பாடப்புத்தகத்தில் இடம் பெறும் எப்பொருள் குறித்தும் பட்டிமன்றங்களும் நடத்தலாம்; அவை பாட்டுமன்றங்களாகவும் ஆகலாம். ஆனால், அப்பட்டிமன்றங்களின் எத்தலைப்புகளும் பள்ளி பாடமாகாது; பாடப்புத்தகங்களிலும் இடம் பெறாது. இதுவே பொது நியதி. தமிழக அரசின் பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நகைச்சுவை பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள், அப்பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே ‘இந்திய அரசு அல்லது பாரத தேசம்’ என்பதற்குப் பதிலாக ’ஒன்றிய அரசு’ என்றே 2022 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் பாடப்புத்தகங்களில் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு அறிவிப்பே கோடான கோடி தமிழக மாணவர்கள் பயிலும் பாடத்திட்டம் எத்தகைய முறையான கட்டமைப்போடு கட்டியமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த அவரது புரிதல் இல்லாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.இறையாண்மை மிக்க ’இந்தியா எனும் பாரத தேசத்தின்’ வரலாற்று ரீதியான பெயரை ஐஸ்கிரீம் கடைக்கும், பாணிப்பூரி கடைக்கும் பெயர் மாற்றம் செய்வதைப் போல, ஒரு நாட்டின் பெயரை மாற்ற முடியாது என்பதையும்; அப்படிச் செய்ய முயற்சி எடுத்தால், அது தேசிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்பதையும் கூட, அவர் ஏன் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை? என தெரியவில்லை.
தமிழக பாடநூல் கழகம் என்பது தமிழக அரசினுடைய கல்வித்திட்டத்தை, ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி கல்வி வரையிலும் புத்தக வடிவில் கொண்டு சேர்க்கும் நிறுவனமாகும். இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு வகுப்புகளில் பயின்று வருகிறார்கள். தமிழக அரசின் பாடத் திட்டங்களை வகுப்பதற்கென்றே கல்விமான்களைக் கொண்ட ஒரு குழுவும், அவ்வப்போது அரசியல் ரீதியாக ஒருவர் அக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதும் தமிழக அரசியல் வாடிக்கை.
பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்களில் அரசியல், மதம், இனம், நிறம், சாதிய துவேசங்கள் எழாத அளவிற்கு மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளப்படும்.
ஏனெனில், கல்வி என்பது மனிதக் குலத்தின் அறியாமையை அகற்றும் அகல் விளக்காகவே இன்று வரையிலும் உலகெங்கும் போற்றப்பட்டு வருகிறது. எனவே, உலக மாந்தர்களை ’அறியாமை’ என்னும் இருளிலிருந்து மட்டுமின்றி, எல்லா விதமான அடக்குமுறை – ஒடுக்குமுறைகளிலிருந்தும், வறுமை மற்றும் அனைத்துவித பிணிகளிலிருந்தும் விடுவிக்கப்பட ’கல்வி’ என்ற ’ஒளிவிளக்கு’ சிறிது மங்காமல் என்றென்றும் பிரகாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். அது எங்கும், என்றென்றும் பிரகாசிக்க ’பாடப்புத்தகங்கள்’ என்ற பொக்கிஷங்கள் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும்.
உலக அளவில் வளர்ந்த நாடுகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளில் தொடர் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பல்வேறு நவீன முறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. வார்த்தை பிசகாமல் ஒப்புவித்தல் முறைகளுக்கு மதிப்பெண்கள் இட்டு, குழந்தைகளின் திறமையைத் தீர்மானிக்கும் முறை மாறி, மாணவர்களே ஒவ்வொரு விசயத்தையும் உற்று நோக்கிப் புரிந்து கொள்ளவும், தெளிவு பெறவும் ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் கல்வி கற்கும் காலத்திலேயே பன்முக திறன்களை வளர்த்துக் கொள்ளும் பாடமுறைகளும் மேலைநாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டன.
பதினாறாவது வயதில் பள்ளிப் படிப்பு முடித்த ஒரு மாணவரோ அல்லது மாணவியரோ பெற்றோர் உதவி இல்லாமல் தங்களை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்ளும் தன்னம்பிக்கையைப் பெற்றுவிடுகிறார்கள். மாணவ பருவத்திலேயே தேசப்பற்று ஊட்டி வளர்க்கப்பட்டு மத, இன, மொழி, வர்க்க மற்றும் குழு ரீதியான அனைத்து வித பேத எண்ணங்களும் இளமையிலேயே வேரறுக்கப்பட்டு, நல்ல பண்புகளான ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள், நாகரீகங்கள் அனைத்தும் பள்ளிக்கூடங்களிலேயே பாடபுத்தகங்கள் வழி பண்படுத்தப்பட்டு அவர்கள் மாண்பு கொண்ட உலக குடிமகன்களாக (World Citizen’s) செதுக்கப்படுகிறார்கள்.
21 ஆம் நூற்றாண்டில் உலகெங்கும் ஏற்பட்டு வரும் சமூக, பொருளாதார, தொழிற்நுட்ப மாற்றங்களை எதிர்கொண்டு இந்தியத் தேசம் வெல்லக் கூடிய வகையில் நாமும் நமது கல்வித் திட்டத்தில் பாடத்திட்டங்கள் வழி பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய முக்கியமான தருணம் இது. குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோர்களும் ஆயிரமாயிரம் கனவுகளை தங்களுடைய உள்ளங்களில் சுமந்துகொண்டு, தங்கள் குழந்தைகளுக்கு நல்லக் கல்வி கிடைக்க வேண்டுமென எண்ணுகிறார்கள்.
கடந்த காலங்களைப் போல, இப்போது எதுவும் எளிதாகக் கிடைக்காது. ஒரு பணியிடத்தை நிரப்பத் தகுதியுடைய ஒருவர் கூட இல்லாத ஒரு காலகட்டம் இருந்தது. அது ஒரு இடத்திற்கு ஒருவர், பின் பத்து பேராக மாறி அது ஆயிரம், பத்தாயிரமாகி இன்று தகுதி உடைய இலட்சக்கணக்கானோர் போட்டியிடும் சூழல்கள் உருவாகியுள்ளன.
எனவே, ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி படிப்பு வரையிலும் ஒவ்வொரு குழந்தையும் ஒன்றுக்கும் மேற்பட்ட பன்முக திறன் கொண்டவர்களாக வார்த்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. மத்திய, மாநில அரசுகளின் நிர்வாக துறைகளிலும், அரசு சார்பு மற்றும் தனியார் நிறுவனங்களிலும், UPSC, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளிலும் மற்றும் உலக அளவிலும் தமிழக மாணவர்கள் மிளிர வேண்டுமென்றால், இக்காலகட்டத்திற்கு ஏற்ற முறையில் வடிவமைக்கப்பட்ட தெளிவான இலக்கு கொண்ட பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
ஆனால், லியோனி அவர்களின் துவக்கப் பேச்சே தமிழக பாடத்திட்டத்தின் இலக்கற்ற தன்மையையும், திசை மாறும் போக்கையும் காட்டுகிறது. இந்தியா அதாவது, பாரத தேசத்தின் பெயர் பாடத் திட்டத்தில் ’ஒன்றிய அரசு’ என்று மாற்றப்படும் என்ற அவருடைய பேச்சு, பாடநூல் கழகத் தலைவரின் பொறுப்பான பேச்சாக அமையவில்லை; பட்டிமன்றத்திற்கான பேச்சாகவே இருக்கிறது.
ஆங்கிலேயர்களுக்கு வால் பிடித்து வாழ்ந்த வரலாறு அல்ல, ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்தி வாழ்ந்த வரலாறே இந்தியத் தேசத்தின் வரலாறு. இந்த பரந்துபட்ட இந்தியத் தேசத்தைக் கட்டிக் காக்கவும், அதில் வாழும் 140 கோடி மக்களுக்கான வாழ்வுரிமையையும் தீர்மானிக்கவும் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகம் ’மாநில அந்தஸ்து’ பெறுவதற்கும், பின்பு ’தமிழ்நாடு’ என்ற பெயர் பெறுவதற்கும், அதற்கான சட்டமன்றமும், அமைச்சரவையையும் தோற்றுவிப்பதற்குமான அதிகாரங்களும் இந்திய அரசியல் சாசனத்திலிருந்து பெறப்பட்டதேயாகும். இதைத் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் லியோனி அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை குறிக்கோள்களையும், அது இந்திய மக்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய கடமைகளையும், பொறுப்புகளையும் சற்று நிதானமாக படித்து அறிந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
அரசியல் சாசனம் என்பது வேறு, அரசியல் என்பது வேறு; பட்டிமன்றம் என்பதும் வேறு. தேர்தலுக்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, தேர்தலுக்குப் பின்பு தேதி போட்டோமா? என்று பிதற்றிப் பேசுவது அரசியல், அது பட்டிமன்ற தலைப்புக்களாக கூட ஆகலாம். ஆனால், பள்ளி குழந்தைகளுக்கான பாடப் புத்தகத்தில் அப்படியெல்லாம் எதையும் பதிவு செய்ய முடியாது; கூடாது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பாரதம் அல்லது இந்திய அரசு என்பதற்குப் பதிலாக இன்னொரு பெயர் பயன்படுத்தப்படும் என கூறியிருக்கிறீர்கள். இது இன ரீதியான பிரிவினை முழக்கத்தின் ஒரு அங்கமாகவே கருதப்படும். இந்திய அரசியல் சாசன அதிகாரத்தின் அடிப்படையில் அமையப் பெற்றுள்ள ஒரு மாநில அரசு, இந்தியப் பேரரசின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்த முடியாது. அப்படி ஏதாவது ஒரு மாநிலம் சொல்லாலோ, செயலாலோ செயல்படத் துவங்குமேயானால், அந்த மாநிலம் ’Bully State’ என முத்திரை குத்தப்படும் நிலைக்கு ஆளாகலாம்; இதுபோன்ற செயல்களுக்கு மத்திய அரசால் பெரிய திண்டுக்கல் பூட்டுப் போடும் நிலைகளும் உருவாகலாம்.
நண்பர் லியோனி அவர்களே! அரசியல் பட்டிமன்றத்தில் எதையும் கிண்டல், கேலிகளாக பேசுங்கள். ஆனால் குழந்தைகள் பயிலும் பாடபுத்தகங்களில் அதுபோன்ற சில்மிசங்களுக்கு இடம் அளிக்க எண்ணாதீர்கள். 140 கோடி மக்களை ’இந்தியராக’ உலகிற்கு அடையாளப்படுத்தும் பாரத தேசத்திற்கு எதிரான தேச விரோத நச்சு விதைகளைத் தமிழக பாடத்திட்டத்தில் விதைக்கும் முயற்சி கிஞ்சிற்றும் வேண்டாம். உலகில் வளர்ந்த நாடுகள் அனைத்துமே, கல்வியில் வளர்ந்த நாடுகளே, எனவே, கல்வியில் அரசியல் கலப்படம் வேண்டாம். பாடத்திட்டம் என்பது வேறு, பட்டிமன்றம் என்பது வேறு என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பாடப்புத்தகங்களில் பாரத தேசப் பெயர் மாற்றம்!
பிஞ்சு உள்ளங்களில், தேச விரோத நச்சு விதைகளை விதைக்க வேண்டாம்! லியோனியின் பேச்சுக்கு திண்டுக்கல் பூட்டே தீர்வு!!
பாடத்திட்டம் வேறு! பட்டிமன்றம் வேறு!!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.07.2021