மனம் நொந்து ராஜினாமா செய்த விஏஓ துரை பிரிதிவிராஜ்! அரசு பணியை விட சமூக பணியே பெரிது!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை பகுதியை சேர்ந்தவர் துரை பிரிதிவிராஜ். அருப்புக்கோட்டையில் 2011ம் ஆண்டு முதல் விஏஓ-வாக பணிபுரிந்து வந்தார். இவர், ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்வது, விழாக்களில் வீணாகும் உணவுகளை சேகரித்து தெருவில் வசிப்போருக்கு வழங்குதல், ரத்ததானம் வழங்குதல் போன்றவை மட்டுமின்றி ஆதரவற்றோர் இல்லமும் நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் வகித்த பதவியில் அந்த ஊரில் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை என மனம் நொந்த விஏஓ தனது பணியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து துரை பிரிதிவிராஜ் எழுதிய கடிதத்தில், குடும்ப சூழ்நிலைக்காக சுயநலத்திற்காகவும் அறக்கட்டளை சார்ந்த அறப்பணி சமூக பணிகளுக்காக பொது நல நோக்கத்திற்கு எனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் நிம்மதி பெருவாழ்வு வாழவே இந்த ராஜினாமா கடிதம்.வேறு எந்த வித அழுத்தமோ அச்சுறுத்தலோ என்பது இந்த முடிவுக்கு காரணம் இல்லை.
எனது உணர்வுகளுக்கு மதிப்பளித்த உறவுகளுக்கு நன்றி. அரசு பணி தொடராவிட்டாலும் அறப்பணி எந்த சூழ்நிலையிலும் தொடரும். அரசியல் சார்ந்த உறவுகள் அரசு துறை உறவுகள் அனைவருடன் இணக்கமாக பணிபுரிந்து, அவர்களும் என்னுடன் இணைந்து இயன்றதை இயலாதவர்களுக்கு அறப்பணியாற்றும் பாக்கியம் பெற்றவன் நான். சமூகப் பணி செய்வதற்கு அரசு பணி தடையாக இருப்பதாக தோன்றியது.
சமூகப்பணி பெரிது!
சமூகப்பணியா, அரசு பணியா என கேள்வி எழுந்தபோது சமூகப்பணியே பெரிதாக தோன்றியது. அதனால் அரசு பதவியை ராஜினாமா செய்து விட்டு சமூகப் பணியில் ஈடுபட உள்ளேன். நான் தெரிவித்த கருத்தை சரியான முறையில் கொண்டு சேர்க்காமல் சில மீடியா நண்பர்கள் செய்த தவறு மிகுந்த மன வேதனை. அரசு பணி தவிர்த்து அறப்பணி மற்றும் குடும்ப நலன் சார்ந்த பணியினை பார்க்க போகும் எனது முடிவில் எந்த வித மாற்றமும் இல்லை. உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.