கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இலவச தரிசனம் 12-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், முன்னதாக ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாஸம் என்னும் தங்கும் விடுதியிலும், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சிலும் மொத்தம் 22 ,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. பின்னர், இந்த டோக்கன்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 7,000 தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. தற்போது இலவச தரிசனத்திற்காக 15 ,000 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வரும் 12-ந்தேதியில் இருந்து ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீ வெங்கடாசலதியை தரிசனம் செய்ய வழங்கப்படும் இலவச அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதற்கான டோக்கன்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என தேவஸ்தானம் கூறுயுள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்கள் பெற காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு வரும் 11-ந்தேதி மாலையுடன் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு, 12-ந்தேதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்துக்காக அனுமதி வழங்கப்படும்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ள முடிவிற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா பரவல் குறைந்ததும், பக்தர்களுக்கு சுவாமி தரிசன அனுமதி பற்றி தகவல் தெரிவிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.