கும்பகோணம் அருகே கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை
சரமாரியாக தாக்கியதுடன் வீடியோ பதிவு செய்த பத்திரிக்கையாளர்களையும் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா போதை பழக்கத்தால் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அரசு ஊழியர்கள் பத்திரிக்கை துறையினருக்கே பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பாலக்கரை பகுதியில் நேற்று இரவு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ரமேஷ் ஒட்டி வந்தார். நடத்துநர் செந்தில்குமார் உடன் இருந்துள்ளார் பாலக்கரை அருகே வந்தபோது, குறுகலான சாலையின் நடுவே இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் ரமேஷ் அவர்களை ஓரமாக செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால். இளைஞர்கள் தொடர்ந்து சாலையிலேயே நின்றிருந்ததால் அவர்கள் மீது பேருந்து லேசாக உரசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பேருந்துக்குள் ஏறி தகாத வார்த்தைகளால் ஓட்டுநரை திட்டி வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் அனைவரும் சேர்ந்து ஓட்டுநர் ரமேஷை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். தடுக்க முயன்ற நடத்துநர் செந்தில்குமார் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதனை அருகில் இருந்தவர்கள் அதனைத் தடுக்க முயன்ற போது இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தனர். இதனிடையே அவ்வழியே சென்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்துள்ளனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர்.இந்த சம்பவத்தில் ஓட்டுநர் ரமேஷ் படுகாயமடைந்தார். நடத்துநர் செந்தில் குமார், செய்தியாளர்கள் நாடிமுத்து, அருண் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து நால்வரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீஸார், சுதர்சன், ஜனார்த்தனன் ஆகிய இருவரை நேற்று இரவு கைது செய்தனர். இன்று காலை வரை நான்கு பேரை கைது செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இரவு கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது