ஈரானை கதறவிட்ட டிரம்ப்…! ஈரான் கரன்சி வரலாறு காணாத வீழ்ச்சி.. அச்சத்தில் வளைகுடா நாடுகள் …

Donald Trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் ஈரானுக்கு முதல் அடி விழுந்துள்ளது. ஈரானின் பயன்பாட்டில் உள்ள கரன்சியான ரியால் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஈரானுக்கு பெரிய அளவில் சிக்கலாக மாற வாய்ப்புள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை வீழ்த்தி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த நிலையில் தற்போது 2வது முறையாக அந்த பொறுப்பை ஏற்க உள்ளார்.

இன்று தேர்தல் முடிவு வெளியாகி டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்தபோதே சர்வதேச அளவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ தொடங்கின. குறிப்பாக டாலருக்கு நிகரான ஒவ்வொரு நாடுகளின் கரன்சி மதிப்பு என்பது ஏற்றம், இறக்கத்தை அடைந்தன.

அந்த வகையில் ஈரான் நாட்டின் கரன்சி மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஈரானில் பணம் ரியால் என அழைக்கப்படுகிறது. இன்று டொனால்ட் டிரம்ப் வெற்றியை நோக்கி சென்ற நிலையில் டாலருக்கு நிகரான ரியால் 703,000 ஆக சரிந்துள்ளது. இந்த சரிவு வரலாற்றிலேயே முதல் முறையாகும். கடந்த ஜூலை மாதம் ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பதவியேற்ற போது, டாலருக்கு நிகரான ரியால் 584,000 என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது703,000 என்ற அளவில் சரிந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் போக்கு தான். இருநாடுகள் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது. அதோடு டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். இஸ்ரேல் – ஈரான் மோதலில் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பக்கம் தான் நிற்கிறார். அதோடு ஈரானின் அணுஉலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்க வேண்டும் என்று தனது தேர்தல் பிரசாரங்களில் கூட டொனால்ட் டிரம்ப் கூறினார். இது ஈரானுக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே டாலருக்கு நிகரான அந்த நாட்டின் ரியால் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்திருப்பது ஈரானை மேலும் கவலையடைய செய்துள்ளது. அதோடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானுக்கு எதிர்கொள்ளவிருக்கும் புதிய சவால்களை காட்டும் வகையில் இது அமைந்துள்ளது.

Exit mobile version