ஒமைக்ரான் மற்றும் அதன் சவால்களை சமாளிக்க அரசு தயாராக உள்ளது என சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்றினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,05) கவர்னர் ஆர்என் ரவி உரையுடன் துவங்கியது. இசைக்கல்லூரியை சேர்ந்த ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினர் . கூட்டத்தொடரில் வணக்கம் எனக் கூறி உரையை துவங்கினார்.
கவர்னர் பேசியதாவது: புத்தாண்டு, பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தமிழக மக்கள் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி ஆக்ஸிஜனும் அத்தியாவசிய மருந்துகளும் மாநிலம் முழுவதும் கிடைப்பதை முதல்வர் உறுதி செய்தார்.மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.மெகா முகாம்கள் நடத்தி அதன் மூலம் தடுப்பூசி போடும் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 86.95 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒமைக்ரானை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. ஒமைக்ரான் மற்றும் அதன் சவால்களை சமாளிக்க அரசு தயாராக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் பரிசோதனை ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழகத்தில்தான்.
கொரோனா நிவாரண நிதியாக 543 கோடி ரூபாய் வந்த நிலையில் 541.64 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்த 27,432 குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மாநில பொருளாதாரம், மக்கள் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் கொரோனாவை தமிழக அரசு வெற்றிகரமான கட்டுப்படுத்தியது.
புதிய அரசில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.387 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ‛நம்மை காக்கும் 48′ திட்டத்தின் கீழ் விபத்திற்குள்ளான 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 42.99 லட்சம் மக்கள் பலன்பெற்றுள்ளனர்.
மழை வெள்ளத்தால் சாலை உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மழை வெள்ள காலங்களில் அணையில் இருந்து நீர் திறப்பதை அரசு முறையாக கையாண்டுள்ளது. நிவாரண பணிகளை முதல்வரே முன்னின்று முடுக்கிவிட்டுள்ளார். சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தரமான செயல்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சமாளிக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் உள்ளார். முதல்வரின் முகவரி திட்டத்தின் மூலம் 2.99 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதி வருவாயை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். 2030ம் ஆண்டில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பணியாற்றுகின்றன.
அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு இருக்கும். அதேநேரத்தில் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். முல்லை பெரியாறு அணையில் முழு கொள்ளளவான 152 அடிக்கு நீரை தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு ஒரு போதும் மத்திய அரசு அனுமதி தரக்கூடாது.
இலங்கை சிறையில் உள்ள 66 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதை 2024 ம் ஆண்டு வரை நீடிக்க வேண்டும்.தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கல்வி நிறுவனங்கள் அருகே போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடர்வதில் அரசு உறுதியாக உள்ளது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் திட்டத்தின் கீழ் அனைத்திலும் தமிழ் மொழியின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் 1956 புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்.
‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது. ஆசிரியர்கள் அனைவருக்கும் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். தமிழகம் முழு அரசு பள்ளிகளை நவீனப்படுத்தும் சிறப்பு திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். 24344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தை சேர்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும்.
தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை வழக்குகளில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படும்
500 கோடி ரூபாயில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படும். 10 ஆண்டுகளில் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும். தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்களில் பாடப்படுகிறது; தனியார் நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 150 ஏக்கர் பரப்பளவில் ஒரகடத்தில் மருத்துவ பூங்காவையும், தூத்துக்குடியில் 1,100 ஏக்கரில் பர்னிச்சர் பூங்காவை முதல்வர் துவங்கி வைப்பார். இதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது.தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் இலவச பஸ்களில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர்.அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.
ஜெய்ஹிந்த்
கவர்னர் தனது உரையை, ‘நன்றி’ ‘வணக்கம்’ ‘ஜெய்ஹிந்த்’ எனக்கூறி முடித்தார்.