வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
மகளிர் தினத்தில் சமையல் காஸ் விலையை மேலும் 100 ரூபாய் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் நிதிச்சுமையை குறைக்கும். குடும்பங்களின் நல்வாழ்வுக்கு ஆதரவாக இருப்பதுடன் ஆரோக்கியம் உறுதி செய்வதுடன் பெண்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். பெண்கள் எளிதாக வாழ வழி செய்யவும் , பெண்கள் அதிகாரம் உறுதி செய்வதும் எங்களின் நோக்கம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பெண்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும் 300 ரூபாய் மானியத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 2025ஆம் ஆட்னின் மார்ச் மாதம் வரை இந்த மானிய உதவி கிடைக்கும். இதன் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வாங்க முடியும். இந்தத் திட்டத்தை ஓராண்டுக்கு நீட்டிப்பதாக அறிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், உஜ்வாலா யோஜனாவின் வாடிக்கையாளர்களுக்கான மானிய உதவியை ஓராண்டுக்கு தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்காக மொத்தம் ரூ.12,000 கோடி செலவாகும் என்று கூறியுள்ளார்.
தகுதியான பயனாளிகளுக்கு ஒரு வருடத்தில் 12 எல்பிஜி சிலிண்டர்களை நிரப்புவதற்கு அரசாங்கம் ரூ.300 மானியம் வழங்குகிறது.சமையல் சிலிண்டருக்கு இதற்கு முன் மத்திய அரசு 100 ரூபாய் மானியம் அளித்து வந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இந்த மானியத் தொகை சிலிண்டருக்கு ரூ.100லிருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது.
சிலிண்டர் விலையைப் பொறுத்தவரையில், டெல்லியில் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.903 ஆக உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் கிடைக்கும். எனவே இந்த சிலிண்டரின் விலை 603 ரூபாய் மட்டுமே. தற்போது மேலும் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால் 503 மட்டுமே. சாதரண வாடிக்கையாளருக்கு 803 க்கு கிடைக்கும்
சிலிண்டர் விலை குறைப்பு குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
சர்வதேச மகளிர் தினமான இன்று, நமது நாட்டில் பல கோடி பெண்கள் பயன்பெறும் வகையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாகவும்
தமிழக சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சுமார் 10 கோடி உஜ்வாலா பயனாளிகளுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் மானியம், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற நேற்றைய அறிவிப்பும், சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற இன்றைய அறிவிப்பும், நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் சிறந்த மகளிர் தின பரிசாக அமைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.