டிஜிட்டல் இந்தியாவை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறோம்! 75,000 கோடி இந்தியாவில் முதலீடு கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை

இந்தியா முழுவதும் உள்ள ஊரக பகுதிகளில் டிஜிட்டல் சேவைகளை அளிப்பதற்கு. மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்துள்ளது. அதற்காக இந்தியா முழுவதும் முதற்கட்டமாக டிஜிட்டல் பொதுச் சேவை மையங்கள் ஊரகப் பகுதிகளில் கிராம அளவிலான தொழில் முனைவோரை வெற்றிகரமாக உருவாக்கி 10 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன. 2.15 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் பல்வேறு அரசு மற்றும் இதர சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்புக்களை அளிக்கும் 2.92 லட்சம் பொது சேவை மையங்கள் ஊரக இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் டிஜிட்டல் கட்டண முறை கடந்த நான்காண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டலாகவும் வெளிப்படையாகவும் ஆக்கியுள்ளது.

பிரதமர் கிராம டிஜிட்டல் கல்வி இயக்கம் இந்த திட்டம் ஏற்கனவே 1.25 கோடி பேருக்கு டிஜிட்டல் திறன் மற்றும் பயிற்சி அளித்துள்ளது என்றும் இவர்களில் 70 சதவீதம் பேர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றார். 20 மணி நேர அடிப்படை கணினி பயிற்சி மூலம் ஆறு கோடி பேருக்கு டிஜிட்டல் திறன் மற்றும் அடிப்படைக் கணினி பயிற்சி அளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டம் பி.பீ.ஓ. துறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு பெருநகரங்களில் மட்டுமே இருந்த பி.பீ.ஓ.க்கள் தற்போது சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பரவி வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அவர், “இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்க்க 10 பில்லியன் டாலர் முதலீட்டை நாங்கள செய்ய உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியின் கனவான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். மேலும் அவர், “இந்தியாவின் எதிர்காலம் குறித்து நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையே எங்களது நடவடிக்கை பிரதிபலிக்கிறது” என்றுள்ளார்.

அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு இந்த 75,000 கோடி ரூபாய் முதலீடானது இந்தியாவில் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள கூகுள், ஈக்வட்டி முதலீடுகள் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அது செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவை டிஜிட்டல் வசமாக மாற்ற இந்தத் திட்டமானது 4 வகையில் கவனம் செலுத்தும். முதலாவது, ஒவ்வொரு இந்தியனுக்கும் அவனது தாய் மொழியிலேயே, மிகவும் மலிவான விலையில் தகவல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாவது, இந்தியாவின் தனிப்பட தேவைக்கு ஏற்றது போல செயல்பாடுகளில் ஈடுபடுவது. மூன்றாவது, டிஜிட்டல் பரிமாற்றத்துக்குத் தயாராகும் வியாபரங்களுக்கு துணைபுரிவது. நான்காவது, சமூக நன்மைக்காக தொழில்நுட்பம் மற்றும் ஏஐ உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது. குறிப்பாக சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது” என விளக்கியுள்ளது.

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பெரும் தாக்கம் குறித்துப் பேசியுள்ள கூகுள், “நம் சுகாதாரம் குறித்தும் பொருளாதாரம் குறித்தும் எழுந்துள்ள சவால்கள், இனி நாம் எப்படி வேலை பார்ப்பது மற்றும் எப்படி வாழ்வது என்பது குறித்து சிந்திக்க வைத்துள்ளது. எனவே எங்கள் இலக்கானது, அடுத்து வரும் கண்டுபிடிப்பு அலையில் இந்தியா பயனடைவதை மட்டும் உறுதி செய்யாமல், அதை முன்னின்று வழிநடத்துவதிலும் துணை புரிவோம்,” எனக் கூறியுள்ளது.

Exit mobile version