண்ணித்தானே டாஸ்மாக் கடைகளைத் திறந்தீர்கள்?
கரோனா காலத்திலும் தங்களுடைய குடும்ப நலனையும், உடல் நலனையும் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், மது குடித்து அரசிற்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்த அந்த தலைசிறந்த குடிமகன்கள் ஒருவேளை தள்ளாடி, தட்டுத்தடுமாறி வந்திருந்தால் அவர்களை பாதுகாப்புடன் வீட்டில் கொண்டு போய் சேர்ந்திருக்க வேண்டியது தானே காவல்துறையின் பொறுப்பு; அரசின் கடமை. ஆனால், முருகேசன் என்பவரை இரண்டு, மூன்று காவலர்கள் ஈவிரக்கமில்லாமல் காட்டுமிரண்டித் தனமாகத் தாக்கியதை காணொளியில் காண முடிகிறது. சாலையிலேயே அடித்துக் கொல்லும் அளவிற்கு அவர் என்ன இமாலய தவறு செய்து விட்டார்?
முருகேசன் கொலை செய்யப்பட்டு விட்டார். இரு காவலர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தோடு இது முடிந்து விட்டதாக எவரும் கருதக்கூடாது. ஒரு மாதமாக டாஸ்மாக் கடைகள் மூடிக்கிடந்த நேரத்தில் வீடுகளில், வீதிகளில், சாலைகளில் எவ்வித சண்டை சச்சரவுகளும் இல்லை. டாஸ்மாக் கடைகள் திறந்த பிறகு வீடுகளிலும், வீதிகளிலும் சண்டை சச்சரவுகள் தலைவிரித்து ஆடுகின்றன. இது குறித்து ஏற்கனவே நாம் எச்சரித்துள்ளோம். அதையும் மீறி டாஸ்மாக் கடைகளைத் திறந்ததால் தான் சேலம் முருகேசனுக்கு இந்த கொடிய செயல் அரங்கேறியுள்ளது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? தெரியவில்லை.
எனவே, முருகேசனின் மரணத்திற்கு காவலர்களின் தாக்குதல் காரணமாகக் காட்டப்பட்டாலும், டாஸ்மாக் கடைகளைத் திறந்ததே முழு முதல் காரணமாகும். எனவே சேலம் முருகேசன் கொலைக்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்த இம்மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும், இனியாவது டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடிட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.