தமிழ்நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. வீடுகளில் மட்டுமல்லாது பொது இடங்களிலும் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் இடங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபனிடம் நகராட்சியில் வைக்கப்பட்டுள்ள இருபதுக்கும் மேற்பட்ட சிலைகள் எந்த வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது, எந்த பகுதியில் கரைக்கப்படுகிறது என கேட்டு அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். திருக்கோவிலூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அங்கு வைக்கப்படும் சிலைகளை;
விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூர் அந்திலி ஏரி பகுதியில் கரைக்கப்படும் இடத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் சிலை கரைக்கப்படும் ஏரி பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள காவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
இரண்டு மாவட்ட எஸ்பிக்கள் ஒன்றிணைந்து சிலை வைக்கும் இடங்கள் மற்றும் கரைக்கும் இடங்களை பார்வையிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
