லவ் ஜிகாத் என்று சந்தேகிக்கப்படும் ஒரு சம்பவத்தில் கிறிஸ்தவ பெண் ஒருவர் தனது மகளைக் காப்பாற்றித் தருமாறு விஷ்வ ஹிந்து பரிஷத்தை நாடியுள்ளார். தனது மகளை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொல்லை தருபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த அந்தப் பெண் விஹெச்பிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து விஹெச்பி மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 47 வயதான முகமது ஷெரீப் சித்திக் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் வசித்து வரும் கிறிஸ்தவ பெண்ணுக்கு 27 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இவருக்கு சூரத்கல் அருகே காட்டிப்பள்ளா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது ஷெரீப் என்பவர் கடந்த நான்காண்டுகளாக போதைப் பொருள் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இவருக்கு கோவா, மகாராஷ்டிரா மற்றும் மங்களூர் என மூன்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் இளம்பெண்ணை போதைப் பொருளுக்கு அடிமையாக்கி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனது மகளை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற ஷெரீப் அவருக்கு போதைப்பொருள் கொடுத்து அடிமையாக்கி தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அந்த கிறிஸ்தவ பெண் கூறியுள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், கிறிஸ்தவ மதத் தலைவர்களிடம் உதவி கோரியும் தனது மகளை மீட்க முடியவில்லை என்று அந்தப் பெண் கூறியுள்ளார். இதையடுத்து தனது மகளை மீட்டுத் தருமாறு மங்களூரு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தை பெற்ற விஸ்வ ஹிந்து அமைப்பினர் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாரை நேரில் சென்று சந்தித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீட்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சூரத்கல் காவல் நிலைய காவல்துறைக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தொழில் அதிபர் முகம்மத் ஷெரீபை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரித்ததில் அவர் ஏற்கனவே மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் என்பதும் இளம் பெண்ணிற்கு போதைப் பொருள் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் உறுதியாகி உள்ளது. Source : TOI