ஜாதக ரீதியாக உண்டாகும் தோஷங்களாலும், நம் கர்ம வினைகளாலும், நம் வாழ்வில் பல்வேறு தடைகளையும், நெருக்கடிகளையும், போராட்டங்களையும், மரண பயத்தையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சந்தித்து வருகிறோம்.
ஜாதகத்தில் நல்லநேரம் வந்தாலும் நமக்கு அந்தப் பலன்கள் கிடைப்பதில்லை.
அதற்கு என்ன காரணம்? என்று ஆராயும்போது நம் பிறப்பு ஜாதகமே அதற்கு அடிப்படையாகவும், அதில் உள்ள தோஷங்களே தடைகளுக்கு காரணமாகவும் இருந்து வருகிறது.
ஒருவரின் பிறப்பு என்பது அவருடைய கடந்த பிறவியினுடைய கர்ம வினைகளின் தொடர்ச்சிதான் என்பதால், மண்ணில் பிறப்பெடுக்கும் எல்லா ஜாதகருக்கும் அவர்களுடைய ஜாதகத்தில் ஏதேனும் ஒரு தோஷம் நிச்சயமாக இருக்கும்.
அதன் காரணமாகவே பலருக்கும் திருமணத்தில் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை, வீடு கட்டுவதில் தடை, எந்த முயற்சியை மேற்கொண்டாலும் அதிலும் தடை, ஆயுளுக்கு சோதனை என்று ஏதேனும் ஒரு சோதனை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருந்து கொண்டே இருக்கிறது.
நம் முன்னோர்கள் செய்த பாவங்களால் அவர்கள் பெற்ற சாபங்கள், நாம் நம்முடைய முற்பிறவியில் செய்த பாவங்களால் நாம் பெற்ற சாபங்கள் இப்பிறவியை நாம் எடுக்கின்ற போது அதுவே நம் தலையெழுத்தாகிறது. நம்முடைய தலையெழுத்தே நம் ஜாதகமாக கணிக்கப்படுகிறது.
ஒருவர் ஜாதகத்தை துல்லியமாக அறியும்போது அதில் உள்ள யோகங்களையும், தோஷங்களையும், எந்த எந்த இடத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதையும் மிகச்சரியாகவே கூற முடியும்.
நம் ஜாதகத்தில் மறைந்துள்ள தோஷங்களே நமக்கு அனைத்திலும் தடைகளை உண்டாக்கி வருகிறது என்ற நிலையில், அத்தகைய தடைகளை உடைக்கும் பரிகாரங்களையும் புராணங்களின் வழியாக நாம் அறிகிறோம்.
இலங்கேஸ்வரனான இராவணனை வதம் செய்ததால் இராம பிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட, அதை நிவர்த்தி செய்து கொள்ள இராமேஸ்வரத்தில் இராமபிரான் பரிகார பூஜை செய்து கொண்டதையும், பாண்டியநாட்டு மன்னன் வரகுண பாண்டியன் ஒரு அந்தனரின் மரணத்திற்கு காரணமாகிப்போனதால் அவருக்கேற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திற்கு எங்கேபோய் பரிகாரம் செய்து கொள்வது என்று அவர் யோசிக்க, அவருடைய கனவில் தோன்றிய சிவபெருமான், திருவிடை மருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயம் செல்லும் படி கூற, சோழ மன்னனின் பூமிக்குள் அவனுக்கு பகையான என்னால் எப்படி போகமுடியும் என்ற கேள்வியை பாண்டிய மன்னன் முன் வைக்க, விரைவில் இரண்டு நாட்டிற்கும் போர் மூளும் அத்தருணத்தில் அங்கே சென்று முன்வாசல் வழியே சென்று பரிகாரம் செய்து கொண்டு பக்க வாசல் வழியாக வெளியே வா” என்று சிவபெருமான் கூறியபடியே, இரு நாட்டிற்கும் போர் மூள, வரகுண பாண்டியன் தனக்குண்டான பிரம்மஹத்தி தோஷத்திற்கு அங்கு சென்று பரிகாரம் செய்து கொண்டதை நம்மால் அறிய முடிகிறது.
தோஷங்களுக்குரிய பரிகார ஸ்தலங்களாகவும், நவகிரக ஸ்தலங்களாகவும் சிவாலயங்களே உள்ளன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இப்பிறவியில் நமக்குள்ள தோஷங்களை பரிகாரங்கள் வழியே நிவர்த்தி செய்து கொள்வதற்கு, தோஷங்களின் அடிப்படையில் வெவ்வேறு ஸ்தலங்கள் உள்ளது. அதுபற்றி தெரிந்துகொண்டு நாம் அங்கே சென்று பரிகாரம் செய்துவருவது நம் வாழ்க்கையை வளமாக்கும்.
இந்த நிலையில், சகல சௌபாக்கியங்களையும் வழங்கிடும் ஆலயமாகவும், கூடுதலாக பாப, சாப தோஷங்களை நீக்கி, பயத்தினைப் போக்கி, அனைத்து செல்வங்களையும் வழங்கும் ஆலயமாகவும் திருக்கோவலூரில் உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.
அத்தகைய சிறப்பு பெற்ற இந்த ஆலயத்தில்தான்பைரவரை சிவபெருமான் தோற்றுவித்தார். சப்த கன்னிகைகள் தோன்றியதும் இங்குதான். களத்திரக்காரகன், அதிர்ஷ்டக்காரகனாகிய சுக்கிர பகவான் சாப விமோசனம் பெற்ற ஸ்தலமும் இதுதான். வாஸ்து பகவான் உருவான இடமும் இதுதான். அசூரனைக் கொன்றதால் முருகப் பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாக அதற்கு அவர் பரிகாரம் செய்து கொண்ட ஸ்தலமும் இதுதான். சனி பகவானால் உண்டாகும் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி பாதிப்புகளைப் போக்கிடும் ஸ்தலமும் இதுதான்.
தமிழகத்தில் உள்ள பரிகார ஆலயங்களில் சர்வதோஷ பரிகார ஸ்தலமாகவும், திருமணத் தடைகளை நீக்கும் ஆலயமாகவும், குழந்தை பாக்கியம் தந்தருளும் ஸ்தலமாகவும், வீடு கட்டும் முயற்சியில் ஏற்பட்ட தடைகளை நீக்கும் ஆலயமாகவும், பிரம்மஹத்தி தோஷ பரிகார ஸ்தலமாகவும், மரண பயம் போக்கி நலம்தரும் ஆலயமாகவும் திருக்கோவலூரில் உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயமே உள்ளது.
மூலஸ்தனத்தில் உள்ள வீரட்டேஸ்வரர் பைரவ சொரூபம் என்றும் கூறப்படுகிறார்.
அத்தகைய சிறப்புமிக்க வீரட்டேஸ்வரர் ஆலயம், திருக்கோவலூரின் கீழையூரில் தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்துள்ளது.
புகழ்பெற்ற சிவஸ்தலமான திருக்கோவலூர் வீரட்டேஸ்வரர் ஆலயம் 274 சைவத் திருத்தலங்களில் 222 வது திருத்தலமாகும். சிவ பெருமான் போர்க்களம் கண்ட அட்ட வீரட்டானங்களான 8 ல், இத்தலம் 2 வது ஸ்தலமாகும்.
அந்தகாசூரன் என்ற அசூரன், தான் பெற்ற வரங்களினால் மக்களையும் தேவர்களையும் வதைக்கத் தொடங்குகிறான். அவர்கள் சிவபெருமானை தரிசித்து தங்களைக் காத்தருளும்படி வேண்ட, அந்தகாசூரனை வதம் செய்திட தன் கோவத்தை ஈசன் வெளிப்படுத்திய இடம்தான் இந்த ஊர் என்பதால் கோவலூர் என்றும் திருக்கோவலூர் என்றும் இவ்வூருக்கு பெயர் உண்டானது.
இத்தலத்தின் வரலாறை அறியும்போது…
பார்வதி தேவியார், சிவபெருமானின் இரு கண்களையும் விளையாட்டாக மூடுகிறார். சூரியனும் சந்திரனுமான அவருடைய இரண்டு கண்களும் மூடப்பட்டதால் உலகமே இருளில் மூழ்கிப் போகிறது. அந்த இருளே அசூரனாக மாறுகிறது. இருள் என்பது அந்தகம் என்பதால் இருளில் தோன்றிய அந்த அசூரனே அந்தகாசூரன் என்னும் பெயர்பெற்றான்.
அந்தகாசூரன் செய்து வந்த அதர்மங்களால் அவனை வதம் செய்வதற்காக சிவபெருமான் இந்த மண்ணில் போர்க்களம் காண்கிறார். தன் கையில் இருந்த கதையினால் அந்தகாசூரனின் தலையில் அடிக்க, அவன் தலையில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து பூமியில் விழும்போது, ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் பல அசூரர்கள் உற்பத்தியாகி போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதைப் பார்க்கும் பார்வதி தேவியார் உடனடியாக காளி சொரூபம் கொண்டு அந்தகாசூரனின் தலையிலிருந்து வெளிப்படும் ரத்தத்துளிகளை தன் கையில் வைத்திருந்த கபாலம் கொண்டு அசூர உற்பத்தியைத் தடுக்கத் தொடங்குகிறாள்.
அசூரனின் தலையில் இருந்து வெளிப்பட்ட ரத்தங்கள், எட்டுத் திசைகளிலும் ரத்தக் கோடுகளாகி, குறுக்கும் நெடுக்கமாக 64 பதங்களாக விழுகிறது. அந்த 64 பதங்களிலும் தனது சக்தியால் 64 பைரவர்களை தோற்றுவித்து அந்தப் பதங்களில் இருக்கச் செய்து அவனுடைய வளர்ச்சிக்கு முடிவு கட்டும் சிவபெருமான். அவனை வதம் செய்து தேவர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார்.
இதுவே இந்நாளில் கிரகப்பிரவேச காலங்களில் செய்யும் வாஸ்துவாகும். இந்த 64 பைரவர்களே வாஸ்து பகவானாக நமக்கு காட்சி தருகின்றனர். இவர்களையே நாம், பூமிபூஜை செய்யும் நாட்களில் வணங்கி வழிபட்டு வேலைகளைத் தொடங்குகின்றோம். ஆகையால் வாஸ்து பகவானின் மூல ஸ்தலமாகவும், பைரவரின் தோற்ற ஸ்தலமாகவும் இந்த வீரட்டேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது.
அந்தகனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவராக இத்தலத்தில் உள்ள வீரட்டேஸ்வரர் போற்றப்படுகிறார். இந்த ஊரும் அந்தகபுரம் என்றும் திருக்கோவலூர் என்றும் புராணத்தில் பெயர் பெற்றுள்ளது.
இந்த ஆலயத்தின் மூலஸ்தனத்தில் பைரவ சொரூபமாகவே காட்சியளிக்கிறார் சிவபெருமான்.
இவரை வழிபட பில்லி, சூன்யம், வைப்பு தோஷங்கள் விலகும். பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். புத்திர தோஷம் நீங்கும். பாப, சாப தோஷங்கள் விலகும். காரியத் தடைகள் நீங்கும். மன நிம்மதி கிடைக்கும்.
வாஸ்துவின் தோற்றமே இந்த ஆலயத்தில்தான் என்பதால் இங்கு வந்து வழிபடுவோருக்கு வீடு கட்டும் முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகி புதிய வீடு கட்டும் வேலை வெற்றியாகிறது.
களத்திரக் காரகனான சுக்கிர பகவான் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம் இந்த ஆலயம் என்பதால், திருமணத்தில் தடையுடையவர்கள் இங்கு வந்து வேண்டிச்செல்ல திருமணம் நடந்தேறுகிறது.
நம் வாழ்க்கையில் நாம் செய்யும், நாம் சந்திக்கும் அனைத்திற்கும் நவகிரகங்களே காரகங்களாக இருக்கும் நிலையில், ஆயுள் காரகனாகவும், நம் கர்ம வினைகளுக்கேற்ப பலன்கள் தருபவராகவும் நியாயம் தவறாதவராகவும் காணப்படும் சனி பகவானுக்கு மட்டுமே சிவபெருமான் தன் ஈஸ்வர பட்டத்தைத் தந்தருளினார். அதன் காரணமாகவே சனீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார் சனி பகவான்.
சனி பகவான் ஒருவரின் முன்னேற்றத்திற்கும் வழிவகுப்பார். அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தன்னுடைய தசா புத்தி காலங்களிலும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டகச்சனி காலங்களிலும் பலன்களை அளிப்பார்.
ஒரு சிலருக்கு இக்காலங்கள் பெரும் சோதனைக்காலமாகவே இருக்கும். அந்த நிலையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள திருநள்ளாறில் உள்ள சிவனான தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டு, அங்குள்ள சனீஸ்வரரை வேண்டி வழிபட்டு வர சங்கடங்கள் நிவர்த்தியாகும்.
சனி பகவான் சிவ பக்தர்களுக்கு கருணை புரிவதுபோல், தன்னுடைய குருநாதரான பைரவ மூர்த்தியை வழிபடுவோருக்கும் கருணை புரிகிறார்.
அதன் காரணமாகத்தான் உடல் நலிவுற்றவர்களும், மரண பயம் கொண்டவர்களும், ஆரோக்கியம் வேண்டுபவர்களும் பைரவரை வழிபட்டு வருகின்றனர்.
சனி பகவானின் குரு நாதரான பைரவர் இந்த ஸ்தலத்தில்தான் சிவ பெருமானால் தோற்றுவிக்கப் பட்டார் என்பதால் இங்குள்ள வீரட்டேஸ்வரரையும், பைரவரையும், சனி பகவானையும் வணங்கி வழிபட சனி பகவானால் உண்டாகும் தோஷங்கள் விலகும். மரண பயம் போகும், உடல் நலம்பெறும், ஆரோக்கியம் அதிகரிக்கும்.
சூரபத்மனை சம்ஹாரம் செய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாக, தன் தாயாரான பார்வதி தேவியாரிடம் தான் எங்கு சென்று வழிபட்டு பரிகாரம் காண்பது என்று கேட்க, பார்வதி தேவியார் தன் கையிலிருந்த வேலை எடுத்து வீசி “இந்த வேல் எங்கே சென்று நிற்கிறதோ அங்கே செல்” என்று கூறினாராம். அந்த வேல் வந்து விழுந்த இடம் என்பதால் திருக்கோவலூர் திருக்கை வேலூர் என்றொரு பெயரும் பெற்றது.
முருகப் பெருமான் இங்கு வந்து சிவனை வழிபட அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாம். அதனால் திருக்கோவலூர் வீரட்டேஸ்வரரை வழிபட பாப சாபங்கள், தோஷங்கள் விலகுகிறது. திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717