தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும்,தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும், காவல்துறை விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார்.
தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் திமுக அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















