ராமஜெயம் வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாறுமா? மர்ம மரணத்தில் எழும் பல கேள்விகள்?

jayakumar congress

jayakumar congress

தமிழகத்தை தற்போதுபரபரப்பை கிளப்பி இருக்கும் சம்பவம் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் தான். அவரின் உடற்கூராய்வில் வயிற்றுக்கு மேல் பகுதியில் இரும்பு தகடு இருந்ததும் கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. கொலையா தற்கொலையா என விசாரித்து வரும் நிலையில் கால்கள் கட்டப்பட்டிருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்கின் மர்ம மரணம், அரசியல் வட்டாரத்திலும், நெல்லைப் பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தற்கொலையாக இருக்கலாம்’ என மெதுவாகத் தொடங்கியகாவல்துறை விசாரணை உடற்கூறாய்வுக்கு பின்னர் ‘கொலையாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது’ என அதிரடியாக வேகமெடுத்திருக்கிறது. ஜெயக்குமார் இறந்துகிடந்த விதம், அவர் எழுதிய கடிதங்கள், குழப்பும் தடயங்கள், கொலைக்கான யூகத்தைக் கிளப்பும் சந்தேகத்துக்குரிய சம்பவங்கள், அடுக்கடுக்கான கேள்விகள் எனக் கிறுகிறுக்கவைக்கிறது இந்த ‘மர்ம’ மரணம்!

“எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்டிருக்கிறது ஜெயக்குமாரின் உடல். தற்கொலை செய்துகொள்ளும் யாராவது கை கால், இடுப்புப் பகுதிகளை மின்சார வயர்களால் கட்டிக்கொண்டு, பிறகு தீ வைத்துக்கொள்வார்களா… அரசியல்ரீதியிலும் குடும்பம் சார்ந்தும் பல பிரச்னைகள் ஜெயக்குமாருக்கு இருந்திருக்கின்றன. மரணம் நிகழ்ந்த இடத்திலிருந்து கிடைக்கும் தடயங்களைவைத்துப் பார்க்கும்போது, இது கொலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. அதனால்தான், கே.எஸ்.அழகிரி ‘இது திட்டமிடப்பட்ட கொலையாகத் தெரிகிறது’ என்றார். காவல்துறை மிக விரைவாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்கிறார்கள் நெல்லை காங்கிரஸார்.

யார் இந்த ஜெயக்குமார் மரணத்தில் என்னதான் நடந்தது, விசாரணையில் என்ன நடக்கிறது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர், கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். பாரம்பர்யமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். காமராஜர் மீதிருந்த பற்றால், தன் சிறு வயதிலேயே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றியவர். மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெஃப்ரின், ஜோ மார்ட்டின் ஆகியோருடன் திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்து புதூர் கிராமத்தில் வாழ்ந்தார்.

இந்த நிலையில், கடந்த மே 4-ம் தேதி, அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். ‘கொலையா… தற்கொலையா..?’ எனப் பரபரப்பு கிளம்ப, காவல்துறைக்கும் தன் உறவினருக்கும் ஜெயக்குமார் எழுதிய கடிதங்கள் வெளியாகி அதிர்வைக் கிளப்பின.“யாரிடமும் அதிர்ந்துகூடப் பேச மாட்டார் ஜெயக்குமார். தன் கஷ்டம் எதையும் யாரிடமும் சொல்லவும் மாட்டார். கடந்த மே 2-ம் தேதி இரவு 7:45 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவரை, உவரியில் சிலர் பார்த்திருக்கிறார்கள். அதன் பின்னர் அவர் இரவு வீட்டுக்குத் திரும்பவில்லை.

இளைய மகன் ஜோ மார்ட்டின் வெளியே சென்றிருந்ததால், வீட்டில் ஜெயந்தியும் கருத்தையா ஜெஃப்ரினும் மட்டும்தான் இருந்திருக்கிறார்கள். வீட்டுக்குத் தாமதமாக வரும் நாள்களில், வீட்டின் ஓரத்திலிருக்கும் சிறிய அறையிலேயே ஜெயக்குமார் தூங்கிவிடுவது வழக்கம். அவர் அப்படித்தான் ரெஸ்ட் எடுக்கிறார் போல என்று குடும்பத்தினரும் தேடவில்லை. அடுத்த நாள், அவர் வீட்டில் இல்லை என்பது தெரிந்த வுடன், அவருடைய செல்போன் நம்பருக்கு அழைத்திருக்கிறார்கள். ஆனால், செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்திருக்கிறது. அவருக்கு நெருக்கமானவர்கள், கட்சிக்காரர்கள் எனப் பலருக்கும் போன் செய்து விசாரித்தும், அவரைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில், ஜெயக்குமாரின் உதவியாளர் வேலவன், தன்னிடம் சில கடிதங்களை ஜெயக்குமார் கொடுத்துவைத்திருக்கும் விவரத்தைச் சொன்னார். அவற்றை வாங்கிப் படித்துப் பார்த்தோம். தனது லெட்டர் பேடில் நெல்லை மாவட்ட எஸ்.பி-க்கு, ஏப்ரல் 30-ம் தேதி கையெழுத்திட்டு அவர் எழுதிய கடிதத்தில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் ஜெயக்குமார். அத்துடன், முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளிட்ட எட்டுப் பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, ‘அவர்கள் என்னிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க வில்லை. அது தொடர்பாகக் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவர்களே பொறுப்பு’ எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தை மரண வாக்குமூலம் என்றே எழுதியிருந்தார்.

இன்னொரு கடிதத்தை, தன் மருமகன் ஜெபாவுக்கு எழுதியிருக்கிறார். அதில், 16 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களில் யாரிடமிருந்து பணம் வர வேண்டும், யாருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். அத்துடன், தான் பணம் அல்லது நிலம் எழுதிக்கொடுக்க வேண்டியவர்கள் என ஐந்து பேரின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன்பின் உடனடியாக உவரி காவல் நிலையத்தில் ஜெயக்குமாரின் மூத்த மகன் கருத்தையா ஜெஃப்ரினைப் புகார் அளித்தார். அந்தக் கடிதங்களையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். காவல்துறை விசாரித்துவந்த நிலையில்தான் ஜெயக்குமாரின் தோட்டத்தில், கணேசன் என்பவர் பணிபுரிகிறார். 15 ஏக்கர் பரப்பளவுள்ள அந்தத் தோட்டம், தோட்ட வேலைக்காக வந்த கணேசன் சாணம், தேக்குமரக் குப்பைகளைப் போடுவதற்காக வெட்டப்பட்ட குழியில், எரிந்த நிலையில் ஓர் உடல் கரிக்கட்டையாகக் கிடப்பதைப் பார்த்திருக்கிறார்.

உடனடியாக, மூத்த மகன் கருத்தையா ஜெஃப்ரின் அங்கு ஓடியிருக்கிறார். எரிந்த நிலையில் உடல் கிடப்பதைப் பார்த்தவுடன், உவரி போலீஸுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார் ஜெஃப்ரின். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உடனடியாக உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜெயக்குமார் மத வழக்கப்படி அவரைப் புதைத்திருக்கிறோம். தொடக்கத்தில், மூன்று தனிப்படைகள் விசாரணைக்காகக் களமிறக்கப்பட்ட நிலையில், தற்போது எட்டு தனிப்படைகள் ஜெயக்குமார் மரணத்தை விசாரிக்கின்றன. வழக்கின் விசாரணை அதிகாரிகள் கூறுகையில் “மே 2-ம் தேதி இரவு வீட்டைவிட்டுச் சென்ற ஜெயக்குமார், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை என்பதை நாங்கள் நம்பவில்லை. காரில் வெளியே சென்றவர், அதே காரில்தான் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.

அடுத்த நாள், அவரது குடும்பத்தினர் போலீஸில் புகாரளித்திருக் கிறார்கள். அதற்கு அடுத்த நாள், மே 4-ம் தேதி அவரது உடல் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது. உடலை நாங்கள் சோதனையிட்டபோது, அவரது கை கால்கள், இடுப்புப் பகுதிகள் மின்சார வயர்களால் கட்டப்பட்டிருந்தன. பாத்திரம் விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் ‘ஸ்டீல் ஸ்கிரப்பர்’ அவரது வாய்க்குள் திணித்து வைக்கப்பட்டிருந்தது.

உடல் கிடந்த இடத்தின் அருகில், ஜெயக்குமாரின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவை சிதறிக் கிடந்தன. சம்பந்தமில்லாமல் அருகே ஒரு பாயும் கிடந்தது. அவர் உடலோடு சேர்த்து இரும்புத் தகடு ஒன்றும் மின்சார வயரால் கட்டப் பட்டிருந்தது. அவர் உடலில் இருந்த அத்தனை பொருள்களும் அவரது வீட்டிலிருந்தேதான் எடுக்கப்பட்டிருக்கின்றன. க்ரைம் சீனில் கிடைத்த தரவுகளின்படி பார்த்தால், இதைத் தற்கொலை எனச் சொல்ல முடியவில்லை. எனவே, கொலையாக இருக்கலாம் என்கிற யூகத்தில் விசாரணையின் திசையை மாற்றியிருக்கிறோம். என கூறினார்கள்.

மேலும் கடிதங்கள், மரணம் நிகழ்ந்திருக்கும் விதம், அந்த இடத்தில் செல்போன் இல்லாதது, வீட்டின் சிசிடிவி கேமரா இரண்டு நாள்களாகச் செயல்படாதது உள்ளிட்ட விஷயங்கள் பெரும் சந்தேகத்தை எழுப்புகின்றன. ஜெயக்குமாரின் உறவினர்கள், நண்பர்கள், அவர் எழுதிய இரண்டு கடிதங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் என அனைவரையும் விசாரித்து வருகிறார்கள்

ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதத்தில், ஒரு பகுதியில் ‘மொத்தக் குடும்பத்தினருக்கும் கடிதம்’ எனக் குறிப்பிட்டு, தன் மகள் கேத்தரினின் திருமணத்தை அனைவரும் சேர்ந்து சிறப்பாக நடத்திக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்திருப் பதோடு, ‘எனக்கு வரவேண்டிய பணம் மற்றும் நான் கொடுக்கவேண்டிய பண விவரங்கள் எதுவும் என் மனைவி ஜெயந்திக்குத் தெரியாது’ என எழுதியிருக்கிறார் ஜெயக்குமார். கடிதத்தின் முடிவில், ‘குடும்பத்தினர் யாரும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களைப் பழிவாங்க நினைக்க வேண்டாம். சட்டம் தனது கடமையைச் செய்யும்’ எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அது தவிர, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமைக்கும் அவர் ஒரு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பேசிய காங்கிரஸ் கட்சியின் சீனியர்கள் சிலர், “ஜெயக்குமாரின் மரணத்தில் பெரிய மர்மம் இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில்தான் அறிவிக்கப் பட்டார். ராபர்ட் புரூஸுக்கு சீட் கிடைத்தவுடன், சீட் எதிர்பார்த்திருந்த பலரும் கடுப்பாகி விட்டார்கள். எதிர்பார்ப்பில் இருந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், ஜெயக்குமார் மூலமாக காங்கிரஸ் தலைவர் ஒருவருக்குப் பெரும் தொகையைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சீட் கிடைக்காத நிலையில், கொடுத்த பணத்தைக் கேட்டு ஜெயக்குமாருக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் அந்த காங்கிரஸ் பிரமுகர்.

புகையும் கேள்விகள்!
ஜெயக்குமாரின் உடலைப் பார்த்த அவர் மனைவி ஜெயந்தி, ‘என்னங்க… இப்பிடிப் பண்ணிக்கிட்டீங்களே…’ என்று கதறி அழுததைச் சுற்றியிருந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள். அப்படி அழுதவர், இப்போது ‘இறந்தவர் என் கணவரே அல்ல… டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும்’ என்று திடீரெனக் கோரியது ஏன்.

இறந்தவர் ஜெயக்குமார் இல்லையென்றால், அந்த உடல் யாருடையது… தனக்கு வரும் கொலை மிரட்டல் குறித்தும், போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும், மாவட்டக் காவல்துறை கண்காணிப் பாளருக்கு ஏப்ரல் 30-ம் தேதி கடிதம் எழுதியிருக் கிறார் ஜெயக்குமார். அந்தக் கடிதத்தை ஏன் அப்போதே போலீஸுக்கு அனுப்பவில்லை அவர். அதைத் தன் உதவியாளர் வேலவனிடம் கொடுத்துவைத்திருந்த காரணம் என்ன?

இரண்டாவதாக எழுதப்பட்ட கடிதத்தில், ‘உன்மீது கொண்டுள்ள நம்பிக்கையால், இந்தக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன்’ எனத் தன் மருமகன் ஜெபா பெயருக்கு எழுதியிருக்கிறார் ஜெயக்குமார். தனக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், மருமகன் பெயருக்கு அவர் கடிதம் எழுதவேண்டிய அவசியமென்ன…

குடும்பத்துக்குள் என்ன பிரச்னை… வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் ஒரு பிணம் கிடப்பது, வீட்டிலிருந்தவர்களுக்கு எப்படித் தெரியாமல் போனது… மிகச் சரியாக அந்த நாள்களில் சிசிடிவி கேமரா வேலை செய்யாமல்போனது எப்படி… தற்கொலை செய்துகொள்வது என அவர் முடிவெடுத் திருந்தால், எத்தனையோ வழிகள் இருக்க, இவ்வளவு கொடூரமான ஒரு வழியை அவர் தேர்ந்தெடுப்பாரா…

அதுவும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக ஆதார் உள்ளிட்ட ஐடி கார்டுகளை பத்திரமாகச் சற்று தூரத்தில் எடுத்துவைப்பாரா… அவரது செல்போன் எங்கே போனது… எனக் கேள்விக்கு மேல் கேள்விகள் எழுகின்றன. காவல்துறை மிகத் துரிதமாக விசாரித்து, நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றனர் விரிவாக.

அவரது கடிதம் குறித்தும், அதில் உள்ளவை குறித்தும் விசாரிக்கிறோம். எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. விரைவில் முழு விவரமும் வெளிவரும்” என்றார். ஜெயக்குமாரின் மரணம், காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையே ஓர் உலுக்கு உலுக்கியிருக்கிறது. கிடைக்கும் தகவல்கள், தடயங்கள், சந்தேகங்கள், கேள்விகளை முன்வைத்து விரைந்து விசாரித்தால், இன்னும் சில தினங்களிலேயே உண்மையைக் கண்டுபிடித்துவிடலாம் காவல்துறை. எவ்விதக் காரணத்தை முன்னிட்டும், இன்னொரு ராமஜெயம் வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாறிவிடக் கூடாது!

Exit mobile version