நீட் தேர்வு விவகாரம் தமிழகத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனிடம் நீட் தேர்வு குறித்தும் நீட் தேர்வு தொடர்பாக ஆளுநர் கூறிய கருத்து சம்பந்தமாக செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர்
கேள்விகளுக்கு பதிலளித்த வானதி சீனிவாசன் திமுகவிற்கு பல கேள்விகளை முன்வைத்தார்
அவர் கூறியதாவது : நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் நபர்களுக்கு நான் சில கேள்விகளை வைக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமல்படுத்தப்பட்டது தான் நீட் தேர்வு என்பது உங்களுக்கு தெரியும்தானே.. அப்படி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் நீட் தேர்வை தமிழ்நாட்டில் மட்டும் ரத்து செய்வது சாத்தியமா?
இரண்டாவது கேள்வி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம் என்று கூறியவர் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின். பொதுப் பட்டியலில் கல்வி இருக்கும் போது, நீட் தேர்வை எப்படி ரத்து செய்வீர்கள் என்று கேட்ட போது, அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொன்னவர் இன்றைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இப்போது திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட நீட் தேர்வை ரத்து செய்யாமல் இருப்பது ஏன்?
ஒருவேளை, முதல்வர் ஸ்டாலின் மத்தியில் அரசியல் மாற்றம் வரும் என்று நினைத்து காத்திருந்தால் அவர் கனவு காண்கிறார் என்று அர்த்தம். ஒருபோதும் மத்தியிலே அரசியல் மாற்றம் இனி நடக்காது. மீண்டும் மீண்டும் பா.ஜ.க தலைமையிலான அரசு தான் அமையப் போகிறது. எனவே பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, மீண்டும் ஒரு பொய் வாக்குறுதியை கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறது.
மாணவ சமுதாயத்தை திமுக தவறாக வழிநடத்தி வருகிறது. நீட் தேர்வில் தோல்வியடைந்தால் நீங்கள் உயிரிழக்கலாம். அந்த உயிரிழப்புக்கு பின்னர் நீங்கள் புகழப்படுவீர்கள் உங்கள் பெற்றோருக்கு நிதியுதவி கிடைக்கும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு.
எல்லாவற்றுக்கும் நீங்கள் காரணமாக இருந்துகொண்டு இப்போது ஆளுநரையும், மத்திய அரசையும் குறைகூறினால் எப்படி? நீங்கள் (அரசு) அனுப்பி வைத்த நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்து போட்டுதானே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். ஆகவே ஆளுநர் மீது பாய்வதை விட்டுவிட்டு வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள் என வானதி சீனிவாசன் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















