கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில்,எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பினை கிளப்பியது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிப்பதாக அறிவித்தது.
இந்த நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து 25 வழக்குகள் போடப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.பல்வேறு கேள்விகளை முன்வைத்து வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இது வன்னிய சமுதாய மக்களிடம் இடியாய் விழுந்துள்ளது. பல வருடங்களாக போராடி பெற்ற இட ஒதுக்கீடு ரத்து செய்துள்ளதால் வன்னிய சமுதாய மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.
தமிழகத்தில் நடைமுறையில் பி.சி. எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. எம்.பி.சி.பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்நிலையில் எம்.பி.சி. பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அ.தி.மு.க அரசில் இதற்கான சட்டம் சட்டமன்ற கூட்ட தொடரில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க., அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது.
10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: முறையாக தரவுகள் இல்லாமல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியுமா, இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உண்டா, சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா, இதற்கெல்லாம் அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. ஆகவே, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவித்தனர்.
அரசு தரப்பில் மேலும் வாதிடுகையில் இந்த கல்வியாண்டில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என வாதிட்டார்கள். எனினும் அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என கூறி 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தார்கள்
மேலும் வன்னியர்களுக்கான ஒதுக்கீடு ரத்து என்கிற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பாமகவினர் கூறிவருகிறார்கள். தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.அதேபோல், தற்போது வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என கேள்விகள் எழுந்துள்ளது.
மேலும் தீர்ப்பு வெளியானதும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டடிருபப்தாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தமிழகத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினைரை உஷார்படுத்தியுள்ளது தமிழக அரசு.