தனியாா் கிா்ப்டோ கரன்சி (எண்ம செலவாணி) குறித்து ஏராளமான ஊகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அது ஆரோக்கியமானது அல்ல’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை கூறினாா்.கிரிப்டோ கரன்சிகளை ஒழங்குபடுத்துவதற்காக சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் இந்தக் கருத்தை நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோ கரன்சிகளுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்மைக் காலமாக அந்தச் செலாவணி தொடா்பான விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன. அந்தச் செலாவணி மீது முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.
எனினும் இந்தச் செலாவணி மீது உலக நாடுகளின் அரசுகளுக்கும் ஒழுங்காற்று அமைப்புகளுக்கும் சந்தேகம் நிலவி வருகிறது. அந்தச் செலாவணியின் வா்த்தகத்தில் உள்ள ஆபத்துகள் குறித்தும் அவை அச்சம் தெரிவித்து வருகின்றன.நாட்டின் பொருளாதாரத்துக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் கிரிப்டோ கரன்சிகள் தீவிர அச்சுற்றுத்தலாக உள்ளது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்து வருகிறது. அதேவேளையில், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் பெருகி வருவதைக் கருத்தில் கொண்டு, அதிகாரபூா்வ எண்ம செலாவணியை வெளியிடவுள்ளதாக ரிசா்வ் வங்கி அறிவித்திருந்தது.
இதற்கிடையே, கடந்த மாதம் பிரதமா் மோடி தலைமையில் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், கிரிப்டோ கரன்சிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில், அந்தச் செலாவணிகளை ஒழுங்குமுறைப்படுத்த வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியானது. அதன்படி, கிரிப்டோ கரன்சிகளை ஒழங்குபடுத்துவதற்காக சட்டத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதற்கான மசோதாவை நடப்பு குளிா்கால கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ‘கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரபூா்வ எண்ம செலவாணி ஒழுங்காற்று மசோதா 2021’ மக்களவையில் பகுதி-2 அறிக்கையில் பட்டியிலடப்பட்டுள்ளது.‘ரிசா்வ் வங்கி வெளியிடவுள்ள எண்ம செலாவணியை உருவாக்க எளிதான கட்டமைப்பை நாட்டில் ஏற்படுத்துவது இந்த மசோதாவின் நோக்கமாக இருக்கும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் ஊடக மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம், கிரிப்டோ கரன்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவா், ‘தனியாா் கிா்ப்டோ கரன்சி (எண்ம செலவாணி) குறித்து ஏராளமான ஊகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அது ஆரோக்கியமானது அல்ல’ என்று பதிலளித்தாா்.
மேலும் நாட்டின் பொருளாதார வளா்ச்சி குறித்து கூறிய நிா்மலா சீதாராமன், ‘இந்த ஆண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம் மிகுந்த ஊக்கமளிக்கக் கூடிய வகையில் உள்ளது. அதன் மூலம், உலகில் வேகமாக வளா்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என்றாா்.
ஜனவரி முதல் விலைவாசி குறைய வாய்ப்பு:
நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டு வெள்ள பாதிப்பு காரணமாக, விநியோகத்தில் தடை ஏற்பட்டு, அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. விநியோக குறைபாட்டால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம், வரும் ஜனவரி முதல் குறைய வாய்ப்புள்ளது.
சமையல் எண்ணெயைப் பொருத்தவரை, தேவைக்கு அதிகமாகவே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம், அவற்றின் விலையேற்றம் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், கடுகு விதைகள் புதிதாக அறுவடை செய்ய இருப்பதால், சமையல் எண்ணெய் விலைவாசி விரைவில் மிதமான அளவை எட்ட வாய்ப்புள்ளது என்றும் அவா் கூறினாா்.
நடப்பு நிதியாண்டில் நிா்ணயிக்கப்பட்டிருக்கும் ரூ.1.75 லட்சம் கோடி முதலீடுகளை திரும்பப்பெறும் இலக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த நிா்மலா சீதாராமன், ‘பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்குகள் விற்பனை மற்றும் எல்ஐசி பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் நிறைவடைய நீண்ட காலமாகும். ஏா் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் முழுமையாக ஒப்படைப்பது வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும்’ என்று அவா் பதிலளித்தாா்.