சமூக நீதி ஆட்சியில் பிணத்தை புதைக்க முடியவில்லை ! மயானத்துக்காக போராடும் பட்டியல் சமூக மக்கள்.!
’பல தலைமுறைகளாகத் தாங்கள் மயானமாகப் பயன்படுத்திவந்த நிலத்தை, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், அந்த நிலத்தை மீட்க கால் நூற்றாண்டுக்காலமாக அரசிடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை…’ எனவும் வேதனை தெரிவிக்கின்றனர் பட்டியல் சமூக மக்கள்!ஈரோடு மாவட்டம், கண்ணுடையாம்பாளையம் கிராமத்தில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 700 பேர் வசித்துவருகின்றனர். இந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக இவர்கள் பயன்படுத்திவந்த மயானப் பகுதியை, ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் ஆக்கிரமித்துவைத்திருப்பதாகக் குமுறுகின்றனர் கிராம மக்கள்.
மண்ணுக்குள் போகிறபோதுகூடப் பிரச்னையாக இருக்கிறது!”
இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்துப் போராடிவரும் உதயகுமாரிடம் இது குறித்துப் பேசியபோது, “பல தலைமுறைகளாகக் கண்ணுடையாம்பாளையத்தில் சர்வே எண் 315-ல் இருக்கும் சுமார் 12 சென்ட் அளவிலான அரசுப் புறம்போக்கு நிலத்தை, மயானமாக நாங்கள் பயன்படுத்திவருகிறோம். எங்கள் மயானத்தை ஒட்டி, ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் விவசாய நிலம் இருக்கிறது. அவர் எங்கள் மயானத்துக்குச் சொந்தமான சுமார் 6 சென்ட் நிலத்தைப் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துவைத்திருக்கிறார். ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், எங்களாலும் அவரை எதிர்த்து போராட முடியவில்லை. இதனால், மீதமுள்ள 6 சென்ட் நிலத்தில்தான் உடல்களைப் புதைத்து வந்தோம். இந்த 6 சென்ட் நிலத்திலும் பெரும்பாலான பகுதி பாறையாக இருப்பதால் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையே மீண்டும் தோண்டி, அங்கிருக்கும் எலும்புகளை அகற்றிவிட்டு அதே இடத்தில் உடல்களை அடக்கம் செய்யவேண்டிய அவலநிலையில் இருக்கிறோம்.
இந்த நிலையில், ‘பாறைகள் நிரம்பிய இந்த 6 சென்ட் நிலமும்கூட எனது தோட்டத்துக்குச் செல்லும் பாதை. எனவே, அங்கும் உடல்களைப் புதைக்கக் கூடாது’ என்று 2007-லிருந்து பிரச்னை செய்துவருகிறார் வேலுச்சாமி. இதனால் எங்கள் சமூகத்தில் ஒவ்வொரு முறை இறப்பு நிகழும்போதும், பிரச்னையுடனேயே பிணத்தைப் புதைக்கவேண்டியிருக்கிறது. மண்ணுக்குள் போகிறபோதுகூட பிரச்னையாக இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 9 பேர் இறந்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பெரிய பிரச்னைக்குப் பிறகுதான் உடல்களை அடக்கம் செய்திருக்கிறோம்.
கால் நூற்றாண்டாக மனு கொடுத்து, சலித்துவிட்டோம்!”
கடைசியாக விஜயராகவன் என்பவர் மே 25-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்யவிடாமல் வேலுச்சாமி குடும்பத்தினர் தடுத்து பிரச்னை செய்தனர். காலையில் தொடங்கிய இந்தப் பிரச்னை, மாலை வரை நீண்டது. காவல்துறையின் தலையீட்டுக்குப் பின்னர்தான், ஒருவழியாக அவரது உடலை அடக்கம் செய்ய முடிந்தது. அப்போதும்கூட வருவாய்த்துறை உயரதிகாரிகள் ஒருவர்கூட அங்கு நேரில் வரவில்லை.
வேலுச்சாமி ஆக்கிரமித்து வைத்திருக்கும் எங்கள் மயான நிலத்தை மீட்டுத் தரவும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்படியும் ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் வரை அனைவருக்கும் கடந்த கால் நூற்றாண்டாக மனு கொடுத்து, சலித்துவிட்டோம். இதுவரை ஒரு அதிகாரிகூட இங்கு நேரில் வந்து ஆய்வு நடத்தியதில்லை. வேலுச்சாமி ஆதிக்கச் சாதி என்பதுடன், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராகவும் இருப்பதால் அதிகாரிகளும் அவருக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். நாங்களும்தான் காலங்காலமாக தி.மு.க-வுக்கு வாக்களிக்கிறோம். ஆனால், அரசும் எங்களை மக்களாகக் கருதவில்லை; அதிகாரிகளும் கருதவில்லை. காரணம், நாங்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்” என்றார் ஆதங்கத்துடன்.
இது தொடர்பாக, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி நம்மிடம் பேசுகையில், “உறவினர் இறப்பின் வலியைவிடவும் ‘எப்படி இந்த உடலைப் புதைக்கப்போகிறோம்… என்ன பிரச்னை வருமோ?’ என்ற அச்சத்துடனேயே இருக்கவேண்டி யிருக்கிறது. உயிரோடு இருக்கும்போதுதான் நாங்கள் ஒதுக்கப்படுகிறோம். இறந்த பின்பு, கண்ணியமாகப் பிணத்தைப் புதைக்கக்கூட விடாமல் சாதி தடுக்கிறது. எல்லாக் கிராமங்களிலும் மயானங்களில் சுற்றுச்சுவர், மின்சார வசதி, தண்ணீர் வசதி, இறுதிச்சடங்குக்கான அறை ஆகிய வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், எங்கள் மயானத்தில் மட்டும் இது போன்று எந்த வசதியும் செய்து கொடுக்காமல் இப்போதும் புதர்மண்டியே கிடக்கிறது. சுற்றுச்சுவர் கட்டித் தந்தால்தான் ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியும்” என்றார்.
‘இறந்த உடல்களைக்கூடப் பிரச்னையில்லாமல் புதைக்க முடியவில்லை’ என்று சொல்லும் இந்த மக்களின் கண்ணீரைத் துடைக்குமா சமூக நீதி அரசு? Source : vikatan
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















