மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் பர்ஷால் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாதுஷேக். இவர் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்.
நேற்று முன்தினம் இரவு, அவரை முக மூடி அணிந்த 4 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர்.
பாது ஷேக் கொல்லப்பட்ட தகவல் அறிந்தவுடன், அவரது சொந்த கிராமமான பாக்துய் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவேசம் அடைந்தனர்.
அதே கிராமத்தில் சிலரின் வீடுகளுக்கு தீவைத்தனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. அதன் பிறகு வீடுகளுக்குள் தேடி பார்த்ததில், தீயில் கருகி இறந்த நிலையில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு, தீ விபத்துக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஜக மாநில கட்சித் தலைவர் சுகந்தா மஜும்தார் குழு சந்தித்து பேசியுள்ளனர் .
அமித்ஷாவை சந்தித்த பின் பேசிய மஜும்தார், மேற்கு வங்காள சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்ய பாஜக சார்பில் ஒரு குழு பிர்பும் பகுதிக்கு செல்லும் எனத் தெரிவித்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















