இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

கோவையில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர், மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் போத்தனூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பின் உக்கடம் நகர தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் போத்தனூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.

படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பிற இந்து கட்சிகள் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.

பின்னர் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து இந்த அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டனர். முன்னதாக பா.ஜ.க. தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் காயம் அடைந்த ராதாகிருஷ்ணனை அரசு மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதே போன்று பா.ஜ.க. நிர்வாகிகள் மீது பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டு வருகின்றனர் என்றும் குறிப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நன்றி :- கதிர் நியூஸ்

Exit mobile version