பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மகன் பேசுகையில், அங்கு பயணிகளை தாக்கிய பயங்கரவாதிகள் முஸ்லீம் – இந்துக்கள் என தனியாக பிரிக்க சொன்னதை கேட்டதாக கூறியுள்ளார்ஜ ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு முகமைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், தாக்குதலில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) உட்பட பல்வேறு விசாரணை முகமைகள் இந்தத் தாக்குதல் குறித்து ஆராய்ந்து வருகின்றன.
உயிரிழந்தவர்களில் குஜராத் மாநிலம் சூரத் நகரின் வராச்சா பகுதியை சேர்ந்த ஷைலேஷ் கல்தியா என்பவரும் ஒருவர். அவரும் தனது குடும்பத்தோடு பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள்ளார். தனது தந்தை ஷைலேஷ் கல்தியா பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததைஅவரது மகன் நக்ஷ் கல்தியா சம்பவ இடத்தில் இருந்து பார்த்துள்ளார் .
அந்த கோர நிகழ்வு பற்றி சிறுவன் கூறும்போது சில அதிர்ச்சி தகவலையும் கூறினான். சிறுவன் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ”மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காமில் நாங்கள் இருந்தோம். அப்போது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. பயங்கரவாதிகள் அப்பகுதிக்குள் நுழைந்ததை நாங்கள் உணர்ந்து மறைந்து இருந்தோம்.
ஆனால், அவர்கள் எங்களை கண்டுபிடித்தனர். இரண்டு பயங்கரவாதிகளை நான் நேரில் பார்த்தேன். அவர்களில் ஒருவர் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களை தனியாக பிரிந்து இருக்கும்படி கூறியதை நான் கேட்டேன். பிறகு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு சென்றனர். உள்ளூர்வாசிகள் உடனடியாக வந்து, நாங்கள் கீழே இறங்கிய ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்திய இராணுவம் வந்துவிடும் எனக் கூறினார்கள். பயங்கரவாதிகள் என் தந்தையை பேச விடவில்லை.” என்று இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவன் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறினான்.
அவரது மனைவி ஷீத்தல் கல்தியா ANI செய்தியாளரிடம் கூறும்போது, ” துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் ஒளிந்து கொள்ள ஓடி வந்தோம். ஆனால், அந்த பகுதி முழுவதையும் வெளிப்படையாக இருந்ததால் மறைந்திருக்க இடமில்லை. திடீரென எங்கள் எதிரில் ஒரு பயங்கரவாதி நின்றான். இந்துக்களை ஒருபுறமும், இஸ்லாமியர்களை மறுபுறமும் பிரிந்து நிற்குமாறு கட்டளையிட்டான். எல்லாருமே ஒரு நீளமான துப்பாக்கியை வைத்திருந்தார்கள். சுட்டுக் கொகொல்வதற்காக அங்கேயே நின்றுகொண்டிருந்தான். 6-7 பேரை எங்களுக்கு முன்னால் சுட்டுக் கொன்றான். சுடப்பட்ட 2-3 நிமிடங்களுக்கு மேல் அந்த ஆட்கள் உயிர் பிழைக்கவில்லை. காஷ்மீரில் ஹிந்து-முஸ்லிம் மோதலை நாங்கள் அனுபவிக்கவில்லை. பாகிஸ்தானியர்கள்தான் அங்கு மோதல்களை உண்டாக்குகிறார்கள் என்று நான் உணர்கிறேன்.” என தகவல்களை தெரிவித்தார்.
இது குறித்து மற்றொரு சுற்றுலா பயணி ஏக்தா திவாரி கூறுகையில், “எங்கள் குழுவில் 20 பேர் இருந்தோம். ஏப்ரல் 13 அன்று ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தோம். ஏப்ரல் 20 அன்று பஹல்காம் சென்றோம். அன்று எங்கள் குழுவினருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. அதனால், தாக்குதல் நடந்த பைசரன் பகுதிக்கு சுமார் 500 மீட்டர் முன்பாகவே அனைவரும் இறங்கினோம். சுற்றிலும் இருந்த சிலரின் நோக்கம் சரியாகத் தோன்றவில்லை. அவர்கள் எங்களிடம் குரான் படிக்கச் சொன்னார்கள்” என்றார்.
மேலும் நாங்கள் கோவேறு கழுதைகளில் (mule) ஏறிக்கொண்டிருந்தபோது, இரண்டு பேர் எங்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் என்னைப் பற்றியும், எங்கள் குழுவில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் விசாரித்தனர். நாங்கள் என்ன மதம், இந்துவா முஸ்லிமா என்றும் கேட்டனர். மேலும், குரான் படிக்கச் சொன்னார்கள். ஏன் ருத்ராட்சம் அணிந்திருக்கிறீர்கள் என்றும் கேட்டனர். என் சகோதரர் ருத்ராட்சம் அணிய பிடிக்கும் என்று சொன்னபோது, அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் அங்கிருந்து இறங்கி, மற்ற கோவேறு கழுதை ஓட்டுபவர்களின் உதவியுடன் திரும்பிவிட்டோம்.”
சிறிது நேரத்திலேயே, அவர்களில் ஒருவருக்கு ஒரு அழைப்பு வந்தது என்றும், சிறிது தூரம் சென்ற பிறகு, அவர் தொலைபேசியில் ரகசிய குறியீட்டு வார்த்தைகளில் “பிளான்-ஏ தோல்வியடைந்துவிட்டது” என்று கூறியதாகவும் ஏக்தா திவாரி தெரிவித்துள்ளார். 35 துப்பாக்கிகளை அனுப்புவது குறித்தும் அவர்கள் பேசினர் என்றும் அவர் கூறினார்.
“இந்த விஷயங்கள் என் சந்தேகத்தை ஆழப்படுத்தின. 35 துப்பாக்கிகள் பற்றி பேசிய பையனின் புகைப்படம் என்னிடம் உள்ளது. பயங்கரவாதிகளின் ஓவியங்கள் வெளியான பிறகு, நான் அவரை அடையாளம் கண்டுகொண்டேன்” என்று ஏக்தா திவாரி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஏக்தா திவாரியின் கணவர் பிரசாந்த் திவாரி கூறியதாவது: “நாங்கள் வைஷ்ணோ தேவி தரிசனத்துக்காக இங்கிருந்து புறப்பட்டோம். கட்ராவில் வைஷ்ணோ தேவியை தரிசித்த பிறகு, ஒரு முழு பேக்கேஜ் டூர் எடுத்தோம். எங்கள் குழுவில் 20 பேர் இருந்தனர். என் மனைவியுடன் நடந்து வந்த ஒருவன் அவரை குரான் படிக்கச் சொன்னான். அதை அவர் என்னிடம் தெரிவித்தார். நாங்கள் அங்கிருந்து திரும்பிச் செல்லச் சொன்னபோது, அவர்கள் எங்களுடன் சண்டையிடத் தொடங்கினர்.”
அவர்களை சந்தேகிக்க மிக முக்கியமான காரணம், அவர்கள் திரும்பத் திரும்ப குரான் படிக்கச் சொன்னதுதான் என்றும், எங்கள் முகவரியையும் கேட்டனர் என்றும், துப்பாக்கிகளை அனுப்புவது பற்றிய பேச்சு எங்கள் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது என்றும் அவர் கூறினார். ஏக்தா திவாரியின் இந்த வாக்குமூலம் பாதுகாப்பு முகமைகளின் விசாரணையில் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்களாகவே மதரீதியாக மக்களை பிரித்து பார்த்தபடி வந்த தீவிரவாதிகள், பிறகு நேரம் எடுத்து துப்பாக்கி சூடு நடத்தியிருப்பதாக இந்த பெண்ணின் வாக்குமூலம் கருத வைக்கிறது.