விளக்கேற்றுவோம் யானைகளின் ஆன்மா சாந்தியடைய! இன்று மாலை 6 மணிக்கு !

குரூர புத்தி படைத்த ஒருவன் வெடி வைத்துக் கொடுத்த அன்னாசி பழத்தைச் சாப்பிட்ட கர்ப்பிணி யானை கேரளாவில் இறந்து உள்ள சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது.கேரளாவில் கொடூரமாக கொல்லப்பட்ட கர்ப்பிணி யானை மற்றும் இதுவரை இறந்த யானைகளின், ஆன்மா சாந்தி அடைய, இன்று (ஜூன் 7) மாலை 6:01 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சைலன்ட் வேலி பகுதி காட்டு யானைகள் நிறைந்த இடம். இங்கிருந்து உணவு தேடி வெளியே வந்த பதினைந்து வயது மதிக்கத்தக்க கர்ப்பம் தரித்த யானை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. பொதுவாக காட்டு யானைகள் ஊருக்குள் வருவதில்லை. ஆனால் இந்த யானை கர்ப்பமாக இருந்ததால் பசி அதிகமாகி வெளியே வந்து இருக்கிறது.

வெடிபொருள் நிரப்பிய அன்னாசி பழத்தை ஒரு கொடூர மனித மிருகம் அந்த யானைக்குக் கொடுத்துள்ளது.ஏதும் அறியாத அந்த அப்பாவி யானை கொடுத்தவரை நன்றியுடன் பார்த்தவாறு, வெகு வேகமாக பழத்தை துதிக்கையில் ஏந்தி வாயில் போட்டது தான் தாமதம், யானையின் வாய், தாடை, நாக்கு எல்லாம் சிதறியது.

ரத்தம் சொட்டச் சொட்ட செய்வதறியாது தவித்த யானை அங்குமிங்கும் ஓடியது. ‘இது போன்ற நேரத்தில் யானைக்கு கோபம் வரும். ஆனால் இந்த யானை யாரையும் தாக்கவில்லை; எந்தப் பொருளையும் சேதப்படுத்தவில்லை. தெய்வீகமானதாகத் தெரிந்தது’ என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

வயிற்றில் இருந்த குட்டிக்காக வேறு உணவுப் பொருட்களைச் சாப்பிட முயன்று வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக அதனால் எதையுமே சாப்பிட முடியவில்லை. வலியைக் குறைக்கவும் வேதனையை மறக்கவும் ஊருக்கு வெளியே ஓடிய வெள்ளியாற்றில் இறங்கி வாய்ப் புண்ணால் ஏற்பட்ட எரிச்சலைத் தணிக்க முயற்சித்திருக்கிறது. ஒன்று… இரண்டு… மூன்று நாட்கள்… தண்ணீரில் துதிக்கையை பாதி அளவில் மூழ்க விட்டு கண்ணில் கண்ணீர் பெருகப் பெருக உயிரை விட்டது.

தன் வயிற்றில் வளர்ந்த குட்டியைப் பார்க்க முடியாத சோகத்தை எல்லாம் கண்ணீராக்கி ஆற்று தண்ணீரில் கலந்து விட்டது. ஒரு யானை ஆற்றுக்குள் ஒரே இடத்தில் மூன்று நாட்கள் நின்று கொண்டிருக்கிறது என்ற தகவல் கிடைத்து, ஆற்றுக்குள் இறங்கி கும்கி யானைகளுடன் மீட்க முயற்சித்த போதுதான் வனத் துறையினருக்கு யானை ஜல சமாதியானது தெரிய வந்தது. மீட்க வந்த யானைகள் தம் தும்பிக்கையால் எழுப்ப முயன்று அது முடியாது எனத் தெரிந்ததும் கரையில் நின்று இருந்தவர்களுடன் சேர்ந்து கண்ணீர் விட்டன.

யானைக்கான பிரேதப் பரிசோதனை நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. யானையின் வயிற்றுக்குள் இருந்து, இறந்த நிலையில் குட்டி யானையை எடுத்தபோது பரிசோதனை நடத்திய டாக்டர்களும், வனத்துறையினரும், அதிகாரிகளும் கூட வாய்விட்டுக் கதறினர். மனித நேயம் மிக்கவர்களுக்கு இச்செய்தியைக் கேட்டதும் சோறு இறங்கவில்லை; துாக்கம் பிடிக்கவில்லை.

பசுவையும் யானையையும் தெய்வமாக வழிபடுகிறோம் நாம். சாதாரணமாகவே சாலையில் பசுவைப் பார்த்தால் அதைத் தொட்டுக் கும்பிடுகிறோம். கோவில்களில் யானையிடம் ஆசி வாங்கினால் விநாயகப் பெருமானே ஆசி வழங்கியதாக நினைத்து ஆனந்தப்படுவோம். விநாயகரின் அம்சமாக கருதப்படும் யானையை அதுவும் கர்ப்பிணியைக் கொன்றவர்களை என்னவென்று சொல்வது…

இந்தச் சம்பவத்தை நினைத்து துக்கப்படுவோர் பலர்; துாக்கம் தொலைத்தோர் பலர்; வேதனையில் மனம் வெதும்புவோர் பலர். ஏற்கனவே ஏராளமான உயிர்களை கொரோனாவுக்கு பலி கொடுத்து வரும் நம் மனித குலம், மேலும் துன்பங்களுக்கு ஆளாகாமல் இருக்கவும் இறந்த தாய் மற்றும் குட்டி யானையின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவும், இதுவரை இறந்த யானைகளின் ஆன்மா சாந்தி அடையவும், (ஜூன் 7 ) ஞாயிறு மாலை 6:01 – 6:15 மணிக்குள் வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு முன் ஒரு விளக்கை ஏற்றுவோம். இறந்த யானைகளின் ஆன்மா சாந்தியடைய மனமுருகி வேண்டுவோம்.

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்றகரும்புள்ளே காட்டி…
வேடமும் நீறும் விளங்க நிறுத்தி
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி…
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து தத்துவ
நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

Exit mobile version