தமிழகத்தில் தங்கநகை கடைகளுக்கு அடுத்து மக்களுக்கு தங்கம் என்றால் நியாபகம் வருவதுபனங்காட்டு படைக் கட்சி தலைவராக இருக்கும் ஹரி நாடார், தான். அவரின் உடல் முழுக்க கிலோ கணக்கில் நகைகளை அணிந்து வலம் வருபவர். மினி நடமாடும் தங்ககடை என சொல்வது வழக்கம். நடமாடும் நகைக்கடை போலவே வலம் வரும் ஹரிநாடாரையும் சர்ச்சைகளையும் எப்போதுமே பிரிக்க முடியாது. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இவர் மீது கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அளித்த மோசடி புகாரின் பேரில் திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரைப் பெங்களூர் போலீசார் கடந்த மே மாதம் கைதுசெய்து கர்நாடக சிறையில் அடைத்தனர்.
தற்போது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பஷீர் என்பவரும் இணைந்து நடத்தி வரும் ஈ.டி.எஸ் நிறுவனம் ஹரி நாடார் மீது புதிய புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்த நிறுவனம் அரபு நாடுகளுக்கு வாசனை மற்றும் பல சரக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இஸ்மாயிலின் செயலாளர் அப்துல் என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
புகாரில், ஈ.டி.எஸ் நிறுவன உரிமையாளர் இஸ்மாயிலுக்கு வங்கி ஒன்றில் 100 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக ஹரி நாடார் தெரிவித்துள்ளார். இதற்கு கமிஷனாக ரூ.1.50 கோடியை கேட்டுள்ளார் ஹரி நாடார். அதில் ரூ.1.25 கோடி ரூபாயை வங்கி மூலமும், ரூ.25 லட்சத்தை நேரடியாகவும், மார்ச் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கொடுத்துள்ளனர்.
ஹரி நாடார், இவர்களிடம் தன்னை “கேப்பிட்டல் யூபி இன்வெஸ்ட்மென்ட்” என்ற நிறுவனத்தின் ஆசியா நாடுகளுக்கான நிர்வாகி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். ஒருசில ஆவணங்களை அவர்களிடம் ஹரிநாடார் காட்டவும், உண்மை என நம்பி பணத்தை கொடுத்துள்ளனர்.
ஆனால், ரூ.100 கோடி கடன் பெற்றுத் தர எந்தவொரு நடவடிக்கையும் ஹரி நாடார் எடுக்கவில்லை.
கடன் குறித்து ஹரிநாடாரிடம் கேட்ட போது, தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறேன். தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் முடிந்த பிறகு கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். ஆனால் தேர்தல் முடிந்த பிறகும், கடன் வாங்கி தருவது குறித்து எந்தவொரு நடவடிக்கையையும் ஹரிநாடார் எடுக்கவில்லை.
எனவே கொடுத்த கமிஷன் பணத்தையாவது திருப்பிக் கேட்டபோது, அதற்கும் பதில் இல்லை. இந்த நிலையில், வேறு ஒரு பண மோசடி புகாரில் கர்நாடக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஹரி நாடார். இதனையடுத்து தங்களிடம் வாங்கிய பணத்தை பெற்று தர வேண்டும் என்று இஸ்மாயில் புகார் அளித்துள்ளார்.