கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள நரியந்தல் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் சாலையிலேயே கழிவுநீர் தேங்கியிருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும், நீர் செல்வதால் அடிக்கடி சாலைகள் பெயர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதாக கோரி கிராம மக்கள் தென்னை மரத்தை சாலையில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக திருக்கோவிலூர் சங்கராபுரம் பகுதியில் நரியந்தல் கிராமத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கழிவு நீர் கால்வாயை புதிதாக அமைக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் இடமும், ஊராட்சி செயலாளரிடமும் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கழிவுநீர் கால்வாய் நீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மேலும் கழிவுநீர் கால்வாய் அருகாமையில் தான் வார்டு உறுப்பினர் வீடு உள்ளது என்றும் இந்த வழியாகத்தான் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் செல்கின்றனர். ஆனால் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த திருப்பாலப்பந்தல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்,அதன் அடுத்த பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர், சாலை மறியல் போராட்டத்தின் போது பொதுமக்கள் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
