காவல்துறையை தன் கைப்பாவையாக நடத்தி, காவல்துறையின் மாண்பை சீர்குலைக்கும் தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் 

தமிழகத்தில் போதை நடமாட்டத்தை, பாலியல் குற்றங்களை தீவிரமாக கட்டுப்படுத்தி தமிழக மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது காவல்துறை. ஆனால் காவல்துறையின் கைகளை கட்டி ஆளும்கட்சி சீரழித்து வருகிறது. ஒருதலைப்பட்சமாக செயல்பட வைத்து காவல்துறையின் மாண்பை சீரழித்துள்ளது. இம்மாதம் பிப்ரவரி 4 ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையை காக்க நடைபெற்ற அறப்போராட்டத்தை தடுக்க பல சட்டவிரோதமான வழிகளில் தமிழக அரசு செயல்பட்டது. பலரை பொய்யான குற்றச்சாட்டுகளில் வலுக்கட்டாயமாக கைது செய்ய வைத்தது.

பெரம்பலூர் மாவட்டம் மலையப்ப நகரில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அருண் என்ற பொறுப்பாளரை அழைத்து சென்று 14 கி.மீ. தொலைவில் சாலை மறியல் செய்தார் என்று வழக்கு போட்டனர். அதே ஊரில் இருக்கும் செல்வக்குமாரிடம்சாப்பிட போவதற்கு என இரு சக்கர வாகனத்தை வாங்கி சென்று அதனை வைத்து அவர் சாலை மறியல் செய்ததாக அவர் மீது பொய் வழக்கு போட்டு வண்டியை பறிமுதல் செய்துள்ளனர். வீட்டில் நெசவு செய்து கொண்டிருந்த தென்காசி மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர் ஆறுமுகத்தை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். சிவகங்கையில் அக்னி பாலாவை நள்ளிரவில் கைது செய்தது. நீலகிரியில் எட்டு பேர் மீது போக்சோ பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எந்த பிரிவுகளில் வழக்கு போட்டால் உடனே ஜாமீன் கிடைக்காதோ, அந்த பிரிவுகளில் எந்த முகாந்திரமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்து சட்டத்தை வளைக்கும் தங்கள் திறமையை காட்ட காவல்துறை தமிழகத்தில் செயல்பட வைக்கிறது தமிழக அரசு. தற்போது அடுத்த கட்டமாக இந்து முன்னணி தலைவர்கள் மீது தாங்கள் பதிந்த வழக்கில் சம்மன் அனுப்பி விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்க வைக்கின்றனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்கள் பிப்ரவரி 14 அன்று கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பேசியதற்கு வழக்கு போட்டது காவல்துறை. அதன்மீது விசாரணை என்று இரண்டு நாட்கள் இழுத்தடித்தது. மாநில தலைவர் வருகிறார் என்பதால் அவரை காண தொண்டர்கள் வந்தததற்கும் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. தலைவரை காண வந்த தொண்டர்கள் மீதும் வழக்கு பதிந்துள்ளது. அது போல திருப்பரங்குன்றம் மலையை காப்போம் என்ற பாடல் சமூக வலைதளத்தில் பதியப்பட்டது. அதன் மீது இந்து கலை இலக்கிய முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளது. இந்து மதத்தை, இந்த பாரத தேசத்தை இழிவுப்படுத்தி பொது கூட்டத்தில் பேசியவர்கள், சமூக வலைதளத்தில் பதிவு போட்டவர்கள் மீது கொடுத்த புகார் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக சுவாமி ஐயப்பன் நம்பிக்கையை இழிவுபடுத்திய இசைவாணி, சிவபெருமானை அநாகரிகமாக பேசி பதிவிட்ட யூ-டூ-புருட்டஸ், கந்தசஷ்டி கவசத்தை கேவலப்படுத்தும் நோக்கத்துடன் பேசிய கருப்பர் கூட்டம் எனும் யூடியூப்பர்கள். திருப்பரங்குன்றம் மலையை வக்ஃப் வாரிய சொத்து என்று உண்மைக்கு புறம்பாக கூறி பிரச்சினையை ஏற்படுத்திய, மதக்கலவரத்தை உண்டாக்க சதி செய்த திமுக எம்எல்ஏ அப்துல் சமது, எம்பி நவாஸ் கனி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் தமிழகத்தில் பதட்டத்தை ஏற்படுத்திட ஆளும் கட்சியே இத்தகைய செயல்களை தூண்டி வருகிறது என்பது பொது மக்களின் கருத்து. அதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆளும் கட்சியான திமுக மதப் பிரச்சனையை மொழி பிரச்சினையை தூண்டி பிரிவினைவாத கருத்துக்களை எழுப்பி வருகிறது. ஆளும் கட்சியின் தூண்டுதலால் காவல்துறை தவறாக வழிநடத்தப்படுகிறது. தமிழகத்தை கலவர பூமியாக்க தமிழக அரசே காவல்துறையை ஈடுபடுத்தும் அபாயத்தை இதன் மூலம் சுட்டிக்காட்டுகிறோம். எனவே மத்திய அரசும், மத்திய புலனாய்வு துறையும் விழிப்புடன் செயல்பட்டு தமிழக அரசின் தவறான போக்கை கட்டுப்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்…

Exit mobile version