திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்ட பா.ஜ.க அலுவலக திறப்புவிழா மற்றும் பா.ஜ.க., செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திருப்பூருக்கு வந்திருந்தார்.
பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நட்டா வந்திருப்பது திருப்பூர் மக்கள் செய்த பாக்கியம் என்று பேச்சை தொடங்கினார். “இந்த உலகத்துலயே மிகப்பெரிய கட்சி பா.ஜ.க. 18 கோடி பேர் உறுப்பினராக இருக்கிறோம்.
ஒரு சாதாரண செருப்பு தைக்கின்ற குடும்பத்தில் பிறந்து, பா.ஜ.க.,வால் கண்டெடுக்கப்பட்டு படிப்படியாக ஒவ்வொரு நிலையாக உயர்ந்து மாநிலத் தலைவராக இருந்து, 20 ஆண்டுகளாக பா.ஜ.க.,விற்கு சட்டமன்றத்தில் வாய்ப்பில்லை என்றபோது, அதை வேல் எடுத்து உடைத்து 4 முத்தான எம்.எல்.ஏக்களை சட்டமன்றத்தில் அமர்த்திவிட்டு மோடிஜியின் அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகியிருக்கிறார் எல்.முருகன்.
வரவிருக்கின்ற 2026 தேர்தலில் 150 எம்.எல்.ஏக்களைப் பெற்று கோட்டையில் அமருவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. இது ஒரு சரித்திரமான நாள்.
இந்தியாவிலேயே தயாரித்து இலவசமாக வீட்டுக்கே அனுப்பி 118 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருக்கிறது மோடி அரசாங்கம். தமிழகத்தில் 55 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள், 94 லட்சம் பெண்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு ஆரம்பித்து கொரோனா காலத்தில் 1500 ரூபாயை மூன்று தவணையாக மோடி அரசாங்கம் கொடுத்திருக்கிறது.
பா.ஜ.க.,வினர் வீடுவீடாகச் சென்று பா.ஜ.க.,வின் திட்டங்களைச் சொல்லி, மக்களைச் சந்திக்க வேண்டும். வரப்போகின்ற அனைத்துத் தேர்தல்களிலும் பா.ஜ.க., வெற்றி பெற வேண்டும்” என்றார்.
நாடு முழுவதும் கோயில்கள் திறக்கப்பட்டாலும், தி.மு.க அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களையும் நீண்ட காலத்துக்கு மூடியிருந்தது. நமது போராட்டத்துக்கு பிறகுதான் கோயில்கள் திறக்கப்பட்டது” என்று பெரிய பட்டியலை அடுக்கினார்.
அடுத்த 2026 கட்டாயம் பாஜக ஆட்சியில் அமரும்.. கோட்டைக்கு செல்லும் என ஆணித்தரமாக குறிப்பிட்டு பேசினார் அண்ணாமலை.