புதிய மதரஸாக்களுக்கான மானியத்தை நிறுத்தும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு ஏற்றுக்கொண்டது. யோகி ஆதித்யநாத்தின் உத்தரபிரதேச அரசு மாநிலத்தில் புதிய மத்ரஸாக்களுக்கான மானியத்தை நிறுத்தியுள்ளது.மே 17 அன்று அமைச்சரவையின் கூட்டம் மேற்கொண்ட முடிவில், புதிய மதரஸாக்களை மானியப் பட்டியலில் இருந்து விலக்குவதற்கான முன்மொழிவை மாநில அரசு ஏற்றுக்கொண்டதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ.புதன்கிழமை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச அரசு 2021-22-க்கான பட்ஜெட்டில் மத்ரஸா நவீனமயமாக்கம் திட்டத்துக்காக ரூ.479 கோடி நிதி ஒதுக்கியது. மாநிலத்தில் 16,000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மதரஸாக்கள் உள்ளன, அவற்றில் 558க்கு அரசு மானிய உதவி கிடைக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள மதரஸாக்களில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மாநில அரசு தேசிய கீதம் பாடுவதைக் கட்டாயமாக்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு, புதிய மத்ரஸாக்களை மானியப் பட்டியலில் இருந்து விலக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச சிறுபான்மையினர் விவகார அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி, மதரசா மாணவர்கள் முழு தேசப்பற்றுடன் இருப்பதை அரசு வலியுறுத்துகிறது என்றார். மேலும் சிறுபான்மையினருக்கு மதரஸாக் கல்வி அவசியம் அதே வேளையில் தேசிய கீதம் பாடும்போது மாணவர்கள் சமூக விழுமியங்களை உணர வேண்டும் என்றார் அன்சாரி.
அன்சாரி மேலும் கூறும்போது, “”இப்போது மத்ரசா மாணவர்கள் கணிதம், அறிவியல் மற்றும் கணினியுடன் சமய நூல்களையும் படிக்கிறார்கள்,” என்றார். உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியப் பதிவாளர் எஸ்.என்.பாண்டே உத்தரவில், உ.பி.யில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதமான ‘ஜன கன மன’ இசைக்கப்படுவதைக் கட்டாயமாக்கினார். பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, மதரஸாவில் படிக்கும் அனைத்து மாணவர்களிடமும் தேசிய உணர்வு புகுத்தப்படுவதை இது உறுதி செய்யும் என்று கூறினார்.
நன்றி நியூஸ் 18