பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நான்காம் நாளான இன்று பராசக்தி அம்மன் மனோன்மணி அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் பராசக்தி அம்மனுக்கு ராஜேஸ்வரி அலங்காரம், கெஜலட்சுமி அலங்காரம், மனோன்மணி அலங்காரம், ஆண்டாள் அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற உள்ளது.
இந்நிலையில் நான்காம் நாளான இன்று பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பராசக்தி அம்மன் திருக்கல்யாணம் மண்டபத்தில் காட்சியளித்தார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சரவிளக்கு ஆராதனை, பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது.
