தமிழக அரசு நியமிக்கும் குழு இலவசமாக செயல்படுமா! குழு நியமனம் வீண் செலவு, வெறும் வெட்டி வேலை! தரமான செய்தியை சொல்லிய டாக்டர் க.கிருஷ்ணசாமி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லா, அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் ட்ரெஸ், டாக்டர் எஸ் நாராயணன் ஆகிய 5 பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என அறிவித்தார்கள். இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர்,டாக்டர் க.கிருஷ்ணசாமி . முகநூல் பதிவில் பதிவிட்டிருப்பது :

படித்தவர் பாட்டைக் கெடுத்தார், எழுதியவர் ஏட்டைக் கெடுத்தார்! என்பது போல,
குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு நாட்டை குழப்பலாமா? ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலோ அல்லது புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநில அரசோ ஆளுநர் உரையுடன் மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை துவங்குவது மரபு. நேற்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையுடன் துவங்கியது. ’ஆளுநர் உரை’ என்று பெயரிட்டாலும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசு எழுதிக் கொடுத்த உரையே அது. ஓரிரு ஆளுநர்கள் தாங்களே அறிக்கைகளை தயார் செய்து கொண்டு படித்த வரலாறுகளும் உண்டு. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் திமுக அரசின் அறிக்கையை அப்படியே படித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர் சகாக்கள் நமது தாய் தேசத்தை ’இந்தியப் பேரரசு’ என முறையாக அடையாளப்படுத்தாமல் ’ஒன்றிய அரசு’ என்று தொடர்ந்து இழிவுபடுத்துவதால் இத்தேசத்தின் மீது பற்று கொண்ட கோடான கோடி தேசபக்தர்கள் ஏற்கனவே பெரும் ஆதங்கத்திற்கு ஆட்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஆட்சேபனைக்குரிய ’ஒன்றிய அரசு’ என்ற சொற்றொடர் நேற்றைய ஆளுநர் உரையின்
தமிழாக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.

சட்டமன்ற பதிவேடுகளிலும் இனி இடம் பெற்று விடும். இந்த ஆட்சேபனைக்குரிய தமிழ் வார்த்தை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு வரவில்லையா? அல்லது தற்காலிகமாகக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? என்று தெரியவில்லை.நம்மை அடையாளப்படுத்தியும், பாதுகாத்தும் வரும் தாய்க்கு நிகராக போற்றப்படும் இந்தியத் தேசத்தைக் குறைத்துப் பேசி திமுகவினர் என்ன சுகம் காண்கின்றனரோ தெரியவில்லை? இப்படித் தொடர்ந்து பேசுவது தவறு என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் கூட அவர்களுக்குத் தோன்றியதாக தெரியவில்லை. திமுகவின் இந்தியத் தேச விரோத போக்கு அவர்களின் வக்கிர புத்தியைக் காட்டுவதாகவே நாட்டுப்பற்றாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

திமுக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. அரிய பல அறிவிப்புகள் வரும் என்றே அவர்களது ஊடக தோழமைகள் ஆரூடம் சொல்லி வந்தனர். அதுபோன்று எந்த அதிசய அறிவிப்புகளும் ஆளுநர் அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால் இந்த அரசிற்கு நிதிப்பற்றாக்குறை மட்டும் அல்ல, செயல் ஆக்கத்திற்கான சிந்தனை பற்றாக்குறையும் இருப்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு கொடுத்த முக்கிய வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படும் என சொல்லவில்லை.

மாநில அரசுக்கு உரிய ஆலோசனைகளைச் சொல்லவும், அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும் அரசியல் சாசன விதிமுறைப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் இந்தியக் குடியுரிமை பணிகளில் (IAS) தேர்ச்சி பெற்றவர்களை கொண்ட நிர்வாகக் கட்டமைப்பு (Bureaucracy) தமிழ் மாநிலம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ளது.

தலைமைச் செயலாளர் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரையிலும் அதன் நீட்சியாக நிர்வாக அமைப்புக் குக்கிராம தலையாரி வரையிலும் எப்பொழுதும் நிரந்தரமாக உள்ளது. இதற்கு மேலும், ஓரிரு துறைகளில் தகவல்களைத் திரட்டவும், அத்துறைகளை மேம்படுத்தவும் எப்பொழுதாவது சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்படுவது விதிவிலக்காக கடந்த காலங்களில் நடந்துள்ளது.

ஆனால், எதற்கெடுத்தாலும் குழுவை நியமிப்பதே கொள்கையாக இவ்வரசு விதியாக்கிக் கொண்டுள்ளது. ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு; மாநில நிதி ஆதாரம் குறித்து ஆராய ஜெயரஞ்சன் தலைமையில் ஒரு குழு; கருப்பு பூஞ்சையைக் கண்டறிய டாக்டர் மோகன் தலைமையில் ஒரு குழு; கரோனா குறித்து ஆராய டாக்டர் குகநாதன் தலைமையில் இன்னொரு குழு என அண்மையில் தான் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் எல்லாம் போதவில்லை போலும். இப்பொழுது சர்வதேச குழு ஒன்று புதிதாக முளைத்துள்ளது. நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் அடங்கிய முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்படும் என நேற்றைய ஆளுநர் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அடுக்கடுக்காக குழுக்களை மட்டும் இவ்வரசு அடுக்கிக் கொண்டே போகிறது.

இந்த குழுக்கள் எல்லாம் இலவசமாகச் செயல்படுமா? இவர்கள் எல்லாம் செயல்படக் கோடிக்கணக்கில் செலவு செய்யவேண்டுமே? நிதி நெருக்கடியில் ஏற்கனவே மாநில அரசு சிரமப்படும் வேளையில் செலவைக் குறைப்பதற்குப் பதிலாகச் செலவைக் கூட்டிக்கொண்டே போவது எவ்விதத்தில் நியாயம்?
”அரைகுறை ஆயுள் கொண்ட இலவசத் திட்டங்களை அள்ளி வீசி, ஆசையைத் தூண்டுவது; எளிதான இலக்காக விளங்கும் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஏழை, எளிய மக்களின் வாக்குகளை ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் விலைக்கு வாங்கி வெற்றி பெறுவது” தானே திராவிட சித்தாந்தத்தின் தாரக மந்திரம்.

ஏழை தமிழர்களின் அறியாமையின் மீதும், இயலாமையின் மீதும் தானே இவர்களின் பொருளாதார கோட்பாடும், சமூக நீதியும் கட்டியமைக்கப்பட்டுள்ளது. கழக கண்மணிகளின் இந்த அரிய கண்டுபிடிப்புகளைத் தாண்டி, கடந்த பத்து வருடமாக தமிழகத்திற்கு வரும் எல்லா நல்ல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட்ட இவர்களிடத்தில் உலக பொருளாதார நிபுணர்கள் வேறு என்ன புதிய திட்டங்களைத் தந்து விடப் போகிறார்கள்? அல்லது அவர்கள் நல்ல திட்டங்களைத் தந்தாலும் இவர்கள் ஏற்றுக் கொண்டு முறையாக நடைமுறைப்படுத்தப் போகிறார்களா?

இக்குழு நியமனம் வீண் செலவு, வெறும் வெட்டி வேலையாகத் தானே முடியும்.குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு இம்மாநில மக்களைக் குழப்பவும் வேண்டாம்!மாநில நிதி ஆதாரத்தை விரயமாக்கவும் வேண்டாம்!!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி. 22.06.2021

Exit mobile version