செடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும்! காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.

நமது வீட்டு சமையலறையின் காய்கறி தோல்கள், வெங்காயத் தோல், பழத்தோல் இவைகளை வைத்தே மண்புழு உரம் சுலபமாக வீட்டிலேயே தயாரிக்க முடியும். இந்த உரத்தை தயாரிக்க 30 லிருந்து 35 நாட்கள் எடுக்கும். அதிகமான சிரமம் எதுவும் இருக்காது. பின்வரும் குறிப்புகளை, சரியான முறையில் பின்பற்றினாலே, கடைக்குச் சென்று உரம் வாங்க அவசியமும் இருக்காது. உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா பூ செடி, மல்லிகை பூச்செடி, சாமந்திப்பூ செடி செழிப்பாக பூப்பூக்கும். காய்கறி செடிகள், பழச் செடிகள், இவைகளில் அதிகப்படியான காய்கள், பழங்கள் காய்க்க, இந்த உரம் மிகவும் உதவியாக இருக்கும். இந்த உரத்தை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

உரம் தயாரிக்க 40% காய்கறி கழிவுகள் தோல்கள், 30% சதவிகிதம் வெங்காய தோல், 15% செம்மண், 10% கடையிலிருந்து வாங்கிவந்த மண்புழு உரம், வேப்பிலை 5%, இந்த விகிதத்தில் கலவையை சேர்த்துக்கொள்ளலாம். நன்கு புளித்த தயிர் ஒரு கப். மற்ற பொருட்கள் எல்லாம் கொஞ்சம் அதிகப்படியாகவோ, குறைவாகவும் இருந்தாலும், வெங்காய கழிவுகள் அதிகமாக இருந்தால், மண்புழு உரத்தை மிக எளிமையாக தயார் செய்து விடலாம். தேவைப்பட்டால் பழ தோல்களை கூட சேர்த்துக்கொள்ளலாம். உரம் தயார் செய்ய நீங்கள் பயன்படுத்தும் காய்கறி கழிவுகளையும், பழ தோல்களையும் துண்டு துண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு மீடியம் அளவு தொட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் தொட்டியாக இருந்தாலும் சரி. அந்த தொட்டியில், சரியான முறையில் டிரைனேஜ் ஓட்டை இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். அந்த தொட்டியில், முதலில் ஒரு லேயர் செம்மண் தூவியபடி, போட்டுக்கொள்ளுங்கள். அடுத்தது மண்புழு உரம் தூவி விடவேண்டும். மூன்றாவது காய்கறி கழிவுகளை தூவியபடி போடவேண்டும். அடுத்ததாக ஒரு கப் அளவு தயிரை சேர்த்து விடுங்கள். செம்மண், மண் புழு உரம், காய்கறி கழிவு, இந்த அடுக்குகளை மீண்டும் ஒரு முறை தூவி, இறுதியாக வேப்பிலை தூவி, அதன்மேல் செம்மண் தூவி, கலவை கலப்பதை நிறைவு செய்து கொள்ளலாம். அனைத்தும் ஒரு இன்ச் அளவு உயரம் இருக்கும் அளவிற்கு தூவிவிட்டால் போதும். இறுதியாக ஒரு கப் அளவு, தண்ணீரை தெளித்து விட வேண்டும். தேவையற்ற தண்ணீர் டிரைனேஜ் ஓட்டை வழியாக வெளியே வரும். அதை எடுத்து மீண்டும் உரத் தொட்டியிலேயே ஊற்ற வேண்டும். அந்த தண்ணீரை வீணாக்காதீர்கள். தொட்டியின் அடியில் ஒரு பாத்திரம் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த கலவையானது 25 நாட்கள் வரை வெய்யிலிலேயே இருக்க வேண்டும். 25 நாட்கள் ஒரு ஜக் அளவு தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும். 25வது நாள், இந்த கலவையை ஒரு கம்பி வைத்தோ அல்லது உங்களிடம் மண்ணைக் கிளறி விட எந்த பொருள் இருக்கிறதோ, அதை வைத்து நன்றாக கிளறி விட வேண்டும். அடியில் இருக்கும் கலவை மேலே வரவேண்டும். மேலே இருக்கும் கலவை அடியில் போகும் அளவிற்கு கலந்துவிடுங்கள். அப்போது, உங்களுக்கு உரம் கருப்பு நிறமாக மாறி இருப்பதை பார்க்கலாம். கிளறி விட்டு பின்பு 5 நாட்கள், தொட்டியில் இருக்கும் உரம் அப்படியே இருக்கட்டும். மீதமுள்ள ஐந்து நாட்களும் 1/2 ஜக் அளவு தண்ணீரை ஊற்றி வரவேண்டும். அதன் பின்பு, 30 வது நாள், இந்த தொட்டியில் இருக்கும் கலவையை ஒரு பெரிய கவரில், கொட்டி வெயிலில் காய விட்டு விடுங்கள். கருப்பு நிறத்தில் உதிரி உதிரியாக மண்புழு உரம் கடைகளில் எப்படி கிடைக்கின்றதோ, நீங்கள் வீட்டில் தயாரித்த இந்த உரமும் அதே நிறத்தில், அதே பக்குவத்தில் கிடைக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் செடி வைக்கும் தொட்டியில், மண்ணோடு சேர்த்து இந்த மண்புழு உரத்தை சேர்த்து வைக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டுச் செடி செழிப்பாக வளரும். உங்கள் வீட்டு பூச்செடிகளில், நிறைய பூ பூக்கும். நிறைய காய் காய்க்கும். இந்த மண்புழு உரம் தயாரிக்க 30 நாள் தேவைப்பட்டாலும், வேலைப்பளு அதிகம் இல்லை. உரக் கலவையை, தயார் செய்து வைத்துவிட்டால், அது அப்படியே ஓரமாக இருக்கும். தினமும் தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதும். கட்டாயம் இந்த உரக் கலவை உள்ள தொட்டி, 30 நாட்களும் நேரடி வெயிலில் தான் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Exit mobile version