பெரம்பலூரில் 65 சாமி சிலைகள் உடைப்பு! உடைத்தவர்கள் அனைவரும் மெண்டல்களா? – ஹிந்து முன்னணி

தமிழகத்தில் சமீப காலமாக பல மாவட்டங்களில் இந்து கோவில் சிலைகள் உடைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 65 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது.

சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவிலின் உபக்கோவிலான செல்லியம்மன் கோவிலில் உள்ள ஐந்து சிலைகள் கடந்த 2021 அக்டோபர் 4 ஆம் தேதி உடைக்கப்பட்டது. அதே மாதம் 8 ஆம் தேதி சித்தர்கள் சிலை உட்பட 19 சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. 2022 ஆம் ஆண்டு மேளமாத்தூர் பெரியசாமி கோவில் சிலைகள் 2023 பிப்ரவரி 14 ஆம் தேதி அய்யனார் சாமி கோவிலில் எட்டு சிலைகள் உடைக்கப்பட்டன. மேலும் பல கோவில்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

கோவில்களின் மீதான தாக்குதல்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சில கோவில் உடைப்பின் பின்னணியில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் காவல்துறை அவர்களை மனநலம் சரியில்லாதவர்கள் என்றே கூறி வருகிறது.

இந்துக் கோவில்களை மட்டும் குறி வைத்து தாக்குபவர்கள் எல்லாம் மன நோயாளிகள் என்பது தமிழக காவல்துறையின் எழுதப்படாத சட்டமா என தெரியவில்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் , ஜாதி தலைவர்கள் போன்றோரின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டால் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யும் காவல்துறை கோவில்களை உடைப்பவர்களை மட்டும் சாதாரணமாக விட்டு விடுவது ஏன்?

ஆன்மீக பூமியான தமிழகத்தில் சிறு மற்றும் பெரிய கோவில்கள் சூறையாடப்படுவது ஆன்மீக அமைப்புகளையும் பக்தர்களையும் மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் மூலமாக கோவிலின் வருமானத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும் தமிழக அரசு கோவிலை மட்டும் பாதுகாக்க இயலாதது ஏன்?

கோவில் சிலைகள் உடைப்பின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசும் காவல்துறையும் உடனே தெளிவுபடுத்த வேண்டும். கடவுள் நம்பிக்கை அற்ற நாத்திக திமுக அரசு வேண்டுமென்றே இந்த செயல்களை ஆதரிக்கிறதா என்று தெரியவில்லை.

இதே அரசாங்கம் சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தால் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தபடி அவசரகதியில் குற்றவாளிகளை கைது செய்திருக்கும். நாங்கள் தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என மார்தட்டி இருக்கும்.

தமிழக இந்துக்களின் கோரிக்கையை ஏற்று இனியாவது கோவில் உடைப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து கோவில்களுக்கும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இரவு பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

தொடர் இந்து கோவில் உடைப்புகள் சமுதாயத்தில் அமைதியின்மையே உருவாக்கும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு முன் வர வேண்டுமென இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version